ஸ்டெர்லைட் ஆலை-வைகோ

தருண் அகர்வால் அறிக்கையால்,
ஆச்சரியமும் இல்லை; அதிர்ச்சியும் இல்லை;
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து
எங்கள் போராட்டம் நிற்கப் போவதும் இல்லை!

‘தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட நாசகார நச்சு ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது; ஆலையைத் திறக்கலாம்’ என்று மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமைஅமர்வில் அறிக்கை கொடுத்து இருப்பதாக வந்த செய்தி, எனக்கு ஆச்சரியத்தையும் தரவில்லை; அதிர்ச்சியையும் தரவில்லை.

இந்தக் குழு விசாரணையில் நான் முழுமையாகப் பங்கேற்றேன். இரண்டு மணி நேரம் என் வாதங்களை எடுத்து வைத்தேன். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத்தான் இந்தக் குழு அறிக்கை கொடுக்கும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால், ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து நடத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று அண்மையில் பேட்டி கொடுத்து இருந்தார்.

இந்த ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாகப் போராடி வருகின்ற நான், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழககில், 2010 செப்டெம்பர் 28 ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எலிபி தர்மராவ், நீதிபதி பால் வசந்தகுமார் அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படித் தீர்ப்பு அளித்தது.

அதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை, உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது. அங்கே மூன்று ஆண்டுகள் வழக்கு நடந்தது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பட்நாயக், நீதிபதி கோகலே அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்து, ‘ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து நடத்தலாம்’ என்று தீர்ப்பு அளித்தது.

இந்தப் பின்னணியில், சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தென்மண்டல அமர்வில், ஸ்டெர்லைட் மூலையை மூடுவதற்கு நான் வழக்குத் தொடுத்தேன். தமிழக அரசும் வழக்குத் தொடுத்தது. உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் அவர்கள் அமர்வில் வழக்கு நடந்தது. நான் 3 மணி நேரம் வாதங்களை எடுத்து வைத்தேன்.

நீதி கிடைக்கும்; ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தீர்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்து இருந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வு, எந்தக் காரணமுமின்றி, அதிரடியாக, வழக்கைத் தில்லியில் உள்ள, தலைமை அமர்வில் விசாரிக்க மாற்றியது. நீதிபதி சொக்கலிங்கம் அவர்கள் அதிர்ச்சி அடைந்து, ஏன் இப்படி நடந்தது? என்று வருத்தத்தைத் தெரிவித்தார்.

தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வின் தலைவரான, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதந்திரகுமார் அமர்வில், ஸ்டெர்லைட் வழக்கு நடந்தது. பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் வழக்கு நடந்துகொண்டு இருக்கும்போதே, ‘ஸ்டெர்லைட்டைத் திறக்க நான் ஆணையிடுவேன்’ என்று அவர் வெளிப்படையாகச் சொன்னார்.

நீதி கொலை செய்யப்பட்டு விட்டது என்று உணர்ந்த நான், ‘ஒரு வழக்கு நடக்கும்போது ஒரு தரப்பு வழக்கறிஞருக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளிப்பேன் என்று ஒரு நீதிபதி சொன்னது, இந்திய நாட்டின் சட்டத்துறை நீதித்துறை வரலாற்றிலேயே கிடையாது என்று செய்தியாளர்களிடம் கூறினேன்.

அதன்படியே, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நீதிபதி சுதந்திரகுமார் தீர்ப்பு அளித்தார்.

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நான்மேல் முறையீடு செய்து இருக்கின்றேன். தமிழக அரசும் மேல் முறையீடு செய்து இருக்கின்றது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட்டை எதிர்த்து, தூத்துக்குடி வட்டார மக்கள் 100 நாள்களுக்கு மேல் அறப்போர் நடத்தினர். மே 22 ஆம் தேதி, அறப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அ.தி.மு.க அரசின் காவல்துறை, ஈவு இரக்கம் இன்றித் தாக்குதல் நடத்தி, 13 பேரைச் சுட்டுப் படுகொலை செய்தது. மக்கள் கொந்தளிப்புக்கு அஞ்சி, தமிழக அரசு ஆலையை மூடியது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான காரணங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை எல்லாம் தொகுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசுக் கொள்கை முடிவு எடுக்கவில்லை என்கிறபோது, தமிழக அரசும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மறைமுகமாகச் செயல்படுகின்றது என்பது தெளிவாகத் தெரிந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் வழக்குத் தொடுத்தேன்.

அந்த வழக்கில், ‘அரசுக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்’ என்று நீதிபதியே கூறினார்.

இந்நிலையில், தமிழக அரசின் ஆணையை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில் வழக்குத் தொடுத்தது. அதன் தலைவராக உள்ள நீதியரசர் கோயல் அமர்வில் நான் வாதாடச் சென்றபோது, அவரும் வெளிப்படையாக ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே பேசினார். நான் பேச எழுந்தபோது, ‘பேசாதே, உட்கார்’ என்றார்.

அதன்பிறகு, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைப்பதாகச் சொன்னார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் சிவசுப்பிரமணியன் அல்லது ஓய்வு பெற்ற இப்ராகிம் கலி~புல்லா ஆகியோரில் ஒருவரை நியமிக்குமாறு கேட்டேன்.

ஸ்டெர்லைட் வழக்கறிஞர் அரிமா சுந்தரம், தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நீதிபதியையும் நியமிக்கக்கூடாது; அவர்கள், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகத்தான் அறிக்கை தருவார்கள் என்று கூறியபோது, நான் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன். ‘தமிழ்நாட்டு நீதிபதிகள் நடுநிலை தவறியவர்களா? கிடையாது. தலைசிறந்த, நேர்மையான நீதிபதிகள் நீதித்துறைக்குப் பெருமை சேர்த்து இருக்கின்றார்கள்’ என்று சொன்னதை, ஸ்டெர்லைட் வழக்கறிஞர் ஏற்கவில்லை.

பின்னர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை, பசுமைத் தீர்ப்பு ஆயம் அறிவித்தது. அவர் மறுத்துவிட்டதால், மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி, தருண் அகர்வால் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அறிவிக்கப்பட்டது.

அந்தக்குழு, தூத்துக்குடிக்கு வந்தபோது, நானும் சென்று இருந்தேன். பின்னர் அக்குழு, சென்னையில் நான்கு நாட்கள் இருதரப்புக் கருத்துகளையும் கேட்டது. தக்க ஆதாரங்களுடன் இரண்டு மணி நேரம் நான் வாதங்களை முன்வைத்தேன். ஆனால், அந்த அமர்வு, கருத்துக் கேட்ட முறையைக் கவனித்தபோது, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கச் சொல்லித்தான் இந்தக்குழு அறிக்கை தரும் என்பதை ஊகித்தேன். அப்படியே நடந்து விட்டது.

இதுகுறித்துத் தீர்ப்பு அளிக்கப்போகின்ற தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைவர் நீதிபதி கோயல் அவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நாளிலேயே பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைவராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். எனவே, மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசின் எண்ணத்திற்கு ஏற்பவே தீர்ப்பு வரும் என்பதை ஊகிக்கின்றேன்.

ஒரு வாரத்திற்குள் தமிழ்நாடு அரசுப் பதில் அளிக்கும்படி, பசுமைத் தீர்ப்பு ஆயம் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றது. ஆனால், நீதிபதி கோயல் அமர்வு ஒப்புக்காக விசாரணை நடத்தும். அது ஒரு கண்கட்டு வித்தையாகப் போகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் வாழ்வையும், தூத்துக்குடி மாநகர மக்கள் உடல்நலத்தையும் நாசப்படுத்துகின்ற ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு மத்திய அரசு முனைந்து நிற்பதால்தான், ஸ்டெர்லைட் நிர்வாகத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்திற்கு, தமிழ்நாட்டுக் காவிரி தீரத்தில் இரண்டு ஹைட்ரோ கார்பன் உரிமங்களை வழங்கி உள்ளது.

தமிழர்களுக்கு எங்குமே நீதி கிடைக்கவில்லை. நாங்கள் நடத்துகின்ற அறப்போர் நிற்காது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை, போராட்டம் புதுப்புது வடிவங்கள் எடுக்கும் என வைகோ அவர்கள் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *