வைகோ பேட்டி முழு விவரம்

நீதி வென்றது! 13 பேர் சிந்திய இரத்தம், ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தது. அண்ணா தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலைந்தது! இன்று என் வாழ்க்கையில், மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்று, மகிழ்ச்சியின் ஆகாய வெளியில் நான் மிதந்து கொண்டு இருக்கின்றேன்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாகப் போராடி வருகின்றேன். அதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில், 2010 செப்டெம்பர் 28 ஆம் நாள் தீர்ப்பு வந்தது. நீதியரசர் பால் வசந்தகுமார், எலிபி தர்மாராவ் மற்றும் ஒரு நீதிபதி அமர்வில், ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி உத்தரவு பிறப்பித்தார்கள். வேதாந்தா நிறுவனம் மறுநாளே உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, உண்மைகளை மறைத்துக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை ஆணை பெற்றார்கள். அதன்பிறகு, இத்தனை ஆண்டுக்காலமாக வழக்கு நீடித்து வருகின்றது.இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12 ஆம் நாள் கிராம மக்களின் போராட்டம் தொடங்கியது. 100 ஆம் நாளான மே 22 ஆம் நாள், காவல்துறை திட்டமிட்டு, 13 பேரைச் சுட்டுப் படுகொலை செய்தது. ஸ்டெர்லைட் ஆலையின் கூலிப்படையாக, அண்ணா தி.மு.க. அரசின் காவல்துறை செயல்பட்டது.உடனடியாக நான், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தேன். எனக்காக அஜ்மல்கான் வாதாடினார்.

அரசாங்கம் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், அண்ணா தி.மு.க. அரசு, கொள்கை முடிவு எடுக்கவில்லை. தமிழக அமைச்சரவை கூடி விவாதிக்கவில்லை; சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. பூனைக்கும் தோழன்; பாலுக்கும் காவல் என்ற நிலையில் இருந்தது. ‘Running with the hare and hunting with the hound’ என்ற கண்ணாமூச்சி மோசடி நாடகத்தை நடத்தியது. அதாவது முயலோடு சேர்ந்தும் ஓடுவது; வேட்டைநாயோடு சேர்ந்து துரத்துவது. இதன்பிறகு, ஸ்டெர்லைட் நிர்வாகம், தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்திற்குச் சென்றது. அங்கே நீதிபதி யார்? உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற பத்தாவது நிமிடமே, பசுமைத் தீர்ப்பு ஆயத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். அவர் என்னைப் பேசவே விடவில்லை.

மற்ற எதிர்மனுக்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளலாம்; ஆனால், வைகோவின் எதிர்மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று, ஸ்டெர்லைட் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் வாதாடினார். ஏன்? என்று கேட்டேன். இவர் அரசியலுக்காகப் போராடுகிறார். தேவை இல்லாமல், பழைய பிரச்சினைகளைக் கிளப்புகின்றார். எனவே, இவரது மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றார். நான் கடுமையாகப் போராடினேன். அதன்பிறகு, என்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொண்டார்கள்.

அதன்பிறகு, மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான அமர்வு, ஏழு நாள்கள் விசாரணை நடத்தியது. நான் ஒன்றரை மணி நேரம் வாதாடினேன். 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிகளின்படி, ஆலையின் புகைபோக்கி உயரம் 100 மீட்டர் இருக்க வேண்டும்; ஆனால், 60 மீட்டர்தான் இருக்கின்றது. இத்தனை ஆண்டுகளாக நச்சுப்புகையை வெளியேற்றி இருக்கின்றது. ஆனால், இந்தத் தகவலை, தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் சொல்லவில்லை; தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உடந்தையாக இருக்கின்றது என்ற உண்மையை, அங்கே பணிபுரிந்து ஓய்வு பெற்ற வேலழகன் என்ற அதிகாரி என்னைச் சந்தித்துக் கூறினார். இதை நான், தருண் அகர்வால் அமர்வில் கூறினேன்.

அதன்பின்னர், ஆலையைத் திறக்கலாம் என்று அவர் அளித்த உத்தரவில், என் வாதத்தில் உள்ள நியாயங்களை 15 பாராக்கள் சொல்லி, புகைபோக்கியின் உயரத்தைக் குறைக்க வேண்டும் என்று சொன்னார்.ஆலையில் 4 புகை போக்கிகள் இருப்பதாக, ஸ்டெர்லைட் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் பொய் சொன்னார். அதை நான் கடுமையாக எதிர்த்தேன். யாரை வேண்டுமானாலும் போய்ப் பார்க்கச் சொல்லுங்கள்; அங்கே ஒரேயொரு புகைபோக்கி மட்டும்தான் இருக்கின்றது. சல்ப்யூரிக் அமிலம், பாஸ்பரம் அமிலப் புகை போக்கிகளைப் பற்றி இவர் சொல்கிறார் என்றேன்.

சுற்றுச் சூழல் விதிகளுக்குப் புறம்பாக இருக்கின்றது; உற்பத்தியைக் குறைக்க வேண்டும் எனத் தீர்ப்பு வந்தது. உற்பத்தியைக் குறைக்க முடியாது; புதிய புகை போக்கிகள் அமைப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்றார்கள்.இதன்பிறகு, ஆலையைத் திறக்கலாம் என்ற மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தீர்ப்பை அனுமதியை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத் வழக்குத் தொடுத்தது. நானும் வழக்குத் தொடுத்தேன்.

உச்சநீதிமன்றத்தில் ரோகிங்டன் நாரிமன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. நான் பொடா சட்டத்தின் கீழ் நான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அவரது தந்தையார் ~பாலி நாரிமன் எனக்காக வாதாடி இருக்கின்றார்.உச்சநீதிமன்றத்தில் என்னைப் பார்த்த நாரிமன், ‘நீங்கள் யார்?’ என்று கேட்டார். கருப்புக் கோட்டு போட்டு இருந்ததால், என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை, Who are you? என்று கேட்டார்.

I am vaiko. நானும் இந்த வழக்கில் ஒருவன் என்றேன். உங்களுக்காக யார் வாதாடப் போகிறார்? என்று கேட்டார். நானே வாதாடப் போகிறேன் என்றேன். வழக்கமாக நீதிமன்றத்தில் இதைச் சொல்ல அனுமதிப்பது இல்லை. ஆனால், நீதிபதி நாரிமன் பதிவாளரை அழைத்து, ‘வைகோவின் மனுவையும் இணைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம்’ என்றார். எடுத்துக் கொண்டார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள்; நான் இன்னும் 10 நிமிடங்களில் ஆணை பிறப்பிக்கப் போகின்றேன் என்று சொன்னார்.

நான் மனம் உடைந்துபோய்க் கேட்டேன். நான் பேசுவதற்கு நீங்கள் வாய்ப்பே தரவில்லையே? என்று கேட்டேன். என்ன பேசப் போகின்றீர்கள்? என்று கேட்டார். தூத்துக்குடியில் 13 பேர் திட்டமிட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்களே, அவர்களுடைய இரத்தம் இந்த நீதிமன்றத்தில் நீதி கேட்கின்றது என்று சொன்னேன். ‘The blood spilled in the soil of Thoothukudi on sterlite issue, who were brutally killed by the pre meditated plan of the Tamilnadu Police and the Tamilnadu Government, henchmen of sterlite, crave justice in this court’ என்று சொன்னேன்.

அதற்கு முன்பு, ஆலையைத் திறக்கலாம் என்று 2013 ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, நான் இரண்டு மேல் முறையீடு செய்து இருந்தேன். தமிழ்நாடு அரசும் ஒப்புக்கு ஒரு மேல் முறையீடு செய்து இருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசு வழக்கறிஞரோ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞரோ, இதே பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றது என்பதைச் சொல்லவே இல்லை. இதை நான் சொன்னபோது, நீதிபதி ‘அப்படியா?’ என்று கேட்டார். அதையும் இத்துடன் சேர்த்து விசாரியுங்கள் என்றேன்.

உடனே கோர்ட் மாஸ்டரை அழைத்தார். “2013 இல் போட்ட வழக்குகளையும், இத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார். இப்பொழுது நான் முதல் அமைச்சரைக் கேட்கிறேன். ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக, உங்கள் வழக்கறிஞர் ஏன் சொல்லவில்லை? ஏன் இதை மறைத்தீர்கள்? இதன்பிறகு, 2013 வழக்குகளையும்சேர்த்து விசாரித்தார்கள். 40 நாள்கள் விசாரணை. ஆலையைத் திறந்து விடுவார்கள் என்ற நிலையில், 2019 பிப்ரவரி 4,6,7 ஆகிய நாள்களில் விசாரணை நடந்தது. 4 ஆம் தேதி இரவில் சென்னைக்கு வந்து, நெல்லை சென்று, மறைந்த சுப்புரத்தினம் மகன் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு அன்று இரவே மீண்டும் டெல்லி சென்றேன்.

நீதிமன்றத்தில் உட்கார்ந்து இருந்தேன். தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் பேசி முடித்தவுடன் எழுந்தேன். உங்களை நான் அழைக்கவில்லை என்றார் நீதிபதி ரோகிங்டன் நாரிமன். வெட்கப்பட்டு உட்கார்ந்து விட்டேன். மறுநாள், இதே போல ஆகிவிடுமோ? என்று கருதி, அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். ஸ்டெர்லைட் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் நான்கு மணி நேரம் வாதாடினார்.அடுத்து, தமிழ்நாடு அரசு வழக்குரைஞரை அழைக்கப் போகிறார் என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது, மிஸ்டர் வைகோ, புதிதாக என்ன சொல்லப் போகின்றீர்கள்? என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

அவர்கள் எங்கே போனாலும் சரி, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்போம் என்று, வேதாந்தா அதிபர் அனில் அகர்வால், எந்த அடிப்படையில் சொன்னார்? என்று கேட்டேன். அப்படி ஒன்றும் சொல்லவில்லை என்று, ஸ்டெர்லைட் வழக்குரைஞர் சொன்னார். நான் அதை நிரூபிக்கின்றேன் என்று சொன்னேன்.இவர் அரசியலுக்காக எதிர்க்கின்றார்கள். இரண்டு லட்சம் பேரைத் திரட்டுவோம் என்பார்கள். 20 ஆயிரம் ஓட்டு வாங்க முடியாது என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் கூறினார்.

இதை நீதிமன்றத்தில் நான் கேட்டேன். நீதிபதி அவர்களே, அரசியல்வாதியாக இருப்பது பாவமா? குற்றமா? “Is it a sin to be a politician?’’ என்று கேட்டேன். ‘இல்லை’ என்றார் நீதிபதி.இதே வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டுக்காகக் கே.கே. வேணுகோபால் வாதாடினார். அப்போது நான் வாதாடும்போது சொன்னேன்: நான் சுயநலத்திற்காகவோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்காகவோ ஸ்டெர்லைட்டை எதிர்க்கவில்லை. மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கக் கொடுத்து இருந்த உரிமத்தை, விவசாயிகள் எதிர்ப்பின் காரணமாக, சரத் பவார் திரும்பப் பெற்றுக்கொண்டார். அதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிறுவனம் ஏன் வழக்குத் தொடுக்கவில்லை? அதன்பிறகு, கோவா, குஜராத் மாநிலங்களில் அமைக்க முயன்று ஒப்புதல் கிடைக்காததால், தமிழகத்தில் அண்ணா தி.மு.க. அரசிடம் உரிமம் பெற்று, தூத்துக்குடி மக்களுக்கு எமனாக வந்து உட்கார்ந்து இருக்கின்றார்கள் என்று சொன்னேன்.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டின் லிபரான் அவர்கள், There is no need to vouch for your honesty and integrity; it is known to everybody’ உங்கள் நேர்மைக்கும் நாணயத்திற்கும் எவரும் சான்றிதழ் தரத் தேவை இல்லை; அனைவரும் அறிந்த ஒன்று’ என்று சொன்னார். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு நாளேடோ, ஒரு வார ஏடோ, இதை வெளியிடவில்லை. வைகோவின் நாணயத்திற்கு, தலைமை நீதிபதி லிபரான் நற்சான்றிதழ் வழங்கினார் என்று ஒரு வரி எழுதவில்லை. மாறாக, அவர் ஏதாவது ஒரு சிறு குறை சொல்லி இருந்தால், அதைத்தான் எட்டுக்காலம் செய்தியாக வெளியிட்டு இருப்பார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் சொன்னேன்.

உடனே நீதிபதி நாரிமன் சொன்னார்: “We also know that அது எங்களுக்கும் தெரியும்” என்றார்.அதன்பிறகு, என்னென்ன காரணங்களுக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது? வெளியாகின்ற நச்சுப்புகையின் அளவு என்ன? புகை போக்கி 100 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்; ஆனால், 60 மீட்டர்தான் இருக்கின்றது. அதனால், 2013 மார்ச் 23 ஆம் தேதி ஆலையில் இருந்து வெளியான நச்சுப்புகையால், தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கானவர்கள் மயங்கி விழுந்தார்கள். உடனே நான் அங்கே சென்று போராட்டம் நடத்தினேன்.

இந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் நாள் உச்சநீதிமன்றம் ஆலையை மூடும்படி உத்தரவு பிறப்பித்து விடும் என்று கருதிய முதல்வர் ஜெயலலிதா, ஒரு நாடகம் நடத்தினார். மார்ச் 30 ஆம் நாளே, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக, ஆலையை மூடும்படி ஒரு உத்தரவு பிறப்பித்தார்கள். ஆனால், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பட்நாயக், கோகலே அமர்வு, ஆலையைத் திறக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், மகா பெரிய சக்திகளை எதிர்த்து, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கப் போராடுகின்ற, இந்த மனுதாரரின் நேர்மையை, துணிச்சலை நாங்கள் பாராட்டுகின்றோம் என்று கூறி இருந்தனர்.

நான் உடனே நீதிபதியிடம் சொன்னேன்: “மராட்டியத்தைப் போல நாங்கள் ஆலையை உடைத்து நொறுக்கவில்லை. நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பினோம்.ஆனால், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. நாங்கள் வீரத்தில் மராட்டியர்களுக்குக் குறைந்தவர்கள் அல்ல. பிரித்தானியப் பேரரசை எதிர்த்து, முதன்முதலில் வாள் உயர்த்தியவர்களே நாங்கள்தான்” என்றேன். அப்போது நீதிபதி, “நீங்கள் பொதுநலனுக்காகப் போராடுகின்றீர்கள். தொடர்ந்து செயல்படுங்கள்” என்றார்.

இதை எல்லாம் 7 ஆம் தேதி என்னுடைய வாதத்தில் எடுத்துச் சொன்னேன். எதிர்த்தரப்பிற்கு 40 வழக்கறிஞர்கள் இருக்கின்றார்கள். எனக்கு ஆனந்த செல்வமும், சிவபால முருகனும் எடுத்துக் கொடுக்கின்றார்கள். 40 தீர்ப்புகள் இருக்கின்றன. அதை எல்லாம் சுருக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். பக்கங்களைப் புரட்ட வேண்டும். அதனால் எனக்குப் பதற்றமாக இருக்கின்றது என்று நீதிபதியிடம் சொன்னேன். உடனே நீதிபதி நாரிமன், ‘இல்லை. எங்களைத்தான் நீங்கள் பதற்றப்பட வைத்துக்கொண்டு இருக்கின்றீர்கள்’ என்றார். அங்கே இருந்த அனைவரும் சிரித்தனர்.

தொடர்ந்து வாதங்களை எடுத்து உரைத்தேன். உலகின் பல நாடுகளில் இதுபோன்ற ஆலைகளில் உள்ள புகை போக்கிகளின் உயரத்தைப் பற்றிய ஆவணங்களைக் கொடுத்தேன். அதை நீதிபதி ‘பார்த்துவிட்டேன்’ என்றார். அதே ஸ்டெர்லைட், ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் 165 மீட்டர் உயரத்தில் புகைபோக்கி அமைக்கப் போவதாகச் சொல்லி இருக்கின்றார்கள் என்றேன்.

அது மட்டும் அல்ல; ஸ்டெர்லைட் குறித்து உண்மை அறியும் குழுவுக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகள் எவரையும் நியமிக்கக்கூடாது என்று ஸ்டெர்லைட் சொன்னது. அப்படி என்றால், தமிழ்நாட்டு நீதிபதிகள் நேர்மை தவறியவர்களா? உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் உலகப் புகழ் பெற்ற தீர்ப்புகளை வழங்கியவர்கள் எங்கள் தமிழ்நாட்டு நீதிபதிகள். இந்திய நாடே புகழ்கின்ற தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் அவர்களால் வார்ப்பிக்கப்பட்டவன் நான்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், தாமிர உற்பத்தி அடியோடு முடங்கி விட்டது; ஆயிரக்கணக்காக கோடிகள் நட்டம் என்கிறார்கள். மராட்டியத்தில் விவசாயிகள் ஆலையை உடைத்து நொறுக்கியபோது, 300 கோடி நட்டம் ஆனதே, ஏன் நீங்கள் நீதிமன்றம் போகவில்லை? ஆஸ்திரேலிய நாடு, மோசமான தரத்தில் உள்ள தாமிர அடர்த்தியைத்தான் தருகின்றார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் உயர்தரத் தாமிரம் கிடைக்கின்றது. ஏன் அங்கே வாங்கவில்லை?

தாமிர அடர்த்தியைப் பிரிக்கும்போது, அதில் தங்கம், வெள்ளியும் எடுக்கின்றார்கள். நிக்கல், ஆர்சனிக், லெட், குரோமியம், துத்தநாகம், கார்டிமம் இவை எல்லாமே, புற்று நோயைத் தருகின்ற கார்சோஜெனிக் காரணிகள். அது எந்த அளவிற்கு வெளியாகிறது என்பதை ஸ்டெர்லைட் கூகுள் ஆவணங்களில் இருந்தே எடுத்துக் கொடுத்தேன். இதனால், மக்களுக்கு நோய்கள் வந்து, நிறையப் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்கள் 100 கோடி செலவழிப்பதாகச் சொல்கின்றார்கள். ஆனால், மக்கள் உயிர்தான் முக்கியம். இதற்கு ஆதரவாக, இந்திய அரசியல் சட்டத்தின் முகப்பு வரிகளை எடுத்துச் சொன்னேன்.

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens JUSTICE, social, economic and political; LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity and to give ourselves this constitution; என்பதுதான் கருத்து.

மக்களுக்காகத்தான் சட்டம். சட்டத்திற்காக மக்கள் அல்ல.அது மட்டும் அல்ல; இந்திய அரசியல் சட்டம் 48 ஏ பிரிவு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று சொல்கின்றது. அந்த அடிப்படையில், மக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த உண்மைகளைக் கண்டு அறிவதற்காக, மதுரை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சார்பில் ஹென்றி திபேன் அவர்கள் அமைத்த 13 உறுப்பினர்கள் கொண்ட குழுவில், 3 பேர் முன்னாள் நீதிபதிகள், காவல்துறைத் தலைவர்கள் இருவர், இரண்டு மருத்துவர்கள், இரண்டு தடயஇயல் அறிஞர்கள், ஒரு வழக்குரைஞர் இடம் பெற்று இருந்தனர். அவர்கள், ஏழு நாள்கள் இடத்தைப் பார்வை இட்டு, 2300 பக்க அறிக்கை; ஐந்து தொகுப்புகளாகத் தாக்கல் செய்து இருக்கின்றனர்.

அதில், அவர்கள் என்ன சொல்லி இருக்கின்றார்கள் தெரியுமா? போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே, அரசு வண்டிகளுக்குக் காவல்துறையினரே தீ வைத்தார்கள். போராட்டக்காரர்கள் சிலரை அடையாளம் கண்டு, அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்காக, நெற்றியிலும், மார்பிலும் சுட்டுக் கொன்று இருக்கின்றார்கள். ஸ்னோலின் என்ற 16 வயது பள்ளி மாணவியின் வாயில் புகுந்த குண்டு, பின்மண்டை வழியாக வெளியேறி இருக்கின்றது. தலை வெடித்து மூளை சிதறி இறந்து போனாள். தூக்குவாளியில் சோறு கொண்டு போன, திரேஸ்புரம் பெண்மணியைப் பத்து அடி அருகில் இருந்து சுட்டு இருக்கின்றார்கள். அவரது மண்டை சிதறி, மூறை கீழே கிடந்தது. அன்று மாலையே அங்கே சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே அரசியல்வாதி நான்தான். அன்று இரவு 9 மணி முதல் விடிகாலை 4 மணி வரை, அனைத்து வீடுகளுக்கும் சென்றேன். வேறு யாரையும் அவர்கள் உள்ளே விடவில்லை. அந்த மக்கள், நீதி கேட்கின்றார்கள் என்று சொன்னேன்.

இன்றைக்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக நீதிபதிகள் அறிவித்து இருக்கின்றார்கள். தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தீர்ப்பைக் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டு விட்டதாக, நீதிபதி நாரிமன், நீதிபதி நவீன் சின்கா அமர்வு தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. நான் பதறிப்போய்ப் பக்கங்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, நீதிபதி நாரிமன் என்னைப் பற்றி நீதிபதி நவீன் சின்காவிடம் சொல்லிக்கொண்டே இருந்ததாக, உடன் இருந்தவர்கள் சொன்னார்கள்.

தமிழ்நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி இருக்கின்ற உச்ச நீதிமன்றத்திற்கு, நீதிபதிகளுக்குத் தலைவணங்கி நன்றி தெரிவிக்கின்றேன். நீதி காப்பாற்றப்படும்; ஜனநாயகம் பாதுகாக்கப்படும் தங்களைக் காக்கின்ற காவல் தெய்வங்களாக நீதிபதிகளை மக்கள் கருதுகின்றார்கள். தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்குப் போகும்படிக் கூறி இருக்கின்றார்கள். இனி, அவர்கள் அங்கே போவார்கள்.

விட மாட்டோம்; ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க விட மாட்டோம். தூத்துக்குடி மக்களின் உயிர்களைப் பறிக்கின்ற, கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுக்கின்ற ஸ்டெர்லைட் நிர்வாகம், நீதிக்கு முன்னால் மண்டியிட்டுத் தோற்றது தோற்றது தோற்றது. நீதி வென்றது; அண்ணா தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலைந்தது.தூத்துக்குடி மக்களின் 100 நாள்கள் அறப்போராட்டம் மட்டும் அல்ல; 13 பேர் சிந்திய இரத்தம், ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தது. நீதி வாழ்க! என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ தஞ்சாவூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *