சினிமா விமர்சகர், பொறியாளர் S.வீரசெல்வம்.
தமிழ்நேரலை
96
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் 4/10/2018 அன்று வெளிவந்த 96 படம் மெகா ஹிட் அடித்தது.மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்திற்க்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்து இருந்தார். இந்தப் படத்தில் வரும் காதலே காதலே பாடல் மற்றும் அதன் தீம் பலரின் வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்களில் பரவி கிடந்தது. பள்ளி பருவ காதலர்கள் 22 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் போது நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் கதை. விஜய் சேதுபதி, திரிஷா, பள்ளி பருவ காதலர்காக வரும் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிருஷ்ணன், வர்ஷா என அனைவரின் நடிப்பும் அற்புதமாக இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷாவின் கேரியரில் முக்கியத் திருப்பமாக இந்தப் படம் அமைந்தது. இளைய தலைமுறையினர் மட்டும் அல்லாமல் அனைவராலும் ராம், ஜானு கதாபாத்திரங்களை ரசிக்க வைத்ததின் மூலம் ஒரு இயக்குனராக வெற்றி அடைந்தார் பிரேம் குமார்.
பரியேறும் பெருமாள் BABL
ப.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில் 28.9.2018 அன்று வெளிவந்த படம்தான் பரியேறும் பெருமாள் BABL. திருநெல்வேலியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து அரசு சட்ட கல்லூரிக்கு படிக்க வரும் தாழ்த்தபட்ட பிரிவை சேர்ந்த ஒரு மாணவன் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் மையக்கதை.2005 ஆம் ஆண்டில் நடப்பது போல் பயணிக்கிறது படத்தின் கதை.
பரியேறும் பெருமாள் ஆக நடித்துள்ள கதிர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜோதி மகாலட்சுமி ஆக வரும் ஆனந்தியும் கொடுத்த கதாபாத்திரத்தை சரியாகச் செய்து இருத்தார். தாத்தாவாக வரும் கராத்தே வெங்கடேசன், பூ ராம்,யோகி பாபு, மாரிமுத்து ஆகியோரின் கதாபாத்திரங்களும் படம் பார்த்து முடித்த பின்பும் மனதில் நிற்கின்றன. அதிலும் குறிப்பாகப் பரியணின் அப்பாவாக வருபவர் மனதை உலுக்குகிறார். பாடல்களும், சந்தோஷ் நாராயணன் இசையும் கதையோடு ஒன்றி வருகிறது. படத்தின் கிளைமாக்ஸ் வழக்கமான படங்களைப் போல் அல்லாமல் சிந்திக்க வைக்கிறது. மிகவும் எதார்த்தமான கதை களத்துடன் வந்து வசூல் ரீதியிலும் வெற்றி பெற்ற படங்கள் அறிதானவை. அதில் இந்தப் பரியேரும் பெருமாளும் ஒருவன்.
இரவுக்கு ஆயிரம் கண்கள்
அருள்நிதி, மகிமா நம்பியார், அஜ்மல் மற்றும் பலர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில், சாம். சிஎஸ் இசையில்,
ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் 12/5/2018 அன்று வெளிவந்த படம் தான் இரவுக்கு ஆயிரம் கண்கள். நள்ளிரவில் நடைபெறும் ஒரு கொலையும், அதில் உள்ள மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்பதாகவும் செல்கிறது படத்தின் கதை. சஸ்பென்ஸ் திரில்லர் படமாக மிகவும் சுவாரசியமாகவும் எடுத்து இருந்தார் அறிமுக இயக்குநர் மு.மாறன். அருள்நிதி, அஜ்மல் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். இந்தப் படம் ரசிகர்கள் இடையே குறிப்பிட தகுந்த வரவேற்பையும் பெற்றது.
சவரக்கத்தி
ஜி.ஆர். ஆதித்யா இயக்கத்தில் ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடிப்பில் அரோல் கொரேலி இசையில் 9/2/2018 அன்று வெளிவந்தது சவரக்கத்தி.
லோன் ஒல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து. இந்த வருடத்தில் கதையை மட்டும் நம்பி களத்தில் இறங்கிய இயக்குனர்களில் ஜி.ஆர். ஆதித்யாவும் ஒருவர். ராம், மிஷ்கின், பூர்ணா மூவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நடிப்பு திறமையை இந்தப் படத்தில் வெளி காட்டி இருந்தனர். ஒரு அப்பாவித்தனமான குடும்பத் தலைவனுக்கும் பிரபல ரவுடிக்கும் ஏற்படும் மோதலும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் தான் படத்தின் கதை. அதைக் கொஞ்சம் நகைச்சுவை கலந்து கொடுத்து இருந்தார் இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா.
மேற்கு தொடர்ச்சி மலை
லெனின் பாரதி இயக்கத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வியல் அனுபவமாக 24.8.2018 அன்று வெளிவந்தது இத்திரைப்படம். பல்வேறு நாடுகளின் பட விழாக்கள் பலவற்றிலும் பங்கேற்றுப் பரிசுகள், விருதுகள் பெருமைகள் பெற்றாலும் வசூல் ரீதியில் பெரிய வரவேற்பை இப்படம் பெறவில்லை.நடிகர் விஜய் சேதுபதி தான் நடிப்பதாகக் கூறியும் படத்திற்க்கு எதார்த்தமான புதுமுகம் தான் வேண்டும் என மறுத்து விட்டாராம் இயக்குனர் லெனின் பாரதி. நடிகர்களை நம்பி படம் எடுக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் கதையை நம்பி படம் எடுக்கும் லெனின் பாரதி போன்றவர்களைப் பாராட்டிதான் ஆக வேண்டும். புதுமுகங்கள் ஆண்டனி,
காயத்ரி கிருஷ்ணா ஜோடியுடன் எண்ணற்ற துணை நடிகர்கள் இணைந்து நடித்த படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை. தேனி ஈஸ்வர் ஓளிப்பதிவில், இளையராஜா இசையில் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளிவந்தது இத்திரைப்படம்.
ஒரு குப்பை கதை
பிலிம் பாக்ஸ் நிறுவனம் தயாரிப்பில்
காளி ரங்கசாமி இயக்கத்தில் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் 25/8/2018 அன்று வெளிவந்த படம்தான் ஒரு குப்பை கதை. நடன இயக்குனர் தினேஷ் நடிகராக அறிமுகமானார், மனிஷா யாதவ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
ஒரு நல்ல படத்தைக் கொடுக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்று உள்ளார் அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி.
தமிழ் சினிமாவில் குப்பை அள்ளும் ஒரு இளைஞனை கதையின் நாயகனாக வைப்பதுற்கே ஒரு தைரியம் வேண்டும்.
தினேஷின் எதார்த்தமான நடிப்பும் அழுத்தமான கதையும் படத்தைப் பெரிதும் பேச வைத்தது. தரமான படங்களை ரசிக்கும் ரசிகர்கிடையே இந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
கோலமாவு கோகிலா
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில்
நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் 17.8.2018 அன்று வெளிவந்த படம்தான் கோலமாவு கோகிலா. போதை பொருள் கடத்தல் கும்பலிடம் மாட்டிக்கொண்ட நாயகி அவரின் நோயாளி அம்மா, குடும்பத்தினரை காப்பாற்றினாரா என்பதுதான் படத்தின் கதை. லைகா புரொடக்ஷன்ஸ், அனிருத் இசை, நயன்தாரா எனப் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர்கள் எதிர்பார்த்த படம். எனக்குக் கல்யாண வயசு வந்துடுச்சு எனும் அனிருத் பாடிய பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. இந்தப் படம் வசூல் ரீதியிலும் நல்ல வெற்றியை பெற்றது குறிப்பித்தக்கது.
இரும்பு திரை
தமிழ் சினிமாவில்
மக்களின் பிரச்சனைகள் குறித்துப் பேசிய பெரும்பாலான படங்கள் இயக்குனர்களைக் கைவிட்டது இல்லை.
அந்த வகையில் தன் முதல் படத்திலேயே டிஜிட்டல் வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து இரும்புத்திரை படத்தில் பேசி சிக்ஸர் அடித்துள்ளார் அறிமுக இயக்குனர் மித்ரன்.
படம் டெக்னிக்கலாக மிகவும் வலுவாக இருந்தது. படத்தில் ஜார்ஜின் ஒளிப்பதிவு, ரூபனின் எடிட்டிங் என அனைத்தும் அற்புதம். யுவன் பின்னணி இசையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளுத்து வாங்கி இருந்தார். விஷாலின் அளவான நடிப்பும், அர்ஜுனின் அசால்ட் ஆன நடிப்பும் படத்தை ரசிகர்களுக்கு இடையே பெரிதும் பேச வைத்தது.11.5.2018 அன்று விஷாலின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது.
அண்ணனுக்கு ஜே
அட்டகத்தி தினேஷ், மகிமா நம்பியார், ராதாரவி, தீனா நடிப்பில் 31/8/2018 அன்று வெளிவந்தது அண்ணனுக்கு ஜே திரைப்படம்.
பாக் ஸ்டார் ஸ்டுடியோஸ், கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்
ராஜ்குமார் இயக்கத்தில்
அரோல் கொரேலி இசையில் வெளிவந்தது இந்தப் படம். அட்டகத்தி தினேஷ்ன் அசால்டான நடிப்புப் படத்தை ரசிக்க வைத்தது.நகைச்சுவை கலந்த அரசியல் படமாக நவீன கால இளைஞர்களைக் குறி வைத்து எடுக்கப் பட்டு இருந்தது இத்திரைப்படம். வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியை பெற விட்டாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.