சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, செய்தியாளர்களிடம் பேசும் போது, கடந்தாண்டு முதல் முறையாக பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டதாகவும், இந்த ஆண்டு அதே போல் நடைபெறுமா என்பது குறித்தும் உயர்கல்வித்துறை தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தலைவர் பதவியிலிருந்து தான் விலகி விட்டதாகவும், அதனை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதா என்பதை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடத்தினை அதிகரிப்பதில் எனது பணி எதுவும் இல்லை. இதுகுறித்த தகவல்கள் எதுவும் தன்னிடம் இல்லை எனக் குறிப்பிட்டவர், தொழில்நுட்பக் கல்வித்துறை மூலம் கலந்தாய்வு நடைபெறுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, ’அது பற்றி தனக்குத் தெரியாது. ஆன்லைனில் கலந்தாய்வை சரியாகவும் சுமூகமாகவும் நடத்தவே பல்கலைகழகம் விரும்புகிறது’ எனத் தெரிவித்தார்.
