தமிழ் திரையுலகின் ஒப்பற்ற நாயகன் சியான் விக்ரம்

தற்போதைய தமிழ் திரையுலகில் தனது நடிப்பாற்றல் மூலம் முன்னிலை வகிக்கும் நடிகர்களில் முதன்மையானவர். ஏழு பிலிம்பேர் விருதுகள், சிறந்த நடிகருக்கான தேசிய விருது, தமிழ் மாநில விருதுகள் உட்பட பல விருதுகள் வென்ற முடிசூடா மன்னன் சியான் விக்ரமின் பிறந்த தினம் இன்று.
விக்ரம்  சென்னையில் ஏப்ரல் 17 ஆம் தேதி 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் கென்னடி ஆகும். ஏற்காட்டில் உள்ள மாண்டபோர்ட் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த விக்ரம் லயோலா கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்தார்.


விக்ரம் 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். விக்ரம் தனது வணிக மேலாண்மை படிப்பின் இறுதி ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.இவர் நடிக்க தொடங்கி 9 வருடங்களில் வெளிவந்த படங்கள் எதுவும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெரியதாக ஈர்க்கவில்லை.

விக்ரம் பல முன்னணி கதாநாயகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்து உள்ளார். அஜித்திற்கு அமராவதி, பிரபு தேவாவிற்கு காதலன்,மின்சார கனவு அப்பாஸ்ற்கு காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படங்களும் இதில் அடக்கம்.

1999 ஆம் ஆண்டு பாலா மற்றும் விக்ரமின் கடுமையான நீண்ட போராட்டத்துக்கு பின் வெளிவந்த சேது திரைப்படம் தமிழ் திரையுலகில் நீண்ட வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலராக அமைந்தது. படம் வெளிவந்து ஒரு வாரத்திற்கு பின் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கபட்டது. தேசிய விருது, சில்வர் லோட்டஸ் விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தது இத்திரைப்படம்.

அதன் பின் 2001 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த தில் திரைப்படம் விக்ரமை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக அடையாளபடுத்தியது. அதே ஆண்டு வெளிவந்த காசி திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றி பெறாவிட்டாலும் விக்ரமின் நடிப்பாற்றலுக்கு தீனி போடும் விதமாக அமைந்தது.

2002 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த ஜெமினி திரைப்படம் விக்ரமின் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடபட்டது. இந்த படத்தில் பரத்வாஜ் இசையில் விக்ரம் பாடிய ஓ போடு பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அதே ஆண்டில் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த சாமுராய் திரைப்படமும் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.

2003 ஆம் ஆண்டு விக்ரமின் திரை வாழ்வில் பொற்காலமாக அமைந்தது. இந்த ஆண்டில் விக்ரம் நடித்த நான்கு படங்களில் தூள், சாமி, பிதாமகன் என மூன்று படங்கள் மெகா ஹிட் அடித்தன. இதில் அடுத்தடுத்து வெளிவந்த  தூள் மற்றும் சாமி வசூல் ரீதியில் பல சாதனைகளை படைத்தது. பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை விக்ரம் பெற்றார்.

2005 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த  அந்தியன் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விக்ரம் நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி இருந்தார்.

அதன் பின் விக்ரம் சினிமா வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தார். நடிப்பில் கவனம் செலுத்திய விக்ரம் கதையை தேர்வு செய்வதில் கோட்டை விட்டார். இருந்த போதிலும் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இராவணன், 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தெய்வதிருமகள் படங்களில் விக்ரமின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஐ திரைப்படத்தில் விக்ரம் சிறப்பான  நடிப்பை வெளிப்படுத்தி இருந்த போதிலும் திரைக்கதை சொதப்பலால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.


விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தயுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.


தற்போது விக்ரம் நடித்து வரும் கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் , ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் கடராம் கொண்டான் திரைப்படங்கள் திரைப்படங்கள் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. தமிழ் நேரலையின் சார்பாக நடிகர் சியான் விக்ரமிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்…