பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பேசிய கி.வீரமணி கிருஷ்ணர் பற்றி கூறிய கருத்துகள் சர்ச்சையானது. இதனால் அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தது.
இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்த மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இது குறித்து கேட்கபட்ட கேள்விக்கு வீரமணி கிருஷ்ணர் பற்றி பேசிய பேச்சு பிரச்சார மேடையில் பேசியது அல்ல. அது பெரியார் திடலில் பேசியது.கேவலபடுத்தி, கொச்சைப்படுத்தி பேச வேண்டும் என்று அவர் அப்படி பேசவில்லை. சில ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் திட்டமிட்டு தவறான செய்திகளை மக்களிடம் பரப்புகின்றனர்.
இது உண்மை இல்லை. உண்மையாக இருந்திருந்தால் தவறு என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். திமுகவை பொறுத்தவரை ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கைதான். கலைஞர் கூட பராசக்தி பட வசனத்தில் தெளிவாக கூறி இருப்பார். கோயில்கள் கூடாது என்பதற்காக அல்ல, கோயில்கள் கொடியவர்கள் கூடாரமாக ஆகிவிட கூடாது என்று. இதுதான் எங்கள் கொள்கை. திமுகவில் 90 சதவீதம் இந்துக்கள் தான் இருக்கிறார்கள்.
இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் என் மனைவியார் கூட கோயில்கள் சென்று வழிபட்டு கொண்டுதான் இருக்கிறார். ஏன் கோயிலுக்கு செல்கிறீர்கள் என்று நான் கேட்டதில்லை. அதனால் வீரமணி விவகாரம் திட்டமிட்டு வேண்டுமென்றே நடக்கிற பிரச்சாரமே தவிர வேறொன்றும் இல்லை என கூறியுள்ளார்.