“கோட்சே ஒரு தேசியவாதி!”- மீண்டும் சர்ச்சை

சில நாட்களுக்கு முன்னர் பாஜக-வின் பிரக்யா தாகூர், “கோட்சே (தேசப் பிதா காந்தியை சுட்டுக் கொன்றவர்) ஒரு தேசபக்தர்” என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். அதுவே இன்னும் ஓயாத நிலையில் பாஜக-விலிருந்து இன்னொரு எம்.எல்.ஏ, “கோட்சே ஒரு தேசியவாதி. தனது வாழ்க்கை முழுவதும் அவர் தேசம் பற்றி யோசித்தார்” என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ உஷா தாகூர் தான் இப்படி பேசியுள்ளார். பிரக்யா தாகூரின் கருத்தை அடுத்து, பாஜக தலைவர் அமித்ஷா, அது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, “கோட்சேவை புகழ்ந்து பேசியதால், பிரக்யா தாகூரை வாழ்நாள் முழுவதும் என்னால் மன்னிக்க முடியாது” என்று கூறினார்.

இந்நிலையில் உஷா தாகூர், “கோட்சே ஏன் அப்படிப்பட்ட முடிவை எடுத்தார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். நானோ நீங்களோ அது குறித்து கருத்துக் கூறக் கூடாது” என்று பேசியுள்ளார்.

ஊஷா தாகூர், மத்திய பிரதேச பாஜக-வின் துணைத் தலைவராவார். அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. இது குறித்து மத்திய பிரதேச பாஜக தரப்பு, “உஷா தாகூர் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக அது தவறான முறையில் எடிட் செய்து பகிரப்பட்டு வருகிறது” என்று மட்டும் கூறியுள்ளது.

ஆனால் காங்கிரஸ் தரப்போ, “இதுதான் பாஜக-வின் உண்மையான முகம். பாஜக-வுக்கு தைரியம் இருந்தால் அந்த இரு நபர்களையும் கட்சியிலிருந்து நீக்கிப் பார்க்கட்டும். அவர்கள் தங்களின் விஷமத்தனமான கருத்துக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

பிரக்யா தாகூருக்கு விளக்கம் கேட்டு பாஜக தலைமை அனுப்பிய கடிதத்தின் காலக்கெடு முடிவடைந்து சில நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை அது குறித்து பாஜக வாய் திறக்கவில்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *