மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

பிரான்சு உடன் இந்தியா  மேற்கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக பல்வேறு மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ரபேல் போர் விமான ஒப்பந்தங்களை கையாளும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. இந்திய ஆதாரங்கள் சட்டத்தின் 123 வது பிரிவின் படி அதனை தகுந்த அமைச்சகத்தின் அனுமதியின்றி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது.அனைத்தையும் விட நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது.

மேலும்  ரபேல் விவகாரத்தில் சட்ட விரோதமாக பெறப்பட்ட ஆவணங்கள் மீது உச்ச நீதிமன்ற ஆய்வு கூடாது எனவும் மத்திய அரசின் சார்பில் மத்திய அரசின் வழக்கறிஞர் கூறினார். மனுதாரர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன் வாதடும் போது அரசு தலைமை வழக்கறிஞர் கூறும் ஆவணங்கள் ஏற்கனவே பொது வெளிக்கு வந்து விட்டன. புலனாய்வு அமைப்புகளின் ஆவணங்களை தவிர மற்ற ஆவணங்கள் தனித்தன்மை வாய்ந்தவை அல்ல என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.

இந்த நிலையில் இது குறித்து  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு  தீர்ப்பு வழங்கியது. அதில் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் அனைத்து விதமான ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெறும். பத்திரிக்கைகளில் வெளியான ஆவணங்களும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். மேலும் ரபேல் வழக்கு தொடர்பான புதிய ஆவணங்களையும் தாக்கல் செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மறுஆய்வு மனு மீதான விசாரணை தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.