திருச்சியில் வெற்றி வாகை சூடப்போவது யார்?

திருச்சி மக்களவை தொகுதியானது தொகுதி மறுசீரமைப்பு பணிக்கு பிறகு ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அடைக்கலராஜ் நீண்ட வருடங்களாக எம்பியாக பதவி வகித்தது இந்த தொகுதியில்தான். இவர் 1984 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நான்கு மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார். கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாண சுந்தரமும் இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்று உள்ளார். கடைசியாக நடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் அதிமுக ஆனது இந்த தொகுதியை கைபற்றி உள்ளது.

2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பி. குமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சாருபாலா தொண்டைமானை விட 4335 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பி. குமார் 2,98,710 வாக்குகளும்,சாருபாலா தொண்டைமான் 2,94,375 வாக்குகளும் பெற்றனர்.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ப.குமார் 4,58,478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த அன்பழகன் 3,08,002 வாக்குகள் பெற்றார்.  திருச்சி தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசுரும், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் டாக்டர் இளங்கோவனும் அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமானும் போட்டியிடுகின்றனர்.

மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆனந்த ராஜா என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் வினோத் ராம் என்பவரும் போட்டியிடுகின்றனர். திருச்சி மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் திருச்சி மேற்கு,புதுக்கோட்டை, திருவெறும்பூர் ஆகி தொகுதிகள் திமுக வசமும், திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம்,கந்தர்வகோட்டை ஆகி தொகுதிகள் அதிமுக வசமும் உள்ளன.

திருச்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளதால் தொழிலாளர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இடதுசாரி கட்சிகளுக்கும் திருச்சி தொகுதியில் குறிப்பிடத்தகுந்த வாக்கு வங்கி உள்ளது. தற்போது அமமுக சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமான் ஏற்கனவே இரண்டு முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உடையவர்.2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நூலிழையில் வெற்றியை தவறவிட்டார். இந்த முறை நடைபெறும் தேர்தலில் அமமுகவில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமானுக்கும், காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசுருக்கும் கடுமையான போட்டி நிலவும் என தெரிகிறது.