கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்
தமிழ்நேரலை
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்ஐ தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி வீரர் இமான் உல் ஹாக் 10 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பேக்கர் ஜாமன் 31 ரன்களில் குல்தீப் பந்து வீச்சில் அவுட் ஆனார். நட்சத்திர வீரர் பாபர் அசாம் 9 ரன்களில் சாஹலிடம் ரன் அவுட் ஆனார். அதன் பின் இணைந்த மாலிக், சர்ப்ராஸ் ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர் கொண்டது.107 ரன்கள் எடுத்து நேர்த்தியாக விளையாடி கொண்டு இருந்த இந்த ஜோடியை குல்தீப் பிரித்தார். சர்ப்ராஸ் 44 ரன்களில் ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய மாலிக் 78 ரன்களில் பும்ரா பந்து வீச்சில் தோனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பின் சிறிது நேரம் அதிரடி காட்டிய ஆசிப் அலி 30 ரன்களில சாஹல் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சஹால்,குல்தீப், பும்ரா தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரோஹித் மற்றும் தவான் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய ஷார்ட்பிட்ச் வகை பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு இந்திய வீரர்கள் ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங் திறன் மிகவும் மந்தமாக இருந்தது. ரோஹித் சர்மாவிற்கு இரண்டு கேட்ச்களை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். சிறப்பான ஆட்ட திறனை வெளிப்படுத்திய தவான் தனது 15வது சதத்தை அடித்தார். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு விளையாடிய ரோஹித் ஷர்மாவும் தனது 19வது சதத்தை அடித்தார்.16 பவுண்டரிகள்,2 சிக்ஸர்களுடன் 100 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து விளையாடி கொண்டு இருந்த தவான் தனது கவன குறைவால் ரன் அவுட் ஆனார். பின் களமிறங்கிய ராயுடு 12 ரன்கள் எடுத்து வெற்றிக்கான இலக்கை அடைய செய்தார். இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடைசி வரை களத்தில் நின்ற ரோஹித் ஷர்மா 7 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 111 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் பவுலர்கள் கடைசி வரை ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பான ஆட்ட திறனை வெளிபடுத்திய ஷகிர் தவான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.