தமிழ்நாடுபுதிய செய்திகள்

வைகோ அறிக்கை

Vaiko Report

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு எதிர்பாராது வீசிய சூறைக்காற்றால் பல இலட்சம் வாழைகள், நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் முழுவதுமாக விழுந்து விவசாயிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அறிவியல் உபகரணங்கள், வானிலை நிலவரங்களால் உணரப்படாத இச்சூறைக்காற்றால் நான்குநேரி, இராதாபுரம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் வட்டங்களைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு விழுந்துவிட்டன. வாழை பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளின் வாழ்வு அடியோடு நிர்மூலமாகிவிட்டது. குமரி மாவட்டத்தில் சில இடங்களில் தென்னை மரங்களும், வேம்பு, வாகை உள்ளிட்ட விவசாயிகள் வளர்த்துப் பாதுகாத்து வந்த மரங்களும் வேரோடு சாய்ந்துவிட்டன.

ஒரு சில இடங்களில் கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து உள்ளன. ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்து உள்ளன. வங்கிகளிலும், தனியாரிடமும் கடன் வாங்கி ஓரளவு வருவாய் ஈட்டலாம் என்று நம்பி வாழை பயிரிட்ட விவசாயிகள் நிலையை நினைக்கும்போது தாங்க முடியாத வேதனை ஏற்படுகிறது.

இச்சூறைக்காற்றுடன் கூடிய மழையில், புகழ்பெற்ற கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வந்து செல்லும் அரிய வகை பறவையினங்களும் பரிதாபமாக இறந்துள்ள செய்தியும், படங்களும் மனதை வாட்டுகின்றன.

தற்போது சேத மதிப்பீட்டுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றார்கள். எதிர்பாராத சூறைக்காற்றுத் தாக்குதலால் சேதமடைந்துள்ள வாழைகள், தென்னை உள்ளிட்ட மரங்கள், வீடுகள் விபரங்களை அரசுத் துறையினர் விரைவாக கணக்கெடுத்து, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டதாகக் கருதி தேவையான நிவாரணங்களை வழங்கிட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker