8 வழி சாலைக்கு நிலம் பறிக்கத் துடிப்பதா?

உயர்நீதிமன்ற ஆணையை மீறி 8 வழி
சாலைக்கு நிலம் பறிக்கத் துடிப்பதா?

சென்னை – சேலம் இடையிலான 8 வழி சாலைகுறித்து பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள் தனது முகநூலில் அறிக்கை விட்டுள்ளார்

சென்னை – சேலம் இடையிலான 277 கி.மீ நீளப் பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப் படுத்துவதற்கான அறிவிக்கைகளை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. 8 வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

பசுமைவழிச் சாலைத் திட்டம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படவுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை மத்திய அரசு தனித்தனியாக வெளியிட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.28 கி.மீ நீளத்திற்கு 8 வழிச் சாலை அமைப்பதற்கான 39 கிராமங்களைச் சேர்ந்த 1510 பேரிடமிருந்து 1125 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தப் போவதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாவட்டங்களில் நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாகவும் அறிவிக்கை வெளியிட்டுள்ள மத்திய அரசு, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அதை 21 நாட்களில் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மிகக்கடுமையான போராட்டங்களைச் சந்தித்தத் திட்டங்களில் 8 வழிச்சாலைத் திட்டம் மிகவும் முக்கியமானதாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்பதால், இதைக் கைவிடக் கோரி பா.ம.க. ஏராளமான போராட்டங்களை நடத்தியது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் பல உழவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வலியுறுத்திச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பசுமைவழிச் சாலைக்காகக் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களிலிருந்து அவற்றின் உரிமையாளர்களை வெளியேற்றத் தடை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, பசுமைவழிச் சாலைத் திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் வரை நிலங்களைக் கையகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதிமொழி அளித்திருந்தது.

உயர்நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழியை மீறி நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு அவசர, அவசரமாக வெளியிட்டது ஏன்? பசுமைவழிச் சாலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அத்தகைய சூழலில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, உயர்நீதிமன்ற அனுமதி பெற்று அறிவிக்கை வெளியிடுவது தான் சரியானதாக இருக்கும். அவ்வாறு செய்யாமல் மத்திய அரசு தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டதில் இருந்தே, ஏதோ சில தனியார் நிறுவனங்களின் நலனுக்காகப் பசுமைவழிச் சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

பசுமைவழிச் சாலைக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய வாதமே, சென்னை- சேலம் இடையிலான சாலைக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நிலங்களை அளவீடு செய்யக் கூடாது என்பது தான். அதுமட்டுமின்றி, எந்தவொரு உட்கட்டமைப்பு திட்டமாக இருந்தாலும் சுற்றுச்சுழல் அனுமதி பெறாமல் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கக் கூடாது என்று ‘வேலு Vs தமிழ்நாடு’ அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நிலங்களை அளவீடு செய்வது உள்ளிட்ட எந்தவிதமான நிலம் எடுப்பு பணிகளையும் அரசு மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தெளிவாகக் கூறியுள்ள நிலையில், சட்டவிரோதமாகச் செய்யப்பட்ட நில அளவீட்டின் அடிப்படையில் நிலங்களைக் கையகப்படுத்துவது எந்த வகையில் நியாயமானதாக இருக்கும். இது நீதிமன்றங்களை அவமதிக்கும் செயலாக அமையாதா?

இவற்றுக்கெல்லாம் மேலாக, சென்னை-சேலம் சாலைக்காகக் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களிலிருந்து அவற்றின் உரிமையாளர்களை வெளியேற்றக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு காரணமே, நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளால் மக்களிடம் நிலவிய அச்சத்தையும், பதற்றத்தையும் போக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், மத்திய அரசு இப்போது வெளியிட்டுள்ள நில எடுப்பு அறிவிக்கையால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடையே மீண்டும் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

இதை உணர்ந்து நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிக்கைகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். சென்னை & சேலம் இடையிலான 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். அது மட்டும் தான் மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *