வெஸ்ட்இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது ஒரு நாள் போட்டியானது ஸ்ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 418 ரன்கள் குவித்தது.
ருத்ர தாண்டவம் ஆடிய இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 12 சிக்ஸர்கள்,13 பவுண்டரிகள் உதவியுடன் 77 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 88 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து காட்ரெள் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஹேலஸ் 82 ரன்களும், பேட்ஸ்டோ 56 ரன்களும் குவித்தனர்.
அடுத்து 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கம் முதலே அடித்து ஆடியது. அந்த அணியின் கிறிஸ் கெய்ல் 97 பந்துகளில் 14 சிக்ஸர்கள்,11 பவுண்டரிகளுடன் 162 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
டேரன் பிராவோ 61 ரன்கள் எடுத்து மார்க் உட் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். கடைசி மூன்று ஓவர்களில் 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 29 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி அடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நர்ஸ் 43 ரன்களிலும் பிரத்வெயிட் 50 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறியது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ஓவர்களில் 389 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் பெற்றார். இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் 24 சிக்ஸர்களும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 22 சிக்ஸர்களும் அடித்தது குறிப்பிடதக்கது.