பிரச்னையைச் அணுகக் கற்றுக்கொள்

பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்ளுக்கள்

ஒரு சமயம் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் என்ற இடத்தில், சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 29 வயது. அங்கு அவரை அறிஞர்கள், உயர் அதிகாரிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள், பண்டிதர்கள், பாமரர்கள் என்று சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள பலர் சந்தித்து உரையாடினார்கள். அவ்விதம் விவேகானந்தரைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்தவர்களுக்கிடையில், அவ்வப்போது கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இந்த உரையாடல்களின்போது சிலர் நியாயமில்லாத ஏதேனும் ஒரு கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று முரட்டுத்தனமாகப் பேசினார்கள். சிலர் தங்கள் கருத்துத் தவறு என்று தெரிந்த பிறகும், அதுதான் சரி என்று விவாதித்தார்கள். அவ்விதம் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு நாள் மனம்போன போக்கில் பண்டிதர்கள் சிலர், தங்களுக்குள் காரசாரமாக விவாதம் செய்துகொண்டிருந்தார்கள்.

அவர்களுக்குப் படிப்பினை தரும் வகையில் சுவாமி விவேகானந்தர் பின்வரும் ஒரு கதையைக் கூறினார்:

ஓர் அரசன் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது! அவர்களை எப்படி எதிர்கொள்வது? இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டான். அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும் என்றார்கள்.

தச்சர்களோ, மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். எனவே மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதைக் கேட்ட சக்கிலியர், இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை என்றனர். அப்போது கொல்லர்கள், நீங்கள் சொல்வது எதுவுமே சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும் என்று கூக்குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், நாம் பகையரசனிடம் நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பதுதான் நியாயமாகும் என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று வாதிட்டார்கள். கடைசியாக அரசாங்கப் பூஜாரிகள் வந்தார்கள். அவர்கள் அதுவரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். அவர்கள், நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்போல் பேசுகிறீர்கள்! முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது! என்றார்கள்.

 இப்படியெல்லாம் அவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில் வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்புமின்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கினான். நம்மில் பலர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம் – என்று சுவாமி விவேகானந்தர் கதையைச் சொல்லி முடித்தார். உண்மை எது? என்று நாம் சரியாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, மற்றவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவது நல்லது. ஆனால் தெரிந்து வேண்டுமென்றே வீண் வாக்குவாதங்களிலும், வீம்புப் பேச்சுக்களிலும் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல. ஒரு பிரச்னை என்று வரும்போது, அதைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான ஒரு வழியைக் கண்டறிந்து செயல்படுத்தி பிரச்னையைத் தீர்ப்பதுதான் – வெற்றி பெறுவதுதான் அறிவுடைமையாகும். இதற்கு மாறாகப் புரிந்துகொள்ளாமல் விவாதம் செய்வது, திக்குத் தெரியாத காட்டில் நுழைவது போன்றது. கொள்கைவெறி அழிவுக்குக் காரணமாக அமையுமே தவிர, ஒருபோதும் ஆக்கபூர்வமான எந்த நன்மையையும் தராது.
 ———————-சுவாமி விவேகானந்தர்——————————————————

விவசாயிகள் துரத்தியடிப்பு

மின்கோபுரங்கள் அமைக்க உழவர்களை
துரத்தியடித்து விட்டு நிலத்தைப் பறிப்பதா?

விவசாய நிலங்களில் மின்கோபுரகள் அமைத்தற்கு பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள் தனது முகநூலில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் வேளாண் விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, அவர்களின் நிலங்களை அளவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். உழவர்களை வாழ வைக்க வேண்டிய அரசு, காவல்துறை மூலமாக விளைநிலங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்தேவையில் பெரும்பகுதி மத்தியத் தொகுப்பிலிருந்தும், பிற மாநிலங்களில் உள்ள தனியார் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்தும் தான் பெறப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தைக் கொண்டு வருவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டம் புகழூர் முதல் ராய்கர், திருவலம், மைவாடி, அரசூர், இடையார்பாளையம், திருச்சூர் ஆகிய இடங்களுக்குப் பவர் கிரிட் நிறுவனத்தின் மூலமாகவும், அரசூர் முதல் ஈங்கூர் வரை, மைவாடி இணைப்புத் திட்டம், இராசிபாளையம் முதல் பாலவாடி வரை ஆகிய இடங்களுக்குத் தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தின் சார்பிலும் மொத்தம் 16 உயரழுத்த மின்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த மின்பாதை திட்டங்களின் பெரும் பகுதி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளும், பாதிப்புகளும் எல்லையில்லாதவை. உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த நிலங்களை எதற்காகவும் விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்களை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் 13 மாவட்ட விவசாயிகளும் ஒன்று சேர்ந்து ‘உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் காரணமாக மின்பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் செயல்படுத்தப்படும் இந்தியத் தந்தி சட்டத்தின்படி, மின்பாதை அமைக்கும் பணிக்கு உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், திட்டப்பணிகளைத் தொடர முடியாது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று தான், இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் உழவர்களின் நிலங்களில் நுழைய முடியும் என்பது விதியாகும்.

ஆனால், இவ்விதியை மதிக்காத பவர் கிரிட் நிறுவனம் கோவை மாவட்டத்தில் காவல்துறை உதவியுடன் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, நிலங்களை அளந்து பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது சட்ட விரோதமாகும். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் உழவர் அமைப்புகளுக்குமிடையே ஏற்கனவே இரு கட்டப் பேச்சுக்கள் நடைபெற்று முடிந்துள்ளன. மூன்றாம் கட்ட பேச்சுக்கள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பவர் கிரிட் நிறுவனம் செய்துள்ள அத்துமீறல் மன்னிக்க முடியாதது. இதைக் கண்டித்தும், பணிகளைக் கைவிட வலியுறுத்தியும் கோவை சுல்தான்பேட்டையில் விவசாயிகள் தொடர் உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர்.

உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைப்பதில் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் திட்டமிட்டு துரோகம் இழைக்கப்படுகிறது. இத்தகைய மின்கோபுரத் திட்டங்கள் கேரளம் வழியாகவும் செயல்படுத்தப்படுகின்றன. அங்கெல்லாம் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் மின்சாரக் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இந்தப் பாதைகள் சென்னை, சேலம், மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களைக் கடந்து செல்லும்போது கூடப் பூமிக்கு அடியில் தான் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. இதேபோல், ஒட்டுமொத்த மின்பாதைகளையும் சாலையோரத்தில் பூமிக்கு அடியில் கேபிள்களைப் புதைத்துச் செயல்படுத்த வேண்டும்; அதன் மூலம் உழவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராக
பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு!உயர்நீதிமன்ற உத்தரவை வைகோ அவர்கள் வரவேற்று முகநூலில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராக இருந்த
பொன்.மாணிக்கவேல் அவர்கள் இன்றுடன் பணி ஒய்வு பெறுக்கிறார். ஆனால் தற்போது உயர்நீதிமன்ற அவரது பணியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

இந்த உயர்நீதிமன்ற உத்தரவை வைகோ அவர்கள் வரவேற்றுள்ளார்.

தமிழகத்தின் தொன்மை, கலாச்சாரம், பண்பாட்டை உலகுக்குப் பறைசாற்றும் சிலைகள் தமிழகத்தின் ஆலயங்கள் எங்கும் உள்ளன. தமிழக சிலைகளுக்கு நிகரான எழிலும், நுட்ப வேலைப்பாடுகளும் கொண்ட சிலைகள் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.

அதனால்தான் 1982-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள 9 இராமர் கோவில்களின் மூலஸ்தான சிலைகளை அமெரிக்க நாட்டில் நடைபெற்ற இந்தியத் திருவிழாவுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்த நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் நான் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தேன். பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் என் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மூத்த தலைவர் கமலபதி திரிபாதி என் இருக்கைக்கே வந்து தோளைத் தட்டிக்கொடுத்து என்னை வெகுவாகப் பாராட்டினார். என்னுடைய முயற்சியால் அந்தச் சிலைகள் அமெரிக்காவுக்கு அனுப்புவது தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆலயங்களில் உள்ள சிலைகளை இறைவனின் வடிவமாகவே மக்கள் வழிபடுகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களின் சிலைகள் கடந்த பல ஆண்டுகளில் திருடப்பட்டு, உள்நாட்டிலும், வெளி நாடுகளுக்கும் விற்கப்பட்டு வந்தன. வெளிநாடுகளின் அருங்காட்சியகங்களுக்கும் போய்ச் சேர்ந்தன.

2012-ஆம் ஆண்டு, காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவரது கடுமையான முயற்சியால் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 1146 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 17 சிலைகளைப் பன்நாட்டுக் காவல்துறை உதவியுடன் தமிழகத்துக்கு மீட்டுக் கொண்டுவந்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் 45 வழக்குகளைப் பதிவு செய்து, 47 குற்றவாளிகளைப் பொன்.மாணிக்கவேல் கைது செய்துள்ளார்.

புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவிலில் 50 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ராஜராஜ சோழன், செம்பியன்மாதேவி சிலைகளை மீட்டுக் கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு.

கலைப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி, சிலை கடத்தலில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளைக் கைது செய்தார்.

சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கச் சி.பி.ஐ.க்கு தமிழக அரசு மாற்றியதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு இரத்து செய்து, பொன்.மாணிக்கவேல் அவர்களே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவாரென ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்துத் தமிழகக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற ஆணையை அங்கீகரித்தது.

இந்தச் சூழ்நிலையில், இன்று 30.11.2018 ஆம் நாள் அன்று ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் அவர்கள் பணி ஓய்வு பெறுகிறார் என்பதால், நேற்று காவல்துறையினர் பிரிவு உபச்சார பாராட்டு விழா நடத்தினர். அதில் அனைவர் மனதையும் நெகிழச் செய்யும் வகையில் பொன்.மாணிக்கவேல் நன்றியுரை ஆற்றினார்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாகக் காவல்துறை அதிகாரி அபாய்குமார் சிங் அவர்களைத் தமிழக அரசு நியமித்தது.

திடுக்கிடும் திருப்பமாக, இன்ப அதிர்ச்சியாகச் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் மகாதேவன், நீதியரசர் ஆதிகேசவலு அமர்வு தமிழக அரசின் ஆணையை இரத்து செய்து பொன்.மாணிக்கவேல் அவர்களே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு ஆணை பிறப்பித்துள்ளது. இது வரவேற்கத் தக்க மகிழ்ச்சியூட்டும் நடவடிக்கையாகும்.

கடந்த முறை உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று மூக்கறுபட்டதை நினைவில் வைத்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்று எண்ணுகிறேன்.

வரலாற்று நாயகன் பொன்மாணிக்கவேல்

பொன்மாணிக்கவேல் இந்தப் பெயரை கேட்டாலே அனைவருக்கும் ஒரு பரபரப்பு என்ன அதிரடி செய்தியாக இருக்கும் எனப் பொதுவான எதிர்பார்ப்பு. இளைஞர்களுக்கு உந்து சக்தி, நேர்மைவாதிகளுக்கு உதாரணம், திருடர்களுக்குத் தேள் கொட்டியது போல் உணர்வு, அதிகார திருடர்களுக்கு ஒரு பாடம்.

இவர் சாதித்தது நேர்மை, உண்மை, துணிச்சல். அவரிடம் எதிர்பார்க்க முடியாதது எவரிடமும் வளைந்து கொடுக்காத தன்மை வரலாற்றுப் பக்கத்தில் பதிக்கப்படும் பெயர், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டு.

ஐஜி பொன் மாணிக்கவேல் இவர் பிறந்த ஆண்டு 1958 இவரின் பொழுதுபோக்குப் புத்தகம் படிப்பது. காவல்துறை என்றாலே முகம் சுழிக்கும் இந்தக் காலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளைப் போராடி மீட்டுள்ளார் ஒரு உன்னத மனிதர்.

நம் வீட்டில் ஏதாவது ஒரு புதையல் கிடைத்தாலே அதை அரசிடம் சேர்க்க மானம் வராத நமக்குத் தமிழகக் காவல் துறையில் உயர்ந்த பதவியில் இருக்கும் இவர் தமிழகத்திலிருந்து உலகம் முழுவதும் கடத்தப்பட்ட விலை மதிப்பில்லாத கடவுள் சிலைகளை மீட்டு அதை அரசிடமே சேர்த்துள்ளார். என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
இவரின் உண்மைகள்:
நேர்மையும், உண்மையும் நிறைந்த பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தொடர்பாகப் பதியப்பட்டுள்ள சுமார் 531 வழக்குகளை விசாரித்து வந்துள்ளார் என்பது தெரியுமா!

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் பொன் மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றமே உத்தரவிட்டதால் அன்று முதல் இவர் நீதிமன்றம் நியமித்த துப்பறிவாளன் என்று போற்றப்படுகிறார்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான நடராஜர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திலிருந்து இவர் மீட்டதை இந்தியாவிற்கு வந்தபோது பிரதமர் மோடி இடம் ஒப்படைத்தார்.

பணத்தையும் புகழையும் விரும்பாத நேர்மையான துணிச்சல் மிக்கப் போலீஸ் ஆபீஸர் ஆகவே வலம் வருகிறார்.

சாதாரண இன்ஸ்பெக்டராகப் பணியை ஆரம்பித்து இரயில்வே ஐ.ஜி, கூடுதல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி என்பதோடு இல்லாமல் பல நீதிபதிகளிடம் பாராட்டையும். பொதுமக்களிடம் ஏகோபித்த நம்பிக்கையும், வரவேற்பையும் பெற்றுள்ளார்.

தனக்குக் கீழ் பணிபுரிபவர்களை அடிமைகளாக நினைக்காமல் சிறப்பாகப் பணியாற்றும் அனைவரையும் பொது இடத்தில் பாராட்டி பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்துவது என்பது இவருக்கே உரித்தான நற்பண்பாகும்.

சக காவல்துறையினர் இவரை மிகவும் கறார் பேர்வழி என்று நினைக்கிறார்கள்.
தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி யாகப் பொறுப்பு வகிக்கும் பொன்மாணிக்கவேல் ரயில்வே ஐ.ஜி யாகவும பணியாற்றி வருகிறார். இதற்கு முன் இவர் வகித்த பொறுப்புகளிலும் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்தார்.

இவர் எஸ்.பி-யாக இருந்த காலகட்டத்தில் காவல் நிலையங்களில் பொதுமக்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் நாற்காலியில் உட்கார சொல்லி பேச வேண்டும் எனக் கண்டிப்புடன் உத்தரவு போட்டார்.

இவர் தமிழகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி யாகவும் நான்கரை வருடங்கள் இருந்தார். இவர் தலைமையிலான டீம் தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டது. சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கிறது.

சிலை கடத்தல் பிரிவில் 33 வழக்குகள் தமிழகம் முழுவதும் 455 வழக்குகளிலும் பதிவாகி உள்ள குற்றவாளிகளை விரைவாகக் கண்டு பிடித்து வழக்குகளைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பதிலேயே தீவிரமாகக் கவனம் செலுத்தினார்.

தமிழ்நாட்டில் இதற்கு முன் வேறு எந்த ஒரு காவல்துறை அதிகரிக்கும் இந்த அளவுக்கு நெகிழ்ச்சியான பாராட்டுக்கள் குவிந்ததில்லை. பாராட்டுகளோடு மட்டுமல்லாமல் பலர் உணர்ச்சிபூர்வமாக நன்றியும் தெரிவித்தார்கள்.

அப்படிப்பட்ட இந்த மாமனிதனின் பதவிக்காலம் நிறைவடைகின்றது. இவர் இன்று(30-11-2018) சென்னை அயனாவரத்தில் ரயில்வே காவல்துறை சார்பில் இவருக்குப் பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது அதில் கலந்து கொண்டார்.

ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர் தன் போலீஸ் பணியில் சேர்ந்த ஆண்டு 1989 அன்று முதல் இன்று வரை அவரின் நேர்மையும், கண்ணியமும் மக்களின் ஈர்ப்பும், நீதியும் பனியில் உள்ள ஈடுபாடும் தான் இவரின் உயர்வுக்குக் காரணமாகும்.
இவரது வாழ்க்கையும், பணி ஈடுபாட்டையும் படமாகக் காட்சி படுத்தி உள்ளனர்.

நேர்மையான ஒரு தலைவரை நியமிக்கவும்-ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 128 நாட்கள் ஆன பிறகு, “பவர்” இல்லாத லோக் அயுக்தா சட்டத்திற்கு அ.தி.மு.க அரசு இப்போது “பல்” இல்லாத விதிகளை உருவாக்கியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடிப்படை நோக்கத்தையே உருக்குலைத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், 54 மாதங்கள் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்காமல் தூங்கியது. பிறகு உச்சநீதிமன்றம் அரசின் தலையில் ஓங்கிக் “குட்டு” வைத்து, கெடு விதித்த பிறகு வேறு வழியில்லாமல் ஊழலை ஒழிப்பதற்கு எந்த ஒரு வலுவான அதிகாரமும் இல்லாத லோக் அயுக்தா மசோதாவை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் பங்கேற்று, லோக் அயுக்தா மசோதா எத்தகையை உயிரற்ற வெறும் “எலும்புக்கூடாக” இருக்கிறது என்பதை எல்லாம் விளக்கிப் பேசி மசோதாவை பேரவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தினேன்.

ஆனால் அதை ஏற்க மனமின்றி அந்த மசோதாவை தடுமாற்றத்தோடு நிறைவேற்ற முயன்ற போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளிநடப்புச் செய்து “பொம்மை” லோக் அயுக்தாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்படி அமைக்கப்பட்ட லோக் அயுக்தாவிற்கும் கூட உரிய காலத்தில் விதிகளை உருவாக்காமல், தலைவரையும் நியமிக்காமல் அ.தி.மு.க அரசு தாமதம் செய்தது. மீண்டும் உச்சநீதிமன்றம் எச்சரித்தப் பிறகு இப்போது லோக் அயுக்தா விதிகளை உருவாக்கியிருக்கிறது. ஊழல் புகார்கள் மீது ரகசிய விசாரணை நடத்த வேண்டும்; புகாருக்குள்ளான ஊழல்வாதி குறித்து பத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிவிக்கக் கூடாது; விசாரணை நடக்கும் போதோ அல்லது விசாரணை முடிந்த பிறகோ கூட அந்த விவரங்களை தெரிவிக்கக் கூடாது என்றெல்லாம் வகுத்துள்ள விதிகள் அ.தி.மு.கவில் உள்ள ஊழல் அமைச்சர்களையும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள முதலமைச்சர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவும் வகுக்கப்பட்டதாக தெரிகிறது.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கும், ஊழல் ஒழிப்பு பணியிலும் ஈடுபட வேண்டிய லோக் அயுக்தா அமைப்பு ஊழல் விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என்று கூறியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடித்தளத்தையே தகர்த்து எறியும் அ.தி.மு.க அரசின் கேடு கெட்ட நடவடிக்கை மட்டுமல்ல – ஊழலே எங்கள் வாழ்க்கையாக இருக்கும் போது நாங்கள் எப்படி அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பது போல் அமைந்துள்ளது.

ஆகவே, லோக் அயுக்தா அமைப்பிற்கு நேர்மையான ஒரு தலைவரை நியமிக்கவும், ஊழல்வாதிகள் மீது நடைபெறும் விசாரணைகள் ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக பொதுமக்களுக்குத் தெரியும்படி நடக்கவும் “ரகசிய விசாரணை” என்ற விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், லோக் அயுக்தா அமைப்பை ஒரு “காகிதப்புலி” போல் ஆக்கி காலில் போட்டு மிதிக்க நினைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்கள் எதிர் கொள்ளும் சவால்கள்

உச்சநீதிமன்றத்தில் ஒரு சுவாரஸ்யமான விசாரணை ஒன்று நடைபெற்றது. இதுகுறித்துப் பல வருடங்களுக்கு முன்பே விவாதிக்க வேண்டிய செய்தி இது இப்போதாவது இதுகுறித்து யோசித்தார்கள் என்பது சந்தோஷப்படக் கூடிய செய்தியாகும்.அது என்னது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆய்வுக்காகச் சிறைசாலைக்குச் சென்றிருந்தார்கள். அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது. (ஒரு சில சிறைச்சாலைகளில் உலகில் கிடைக்காத பொருட்கள் எல்லாம் அங்குக் கிடைக்கும் என்பது வேறு விஷயம்.அதை பற்றி நாம் பேச வேண்டாம்).

இதுகுறித்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தானாக விசாரித்து வந்தது. இந்த விசாரணை நேற்று நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமர் யோகி தனது கருத்தை பதிவு செய்தார்.

அதாவது நீதிமன்றங்கள் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்க தாமதப்படுத்துவதால் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தனது பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைத்தார். அதற்குப் பதிலளித்த நீதிபதிகள் உங்களுக்கு இதே வேலையாகப் போய்விட்டது.

நீங்கள் எங்களுக்கு நாங்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் என இங்குக் கூற இயலாது கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க என்ன வழிமுறைகள் இருக்கிறது என ஆராயுங்கள் என்று கூறினார். உண்மையில் எங்குப் பிரச்சினை என்பதை இக்கட்டுரை விவாதிக்கிறது.

மொத்தத்தில் எந்த வழக்காக இருந்தாலும் காலத்தாமதத்தால் குற்றவாளிகள் பலனடைவதும், நிரபராதிகள் துன்பப்படுவதும் வழக்கமாகியுள்ளது. எந்த வழக்குகளுக்கும் காலக்கெடு கிடையாது. விசாரணை முடிந்தும் பலவழக்குகள் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது. பொதுமக்கள் காலதாமதமான நீதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நீதிமன்றம் அரசாங்கத்தைக் குறை சொல்வதும், அரசாங்கம் நீதிமன்றத்தை குறை சொல்வதும் வழக்கமான ஒன்றுதான்.

நிறைய நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கட்டமைப்பில் எந்தவிதமான மாறுதலும் கிடையாது. வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. ஆனால் தீர்ப்புகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. சட்டத்தைக் கடுமையாக்கினால் மட்டுமே தவறு செய்பவர்கள் குறைவார்கள். தவறு செய்தால் தப்பித்து விடலாம் என்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

குடிமக்களின் மனநிலையில் கடுமையான மாறுதல் ஏற்பட்டுள்ளது. இந்த மாறுதலுக்கு ஏதாவது எதிர் தீர்வு உண்டா! என்றால் இல்லை.இதனால் தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசை குறை கூறியுள்ளார்கள்.

அதாவது” சட்டத்தையும், நீதித் துறையையும் விமர்சிப்பதை நிறுத்துங்கள் மற்ற வழி முறைகளைக் கையாலுங்கள் எனக் கூறியது”.

காலதாமதத் தீர்ப்புகளினால் நிறையச் சாட்சிகள் மாறிவிடுகிறது. முக்கியமான சாட்சிகள் இறந்துவிடுகிறார்கள். இதனால் உண்மையான விசாரணை மற்றும் தீர்ப்புக்குத் தடையாக உள்ளது.

பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளுக்கும் கூட இவ்வளவு மாணவர்களுக்கு இவ்வளவு ஆசிரியர் என வரையறு செய்யும் அரசு நீதிமன்றத்தில் ஏனோ இவ்வாறு வரையறு செய்வதில்லை.

வழக்குகளின் அடிப்படையில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன தவறு. சாதாரண ஊழியர்களுக்கு டார்க்கெட் வைக்கும் டிஜுட்டல் உலகத்தில் நீதிமன்றக்களில் உள்ள வழக்குகளுக்கு மட்டும் டார்க்கெட் கிடையாது.
காலதாமதம் என்பது உண்மையை விழிங்கி விடும் என்பதே உண்மை.
நீதிமன்றங்களின் ஊழியர்களை அதிகரிப்பதும், அரசு வழக்கரிஞர்கள் அதிகரிப்பு உண்மை. நேர்மையான நீதிபதிகளைக் கண்டறிந்து எண்ணிக்கை அதிகரிப்பது, போதுமான சம்பளம் மற்றும் நீதித்துறைக்கு தேவையான நிதிகளை அளிப்பது போன்றவற்றின் மட்டுமே தீர்வுகளை ஏற்படுத்த முடியும்.

பாதுகாப்பு துறைக்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுத்து நிதிகள் ஒதுக்கப்படுகிறதோ அதில் பத்து சதவீதமாவது நீதிமன்றங்களுக்கும் ஒதுக்கினால் இவ்வளவு பிரச்சினைகள் வராது.

ஆனால் எந்த அரசும் நீதித்துறையின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்துவதில்லை, மாறுதலாக நீதிமன்றத்தில் அரசின் தலையீடு உள்ளது என்பதை யாரலும் மறுக்க இயலாது. சில தினங்களுக்கு முன் பாரத பிரதமர் மோடி அவர்கள் முந்தைய காலங்களில் காங்கிரஸின் தலையீடு உச்சநீதிமன்றத்தில் இருந்தது என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடதக்கது.

காங்கிரஸ்சும் மோடியின் தலையீடு நீதிமன்றங்களில் இருப்பதாகக் குற்றம்சாட்டியது. இது உண்மையான ஜனநாயத்துக்கு நல்லதல்ல . சாதரணமக்கள் நம்புவது நீதிமன்றத்தை மட்டுமே.
தீர்ப்புகளில் மட்டும் தலையிடும் அரசுகள் நீதிமன்ற உள் கட்டமைப்பில் ஏன் தலையீடுவதில்லை! மற்ற துறைகளுக்கு மட்டும் தனிப் பட்ஜெட் போடும் அரசுகள் நீதிதுறைக்குத் தனிப் பட்ஜெட் போட்டால் என்ன?

இதன் மூலம் குறைகளைத் தீர்க்கமுடியும் அல்லவா!
ஞாபகம் வருகிறது சில தினங்களுக்கு முன்பு ஒரு தலைமை நீதிபதி போதிய நிதி இல்லை எனப் புலம்பியது. நிதி இல்லா விட்டால் நீதித்துறை எவ்வாறு இயங்கும். இது ஒன்றும் லாபகரமான தொழில் துறை அல்ல நியாயத்தை நிலைநாட்டும் துறை, எவ்வளவு நிதி ஒதிக்கினாலும், செலவு ஆனாலும் ஒரு கட்டுபாடன சமுதாயத்தைக் கட்ட அமைக்க நீதி மன்றங்களால் மட்டுமே முடியும்.

இதனை ஆண்டவர்களும், ஆளுபவர்களும் உணர்ந்தால் சரி

நடிகர்களுக்கு சவுக்கடி

சாரு நிவேதிதா அவர்கள் செல்பி எடுப்பது பற்றி நடிகர் சூர்யா கூறிய கருத்துக்கு எழுதிய பதில் கடிதம்

அன்புத் தம்பி சூர்யாவுக்கு…

சமீபத்தில் இந்து தமிழ் நாளிதழில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். சினிமா நடிகர்களால் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவே வாழ முடியவில்லை; விமான நிலையத்தில் அற்பசங்கை பண்ணி விட்டு வந்தால் கூட கை குலுக்குகிறார்கள்; செல்ஃபி எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் பண்ணுகிறார்கள் என்பது உங்கள் புகார். உங்கள் தந்தை சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனைத் தட்டி விட்டது தவறுதான் என்றாலும் ரசிகர்களின் டார்ச்சரும் தாங்க முடியாததாக இருக்கிறது என்பது உங்கள் கட்டுரையின் சாரம். இது பற்றி உடனடியாக உங்களுக்கு ஒரு பதில் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் இல்லை. தம்பி சூர்யா, நீங்களும் உங்களைப் போன்ற ஹீரோக்களும் வாங்கும் சம்பளம் 50 கோடி, 60 கோடி ரூபாய். ஆனால் துப்புரவுத் தொழிலாளியின் மாதச் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? வெறும் 6000 ரூ. அறுபது கோடிக்கும் ஆறாயிரம் ரூபாய்க்கும் எத்தனை வித்தியாசம்?

தமிழ்நாட்டில் சினிமாதான் மதம். நீங்களெல்லாம் கடவுள்கள். எம்ஜியார் ஒரு கடவுள். சிவாஜி ஒரு கடவுள். கமலை மட்டும் ஆண்டவர் என்று சொல்லுவோம். ஏனென்றால் அவர் நாஸ்திகர். ரஜினி கடவுள். விஜய் கடவுள். அஜித் கடவுள். நீங்கள் கடவுள். உங்கள் தம்பி கார்த்தி கடவுள். ஏன், முன்பு அப்பாஸ் என்று ஒரு நடிகர் இருந்தாரே அவர் கூட கடவுள்தான். அப்படித்தான் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். நீங்கள் நினைத்தால் முதல்மந்திரியிடம் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு போய்ப் பார்க்கலாம். ஒரு தமிழ் எழுத்தாளனால் முடியுமா? நான் 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். என் சகாக்கள் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் 200 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்களுக்குத் தமிழ் சமூகத்தில் என்ன அடையாளம்?
தம்பி, அசோகமித்திரன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். அவரையெல்லாம் உங்கள் தந்தை சிவகுமார் கரைத்துக் குடித்திருப்பார். சிவகுமார் என்னுடைய 20 ஆண்டுக் கால நண்பர். என் வீட்டுக்கெல்லாம் வந்திருக்கிறார். அவருடைய சித்திரங்கள் என் வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர் வரைந்த காந்தியின் ஓவியம் என் மேஜை மேல் இருக்கிறது. ஏன் தெரியுமா? சிவகுமார் இலக்கியத்தின் வாசகர். அதனால்தான் என் வீடு தேடி வருவார். ஆனால் நீங்கள் அடுத்த தலைமுறை. என் மகன் தலைமுறை. அவனுக்கும் இலக்கியம் தெரியாது. அவனுக்கும் அசோகமித்திரனைத் தெரியாது. இதையெல்லாம் நான் அவன் வாயில் புட்டிப்பாலைப் போல் ஊற்ற முடியாது. நீங்களாகவேதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். சரி, அந்த அசோகமித்திரன் நம் தமிழ் மொழியின் ஆகச் சிறந்த எழுத்தாளர். நோபல் பரிசு பெற்ற பல எழுத்தாளர்களையும் விட சிறப்பான எழுத்தை நம் தமிழுக்குக் கொடுத்திருப்பவர். வீட்டில் எழுதுவதற்கான வசதி இல்லாமல் தி. நகர் நடேசன் பூங்காவில்தான் தன் நாவல்கள் பெரும்பாலானவற்றை எழுதினார். அவர் 18 ஆண்டுகள் வாசன் ஸ்டுடியோவில் பி.ஆர்.ஓ.வாக இருந்தார். அசோகமித்திரனின் தந்தையும் வாசனும் அடாபொடா நண்பர்கள். அதனால் தந்தையில்லாத அசோகமித்திரனை ஹைதராபாதிலிருந்து அழைத்துத் தன் சினிமா கம்பெனியில் வேலை கொடுத்தார் வாசன். 18 ஆண்டுகள் கழித்து ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அன்று வாசன் அசோகமித்திரனை அழைத்துத் தன் காரைத் துடைக்கச் சொன்னார். இதெல்லாம் சினிமா கம்பெனியில் சகஜம்தானே? ஷூவைத் துடைக்கச் சொன்னாலும் துடைக்கணும் இல்லையா? ஆனால் அசோகமித்திரன் அப்படிப்பட்டவர் இல்லை. எழுத்தாளர் ஆயிற்றே?

”சார், நான் ஒரு எழுத்தாளன். என்னைப் போய் இந்த வேலையையெல்லாம் செய்யச் சொல்கிறீர்களே?” என்றார் வாசனிடம் அசோகமித்திரன். அதற்கு வாசன் சொன்ன ஒரு பதிலால் அசோகமித்திரனின் ஒட்டு மொத்த வாழ்க்கையே திசை மாறியது. அப்போது அசோகமித்திரனுக்கு 35 வயது என்று நினைக்கிறேன். “ஏம்ப்பா, நீ எழுத்தாளனா இருந்தா இந்த வேலைக்கு வந்திருக்க மாட்டியேப்பா?”
அவ்வளவுதான். அந்தக் கணமே வேலையை ராஜினாமா செய்து விட்டு அடுத்த 20 ஆண்டுகள் ஏழ்மையில் உழன்றார் அசோகமித்திரன். இதெல்லாம் அசோகமித்திரனே எழுதினது. சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிடவில்லை என்று சொல்லியிருக்கிறார். எனக்கே தெரியும். அவருக்கு ஆஸ்துமா. மூச்சு விட சிரமப்படுவார். மாத்திரை மருந்து வாங்கக் காசு இருக்காது. தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுத வல்லவர். ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்தால் இந்நேரம் நோபல் பரிசு பெற்றிருப்பார். ஆனால் தமிழில்தான் எழுதுவேன் என்று உங்களுக்கும் எனக்கும் தாய்மொழியான தமிழைத் தேர்ந்தெடுத்தார். பட்டினி கிடந்தார். அவர் பிள்ளைகள் தலையெடுத்த பிறகுதான் அவரால் சாப்பிட முடிந்தது. ஆனால் வயிறு சுருங்கி விட்டது. ஒரே ஒரு மொளகா பஜ்ஜி போதும்ப்பா என்பார்.

அவர் தன் மகன் வீட்டில் இருந்தார். அவருடைய அறையில் புத்தகங்களே இல்லை. எங்கே உங்கள் லைப்ரரி என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன். என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு இந்த அறையில் எங்கே புத்தகங்களை வைப்பது? எல்லாவற்றையும் நண்பர்களிடம் கொடுத்து விட்டேன் என்றார்.
அவர் வீட்டுக்கு எதிரே ஒரு அரண்மனை இருக்கிறது. அங்கேதான் உங்கள் இசைஞானி வாழ்கிறார்.

தம்பி சூர்யா, பாப்லோ நெரூதா என்று ஒரு கவிஞர் இருந்தார். சீலே தேசத்தின் தேசியக் கவி. அவருக்கு சீலேவின் தலைநகர் சந்த்தியாகோவில் ஒரு மாளிகையும் அவர் பிறந்து வாழ்ந்த வால்பரய்ஸோ என்ற நகரில் ஒரு மாளிகையும் இருக்கிறது. அந்த வால்பரய்ஸோ இப்போது ஒரு டூரிஸ்ட் சொர்க்கமாக விளங்குகிறது. உலகமெங்கிலும் இருந்து வால்பரய்ஸோவுக்குப் போய் நெரூதா வாழ்ந்த வீட்டைப் பார்த்து மகிழ்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள். அதே சீலே தேசத்தில் நிகானோர் பார்ரா (Nicanor Parra) என்று ஒரு கவிஞர் இருந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் இறந்தார். 103 வயது வரை வாழ்ந்த அவரிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு சீலே அதிபரே மாதக் கணக்கில் காத்திருப்பார். இன்னும் பல தென்னமெரிக்க அதிபர்களும் அவருடைய அப்பாய்ண்ட்மெண்ட்டுக்காகக் காத்துக் கிடந்தனர். அவர் நடிக்கும் பால் விளம்பரத்துக்கு அவர் வாங்கும் தொகை ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகை வாங்கும் தொகைக்குச் சமம்.

இதையெல்லாம் இவர் ஏன் உளறுகிறார் என்று உங்களுக்குத் தோன்றும். அசோகமித்திரன் சென்ற ஆண்டு மரணம் அடைந்த போது அவருக்குக் கூடிய கூட்டம் 25 பேர். அதில் 15 பேர் அவரது உறவினர். மற்ற பத்துப் பேர் அவரது ஆயுட்கால நண்பர்கள். இப்படிப்பட்ட தேசத்தில் கடவுள்களைப் போல், சுல்தான்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்கள் – அவர்களை அப்படி வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஜனங்கள் எப்பவாவது செல்ஃபி எடுத்துக் கொள்ள முனைந்தால் அது உங்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது.

தம்பி சூர்யா… உங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரிந்தால் கொஞ்சம் அசோகமித்திரனின் கதைகளைப் படித்துப் பாருங்கள். கரைந்த நிழல்கள் என்ற நாவலிலிருந்து ஆரம்பிக்கலாம். ஏனென்றால், அது அவருடைய சினிமாக் கம்பெனி அனுபவங்களை வைத்து எழுதியது.

இன்னொரு விஷயம் தம்பி. இன்று காலை வேந்தர் டிவி என்ற தொலைக்காட்சியிலிருந்து ஒரு பெண் போன் செய்தார். சாரு நிவேதிதா மேடம் இருக்காங்களா என்றது குரல். குரலுக்கு உரியவருக்கு 25 வயதுதான் இருக்கலாம். மேடம் இல்லீங்க, நான் தான் சாரு நிவேதிதா என்றேன். ஓ அப்டியா சார். சரி சார். நாஸ்டிரடாமஸின் predictions பற்றி ஒரு நிகழ்ச்சி பண்றோம். அதில் உங்கள் கருத்துக்களைச் சொல்லணும் என்றார்.
எல்லாமே ஓசி சூர்யா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் எங்களுக்கு ஒரு நாள் போய் விடுகிறது. ஆனால் காசு கொடுப்பதில்லை. கேட்டால், நடிகர் சூர்யா போன்றவர்களுக்குக் கூட காசு தருவதில்லை சார். அவர்களும் கேட்பதில்லை என்கிறார்கள். நான் எதுவும் பதில் சொல்வதில்லை. உங்கள் சம்பளம் கோடிகளில். எங்கள் சம்பளம் ஒரு கட்டுரைக்கு 1000 ரூபாய். தொலைக்காட்சிக்கு ஓசி.

நான் அந்தப் பெண்ணிடம் எனக்கு ரொம்ப வேலை இருக்குங்க ஸாரி என்று சொல்லி விட்டேன்.
சாரு நிவேதிதா மேடம். எப்படி இருக்கு பாருங்க. நீங்க என்னடான்னா செல்ஃபி எடுத்து டார்ச்சர் பண்றாங்கங்க்றீங்க!!!

 

2.0 -சாரு நிவேதிதா விமர்சனம்

சிலரைப் பார்த்து இவர் தப்பான ஆள் என்று சொல்வோம் இல்லையா, அது போல் 2.0 ஒரு தப்பான படம். பொதுவாகவே ஷங்கரின் படங்கள் ஆரம்பத்திலிருந்தே தப்பான கருத்துக்களை மக்கள் நலனைப் பேணும் கோட்பாடுகளாக முன்வைக்கப்படுகின்றன. 5000 கோடி ஊழல் பண்ணினவன் பற்றிப் பேச்சே இருக்காது; ஆனால் அம்பது ரூபாய் லஞ்சம் வாங்கும் ட்ராஃபிக் போலீஸை ஷங்கரின் ஹீரோ சுட்டுப் பொசுக்குவான். இதுதான் ஷங்கரின் சமூகவியல் அறிவு.

அதே அறிவுதான் இந்தப் படத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. அதிலும் கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லாமல், படு அலுப்பைத் தரும் விதத்தில். செல்ஃபோன் டவர்களால் பறவை இனங்கள் அழிகின்றதாம்; அதனால் மனித இனத்துக்குக் கேடு விளைகிறதாம். ஆரம்பக் காட்சியில் செல்ஃபோன் டவர்களையும் அதன் பக்கத்தில் சிட்டுக்குருவிகளையும் பார்த்த கணத்திலேயே ஐய்யய்யோ மோசம் போனோமே முடிஞ்சுது கதை என்று தலையில் கையை வைத்து விட்டேன். ஏனென்றால், இது போன்ற போலி விஞ்ஞானக் கோட்பாடுகளை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே தானே இருக்கிறோம்? ராக்கெட் விடாதீங்க… போய் விவசாயம் பாருங்க… என்று கூச்சல் போடும் தலைவர்களை நாம் பார்க்கிறோம் இல்லையா? அதேதான் 2.0. இப்படியே இவர்கள் சட்டை வேட்டி கூடப் போட வேண்டாம் என்று சொல்லி நம்மையெல்லாம் காட்டுமிராண்டி காலத்துக்கு அழைத்துப் போய் விடுவார்கள். இதுபோன்ற கலாச்சாரப் புரட்சிவாதிகளை நாம் சீனாவில் மா சே துங் ஆட்சியில் பார்த்திருக்கிறோம். தாலிபான்களின் ஆட்சியிலும் சமீபத்தில் பார்த்தோம். இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் அடிப்படையில் தாலிபான்கள். ஆனால் தாலிபான்களுக்கும் ஷங்கருக்கும் என்ன வித்தியாசம் என்றால், தாலிபான்களிடம் இருக்கும் அடிப்படை நேர்மை கூட ஷங்கரிடம் இருக்காது. உதாரணம், செல்ஃபோன் டவர்களால் பறவையினங்கள் அழிந்து மனித குலத்த்துக்குக் கேடு என்று சொல்லும் 2.0 வை 600 கோடி ரூபாயில் எடுத்த லைகா நிறுவனமே செல்போன் விற்பனை செய்யும் நிறுவனம்தான். அதிலும் ஐரோப்பாவில். எப்படி இருக்கிறது பாருங்கள்! ஊருக்கு உபதேசம் செய்பவன் தான் ஊரைக் கெடுப்பதில் முதல் ஆளாக நிற்பான்.

படத்தில் சுவாரசியம் என்பது துளிக்கூட இல்லை. முதல் காட்சியில் செல்ஃபோன் டவர்களையும் சிட்டுக்குருவிகளையும் பார்த்ததுமே ரஜினி என்ன செய்யப் போகிறார், அக்‌ஷய் குமார் என்ன செய்யப் போகிறார், ரஜினி கடைசிக் காட்சியில் என்னென்ன வசனம் பேசப் போகிறார் என்ற விபரத்தையெல்லாம் நான் என் அருகில் அமர்ந்திருந்த நண்பரிடம் சொல்லி விட்டேன். இப்படித் தெரிந்து போனால் அப்புறம் என்னத்தைப் பார்ப்பது?

பறவையியலாளர் சலீம் அலியை வேறு நாற அடித்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் படத்தில் வரும் ஆர்னிதாலஜிஸ்ட் பக்ஷிராஜன் பறவைகளைச் சாப்பிடுவதைக் கண்டிப்பது போல் வருகிறது. அதாவது பறவையியலாளர்கள் பறவைகளைச் சாப்பிடக் கூடாது. இது போன்ற அறிவுகெட்டத்தனமான romanticization ஐ சலீம் அலி கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அவருக்குப் பிடித்த உணவு பறவை. இது பற்றிப் பலரும் அவ்வப்போது அவரிடம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் போது “அட மூடர்களே, நான் பிறந்ததிலிருந்தே பறவைக் கறிப் பிரியன். எங்கள் வீட்டு டைனிங் டேபிளில் இல்லாத பறவைகளே கிடையாது… பறவை ஆய்வுக்கும் சைவ உணவுக்கும் என்னய்யா சம்பந்தம்?” என்று சொல்லியிருக்கிறார். அதே சமயம் அழிந்து வரும் விலங்கினங்களை அடிக்கக் கூடாது என்பது வேறு விஷயம் என்றும் கூறுகிறார்.

ஆனால் இந்தப் படத்தில் அநியாயத்துக்கு அதையும் romanticise செய்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான பலவீனம், பறவைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கவலைப்படும் ஒருவன் எப்படி மனிதர்களைக் கொல்லும் அரக்கனாக இருக்கிறான் என்பது. காந்தியைக் கொலைகார வில்லனாகப் பார்ப்பது போல் இருக்கிறது. கதையின் அடிப்படையே கோளாறு என்பதால் எல்லாமே கோளாறு.

டெக்னாலஜி விஷயங்களுக்காக சின்னப் புள்ளைங்க பார்க்கலா.

ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள்: அடுத்த படத்தில் ஏதாவது வில்லனுக்கு சாரு நிவேதிதா என்று பெயர் வைத்து விடாதீர்கள்.

சிபிஐ மூலம் வெளிச்சத்திற்கு வரும் உண்மை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தது மறக்க இயலாது. இதனால் கடும் கொந்தளிப்பை தேவையற்ற உயிர்சேதமும் ஏற்பட்டது. சிபிஐ விசாரணைக்கு மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்துப் பல வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தற்பொழுது எப்.ஐ.ஆர் ரில் போலீஸ் மற்றும் வருவாய் துறை சேர்ந்தவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
அதாவது சதிதிட்டம் தீட்டுதல், கொள்ளை, திருட்டு, சட்ட விதிகளை மீறுவது எனப் பல பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் பதற்றம்?

நாடுமுழுவது உள்ள விவசாயிகள் தலைநகர் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். இப் பேரணியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள சுமார் 208 அமைப்புகள் பங்கேற்கின்றன.
முதலில் புகழ்பெற்ற ராம்லீலா மைதனாத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அதன் பிறகு பாரளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்கிறார்கள் இதனால் அங்குக் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நான்கு லட்சத்துக்கும் குறையாமல் கலந்து கொள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்படுக்கிறது. பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் முகாமிட்டு உள்ளார்கள்.

விவசாயகடன் தள்ளுபடி, உற்பத்தி பொருள்களின் விலையை நிர்ணயித்தல் எனப் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். டெல்லி முழுவதும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.