ஏழை மக்களின் ஊதிய பாக்கியை வழங்க அரசு மறுப்பதா?

பமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முற்றிலுமாக செலவாகி விட்ட நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டது. மத்திய அரசின் இந்த மனிதநேயமற்ற நிலைப்பாடு கண்டிக்கத்தக்கதாகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக, நடப்பாண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.55,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அத்துடன் வேறு வழிகளில் கிடைத்த நிதியையும் சேர்த்து இத்திட்டத்திற்கு ரூ.59,032 கோடி கிடைத்தது. இதில் 2018-ஆம் ஆண்டு திசம்பர் 31-ஆம் தேதி வரை ரூ.58,701 கோடி செலவழிக்கப்பட்டு விட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தின் ரூ.331 கோடி மட்டுமே இருப்பு இருந்தது. அதைத்கொண்டு அடுத்த 3 மாதங்களுக்கு வேலை வழங்க முடியாது என்பதால், இத்திட்டத்திற்காக கூடுதலாக நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தியிருந்தேன்.

அதன்படி மத்திய அரசு கடந்த வாரம் ரூ.6084 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால், ஆந்திரம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே செய்யப்பட்ட வேலைகளுக்காக ரூ.4101 கோடி ஊதிய நிலுவை இருந்தது. மத்திய அரசு ஒதுக்கிய கூடுதல் நிதியிலிருந்து ஊதிய பாக்கி வழங்கப்பட்டது போக ரூ.2000 கோடிக்கும் குறைவான தொகை தான் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்திடம் உள்ளது. இந்த நிதியும் ஜனவரி 31 வரை செய்யப்படும் பணிகளுக்கே போதுமானதாக இருக்காது. ஜனவரி வரையிலான கணக்குகள் முடிக்கப்படும் போது பல நூறு கோடி ஊதிய நிலுவை இருக்கும்.

வழக்கமாக ஜனவரி மாதத்துடன் வேளாண்மை சார்ந்த பணிகள் முடிவடைந்து விடும் என்பதால், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தான் ஊரகப்பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு தேவைப்படும். ஆனால், இத்திட்டத்திற்காக முதலில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நிதி என மொத்தம் ரூ. 65 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக செலவிடப்பட்டு விட்ட நிலையில், அடுத்த இரு மாதங்களுக்கு செலவழிக்க மத்திய ஊரக வளர்ச்சித்துறையிடம் நிதி இல்லை. அதனால், அடுத்த இரு மாதங்களுக்கு வழங்கப்படும் வேலைகளுக்கான ஊதியம், இதுவரை வழங்கப்பட்ட வேலைகளுக்கான ஊதிய பாக்கி ஆகியவற்றை மாநில அரசுகளே வழங்க வேண்டும் என்றும், அடுத்த ஆண்டுக்கான நிதி கிடைத்த பிறகு மாநில அரசுகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அறிவித்திருக்கிறது. இது இரு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

முதலாவதாக தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்திடமும் இத்திட்டத்திற்காக ஒதுக்க நிதி இல்லை. அதனால், ஊரக ஏழை மக்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகலாம்; ஒருவேளை வேலை வழங்கப்பட்டாலும், அதற்கான ஊதியம் வழங்கப்படாது. இரண்டாவதாக, அடுத்த இரு மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஊதியம், அடுத்த ஆண்டிற்கான நிதியிலிருந்து வழங்கப்பட்டால், அடுத்த ஆண்டில் இத்திட்டத்திற்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும் ஆபத்துள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்காததால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படும். நடப்பாண்டில் வேலை உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.4,155.20.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மாநில அரசின் பங்களிப்பையும் சேர்த்து இந்தத் திட்டத்திற்கான நிதி ரூ.4,282.08 கோடியாக உயர்ந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்று வரையிலான 10 மாத காலத்தில் ரூ.4,397.55 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இது இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 102.70 விழுக்காடு ஆகும். அதாவது இத்திட்டத்தின்படி தமிழகத்திற்கு வழங்கப்பட்ட தொகையை விட ரூ.115.48 கோடியை தமிழக அரசு கூடுதலாக செலவழித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 70.27 லட்சம் பேருக்கு இந்தத் திட்டத்தின்கீழ் வேலை வழங்கப்படுகிறது. எனினும், இவர்களில் 24,509 குடும்பங்களுக்கு மட்டும் தான் 100 நாட்கள் வேலை தரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 36.09 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. இது இத்திட்டப்படி வழங்கப்பட வேண்டிய வேலைவாய்ப்பு இலக்கில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான். தமிழ்நாட்டில் இத்திட்டத்தின்படி தொடங்கப்பட்ட 8.12 லட்சம் பணிகளில் 4.43 லட்சம் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 3.69 லட்சம் பணிகளை நிறைவு செய்ய குறைந்தது ரூ.3000 கோடி தேவைப்படுகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு 150 நாட்களுக்கு வேலை வழங்குவதாக அரசு உறுதியளித்துள்ளதால் அதற்கும் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. இந்நிதி வழங்கப்படாவிட்டால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு குறைந்தபட்சம் ரூ.3000 கோடி உட்பட மொத்தம் ரூ.10,000 கோடி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

இளைஞர்கள் குறித்து குடியரசுதலைவர்

இளைஞர் நமது நாட்டின் மிகப்பெரிய பலம். உலகிலேயே மிக அதிகமான இளைஞர்கள் இந்தியாவில் உள்ளனர். எனது அரசாங்கத்தின் கொள்கை முடிவு 21 ஆம் நூற்றாண்டின் இளம் இந்தியர்களின் அபிலாஷைகளாலும், கனவுகளாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறது என நமது நாட்டின் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார்.

மரம் வளர்த்தால் மதிப்பெண்கள்

அடுத்த கல்வியாண்டு முதல் மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு பாடத்திற்கும் சேர்த்து மொத்தம் 12 மதிப்பெண்கள்  வழங்கபடும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

தற்போதைய தமிழக வாக்காளர்கள் விவரம்

தமிழகத்தில் 13,96,326 வாக்காளர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன.

5,62,937 வாக்காளர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 2,19,392 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

2019ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில் மொத்தம் 5.91 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2.92 கோடி பேர்  ஆண் வாக்காளர்கள் எனவும் 2.98 கோடி பேர் பெண் வாக்காளர்கள் எனவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள சென்னைக்குதான் பிற பகுதி மக்களும் வர வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

சட்ட விரோத சொத்துக்கள் குறித்து தமிழிசை சவுந்தரராஜன்

மோடி அரசாங்கத்தின் கீழ் கறுப்பு பணம் கொடுப்பவர்களுக்குப் பெரும் அடியாகும். 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் ரூ. 9,000 கோடி சட்டவிரோத சொத்துக்களை இணைக்க முடிந்தது.

அதேசமயம் அதே மத்திய புலனாய்வு நிறுவனம் 3 ஆண்டுகளில் 33,563 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களை இணைத்து உள்ளது என தமிழ்நாடு பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கிராமங்களில் இணைய வசதிகள்

2014 ஆம் ஆண்டில், 59 கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே டிஜிட்டல் இணைப்புக்கு அணுகல் கிடைத்தது. இன்று, ஒரு லட்சத்து பதினாறு ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சுமார் 40 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் Wi-Fi ஹாட்ஸ்பாட்களில் நிறுவப்பட்டுள்ளன என இந்திய நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு குறித்து பொன் ராதாகிருஷ்ணன்

எந்தவொரு அரசும் ஒரு தைரியமான முடிவை எடுக்க தைரியமாக இல்லை.மோடி அரசு ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியதைப் போன்றது. அது வழிவகுத்தது தெரியாத வருமானம், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள், வைப்புத்தொகை, மற்றும் ஒவ்வொரு ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டது  என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாட்டில் எந்தப் பகுதியிலும் புதிய பொறியியல் கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை என அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் அனில் சஹாராபத்தே தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து வருவதாகவும் இதனால் அரசு பொறியியல் கல்லூரிகளில் 40 ஆயிரம் சீட்கள் குறைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

டிரெண்ட் பவுல்ட வேகத்தில் விழுந்தது இந்திய அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 4 வது ஒரு நாள் போட்டியானது இன்று ஹாமில்டனில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் களம் இறங்கியது. ஷுப்மன் கில் தன் முதல் சர்வதேச போட்டியில் களம் இறங்கினார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வலிமையான பேட்டிங் வரிசை  டிரெண்ட் பவுல்ட், கிராண்ட்ஹோம்ன் சிறப்பான பந்து வீச்சில் ஆட்டம் கண்டது.

இந்திய அணி 31 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சாகள் 18 ரன்களும், ஹர்திக் பாண்டியா 16 ரன்களும் எடுத்தனர். இந்திய வீரர்கள் அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் டக் அவுட்டில் வெளியேறினர்.

10 ஓவர்கள் பந்து வீசிய நியூசிலாந்து வீரர் பவுல்ட் 21 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார். இதில் 4 ஓவர்கள் மெய்டன்களாக அமைந்தன. மற்றொரு வீரர் கிராண்ட்ஹோம் 26 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து எளிதாக வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் 30 ரன்களுடனும், ரோஸ் டெய்லர் 37 ரன்களிலும் களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.

இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்களை கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட பெற்றார்.