வைகோ வாழ்த்து

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு

வைகோ வாழ்த்து

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 14 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், 38 ஆயிரத்து 176 தனித்தேர்வர்களும் 10 ஆம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.

மேல்நிலைக் கல்வியில் நாம் விரும்பும் வகையான பிரிவுகளை எடுத்துப் படிப்பதற்கு ஏற்றவாறு, பாடங்களைக் கூர்ந்து படித்துத் தேர்வு எழுதிட வேண்டும். உயர்கல்வி பயில்வதற்கு ஆதார சுருதியாக இருக்கும் பத்தாம் வகுப்புத் தேர்வினை. மாணவர்கள் அச்சம் இன்றிக் கவனமாக எழுதி வெற்றி பெற்றிட இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தற்போது கோடை வெயில் தொடங்கி விட்டமையால், எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்; இரவில் அதிக நேரம் கண்விழிக்காமல், நேரத்தை முறைப்படுத்திப் படிக்க வேண்டும்.

இந்தப் பொதுத் தேர்வுக்காக 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளின் அருகில் திருவிழா கொண்டாடுகின்ற குழுவினரோ, இதர அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களோ ஒலிபெருக்கியை சத்தமாக இயக்கிடுவதை முற்றாகத் தவிர்த்திட வேண்டும். அதிர்வேட்டுகள் வெடிக்கக் கூடாது.

மாணவர்கள் தேர்வுக் கூடங்களுக்கு உரிய நேரத்தில் செல்லும் வகையில், பேருந்துகளை முறையாக அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்திட, தமிழக அரசின் போக்குவரத்துத் துறை வழிவகை செய்திட வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும் வகையில் பெற்றோர் அவர்களிடம் ஒவ்வொரு நாளும் பேச வேண்டும். எவ்வித மன அழுத்தமோ, அச்சமோ இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுத அது உதவும். தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கு முன்பு, மனதை ஒருநிலைப்படுத்தி வினாத் தாளை நன்கு படித்து அதற்கு உரிய பதிலை எழுதிட வேண்டும்.

இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற இயலாமல் போனாலோ அல்லது தேர்வில் தோல்வியுற்றாலோ மாணவர்கள் மனநிலை பாதிப்பு அடையத் தேவை இல்லை. அடுத்த வாய்ப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவோம் என உறுதி ஏற்றிடும் மனதிடம் பெற்றிட வேண்டும். நம்மை ஆளாக்க அயராது பாடுபடும் பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற இயலவில்லையே எனப் பதற்றம் அடைய வேண்டியது இல்லை. எந்தத் துறையில் சென்றாலும் நாம் உயர முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றவர்களாக வாழ்வதே, பெற்றோருக்கு நாம் செய்யும் கைமாறு என உணர்ந்து தேர்வு எழுதிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என வெளியிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *