வீரன்… தீரன்… சேவாக்

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்.

தமிழ்நேரலை

கிரிக்கெட் போட்டிகளில் பவுலர்கலின் நல்ல பந்துகளை அவற்றிக்கு உரிய மதிப்பளித்தும், மோசமான பந்துகளை அடித்தும் விளையாடுவது ஒரு வகை என்றால் அவர்களின் நல்ல பந்துகளையும் அசாதாரணமாக அடித்து விளையாடி, பவுலர்களின் மன உறுதியை நிலைகுலைய செய்து அவர்களை தவறுகள் செய்ய செய்வது மற்றொரு வகை. அதை ஒருநாள் போட்டிகளில் செய்து காட்டியவர்கள் கில்கிறிஸ்ட், கெயில், ப்ரண்டன் மெக்குலம், வார்னர் போன்றவர்கள் என்றாலும் அதை டெஸ்ட் போட்டிகளிலும் செய்து தன்னை நிரூபித்தவர் சேவாக். அவரின் 40 வது பிறந்த நாள் இன்று.

2001ஆம் ஆண்டு பிலோம்பாண்டினில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சேவாக் அறிமுகமானார். பொல்லாக், நிதினி, ஹைவர்டு ஆகியோரின் வேக பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டிராவிட், லஷ்மண், கங்குலி நடையை கட்ட 68 ரன்களில் 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறி கொண்டு இருந்தபோது களம் இறங்கினார் சேவாக். சச்சின் உடன் இணைந்து சிறப்பாக விளையாடிய சேவாக் தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்தார். சச்சினின் 155, சேவாக் அடித்த 105 ரன்கள் உதவியுடன் இந்திய அணி முதல் இன்னிங்சில் 379 ரன்கள் எடுத்தது. இருந்த போதிலும் இந்திய அணி அந்த போட்டியில் தோல்வி அடைந்தது.

அதன் பின் 2002 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 270 ரன்களை சேவாக், கங்குலி சதங்களின் உதவியுடன் துரத்தி பிடித்தது இந்திய அணி. அந்த போட்டியில் 104 பந்துகளில் 126 ரன்கள் எடுத்த சேவாக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அத்தொடரின் அரையிறுதி போட்டியில் சேவாக் , யுவராஜ் சிங் ஆகியோரின் அரை சதங்கள் உதவியுடன் இந்திய அணி 261 ரன்கள் எடுத்தது. அதன் பின் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி கிப்ஸ், காலிஸ்ன் சிறப்பான பேட்டிங்கில் 38 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது. ஜாகீர்கான், நெக்ரா, கும்புளே, ஹர்பன்சிங் என பிரதான பந்து வீச்சாளர்களாலே ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தலையை பெய்த்து கொண்டு நின்றார் கேப்டன் கங்குலி.அப்போதுதான் 116 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த கிப்ஸ் காயத்தால் வெளியேறினார். அதன் பின் பந்து வீச அழைக்கப்பட்ட சேவாக் 97 ரன்கள் எடுத்த காலிஸ், மார்க் பவுச்சர், குரூஸ்னர் என மூன்று முக்கிய விக்கெட்களை விழ்த்த 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.தொடர்ச்சியாக இரண்டு ஆட்ட நாயகன் விருதுகளை பெற்ற சேவாக் இந்திய அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார். இறுதி போட்டி மழையால் கைவிடப்பட இந்தியா, இலங்கை அணிகள் தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இத்தொடரில் அதிகபட்சமாக சேவாக் 271 ரன்கள் எடுத்தார்.

அதற்கு பிறகு 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. அதன் முதல் இன்னிங்ஸில் பிரீட் லீ, நாதன் பிரோகன் ஆகியோரின் பந்து வீச்சை அடித்து நொறுக்கிய சேவாக் 25 பவுண்டரிகள்,5 சிக்ஸர்கள் உடன் 233 பந்துகளில் 195 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களின் மோசமான பேட்டிங்கால் இந்திய அணி அந்த டெஸ்டில் தோல்வி அடைந்தது. இன்று வரை சேவாக்கின் சிறந்த இன்னிங்ஸ் ஆக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுவது அந்த 195 ரன்களைதான்.

2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முல்தானில் நடைபெற்றது. அதில் அக்தர், முகமது சமி, சாக்களின் முஸ்தாக் ஆகியோரின் பந்து வீச்சை நான்கு பக்கமும் சிதற அடித்த சேவாக் 375 பந்துகளில் 39 பவுண்டரிகள்,6 சிக்சர்கள்களுடன் 309 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வீரர்களை மட்டுமில்லாமல் அந்நாட்டு ரசிகர்களையும் மிரள வைத்தார். சச்சின், சேவாக் பாட்னர்ஷிப் அந்த போட்டியில் 336 ரன்கள் சேர்த்தது. இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அத்தொடரையும் கைப்பற்றியது. மீண்டும்   இரண்டு வருடங்கள் கழித்து லாகூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 679 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அந்த அணியில் மாலிக் அரை சதமும் யூனிஸ்கான், யூசுஃப், அப்ரிடி, அக்மல் என நான்கு வீரர்கள் சதமும் அடித்தனர். அந்நாட்டு ரசிகர்களின் சந்தோஷம் ஒரு நாள் மட்டுமே நீடித்தது. இந்தியாவின் பேட்டிங்ஐ துவங்கிய டிராவிட், சேவாக் ஜோடி வெளுத்து வாங்கியது. கிட்டத்தட்ட 77 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்த ஜோடி 410 ரன்கள் சேர்த்து மலைக்க வைத்தது.3 ரன்களில் டெஸ்ட் போட்டியில் பார்ட்னர் ஷிப்பில் அதிக ரன்கள் அடித்த ஜோடி என்னும் உலக வரலாற்று சாதனையை தவறவிட்டனர். டிராவிட் தன் பங்குக்கு 233 பந்துகளில் 128 ரன்கள் அடிக்க ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் 247 பந்துகளில் 254 ரன்கள் அடித்தார். அதில் 47 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸர்ம் அடங்கும். டிராவில் முடிந்த இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் சேவாக்.

2008 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டெயின் , நிதினி,மோர்னே மோர்கயில் என மூன்று வேக  பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்து 304 பந்துகளில் 319 ரன்கள் (42 பவுண்டரிகள்,5 சிக்ஸர்கள்) அடித்து டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற தன் சாதனையை தானே முறியடித்து கொண்டார்.அது மட்டும் இல்லாமல் அதிவேக முச்சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் தனதாக்கி கொண்டார். டெஸ்ட் போட்டியில் இரண்டு முச் சதங்களை அடித்த லாரா, பிராட்மேன், கெயில் உடன் தன் பெயரைரையும் இணைத்து கொண்டார் சேவாக்.

2009 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இறுதி போட்டி மும்பையில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 393 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாம் நாளில் தன் இன்னிங்ஸ்ஐ துவங்கிய சேவாக் வேக பந்து வீச்சாளர்கள் மட்டும் அல்லாமல் முரளிதரன், ஹெராத் என இரண்டு முன்னணி சுழல் பந்து வீச்சாளர்களையும் விட்டு வைக்கவில்லை. மும்பை கிரிக்கெட் மைதானமே சிக்ஸர் மழையில் நனைந்தது. அன்று ஒரே நாளில் 82 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்த இந்திய அணி அடித்த ரன்களோ 454/1 . அடுத்த நாளில் மூன்றாவது முச்சதத்தை அடித்து டான் பிராட் மேனாலையும் முடியாத அந்த உலகசாதனையை சேவாக் படைப்பாரா என கிரிக்கெட் அரங்கமே நிரம்பி வழிந்தது.254 பந்துகள் சந்தித்து 40 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களுடன் 293 ரன்கள் எடுத்து வெறும் 7 ரன்களில் அந்த மகத்தான சாதனையை தவறவிட்டார் சேவாக். முரளிதரன் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கமே ஒரு நிமிடம் நிசப்தம் ஆகி பின் கரகோழம் கிளப்பி சேவாக்ஐ சிறப்பித்தது. அந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

அதன் பின் 2011 ஆம் ஆண்டு நடை பெற்ற உலக கோப்பை தொடரில் மொத்தம் 380 ரன்கள் அடித்தார் ஷேவாக். அதே வருடத்தில் இந்தூரில் நடை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 149 பந்துகளில் 219 ரன்கள் அடித்து சச்சினுக்கு பிறகு இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். அதன் பின் தொடர்ச்சியான ஃபார்ம் அவுட்லினால் அணியில்  இருந்து ஒரங்கட்டபட்டார். அதற்கு பிறகு   ஐபிஎலில் விளையாடிய சேவாக் 2015 ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் 8586 ரன்கள் அடித்த சேவாக் அதில் 63 சதவீத ரன்களை சிக்ஸர் பவுண்டரிகள் வழியாக பெற்று உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தான் அடித்த 23 சதங்களில் 13 ஐ 150 ரன்களுக்கு மேலாக மாற்றி உள்ளார்.6 இரட்டை சதங்கள் அடித்த சேவாக்   அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சிறப்பையும் தன் வசம் வைத்து உள்ளார்.2010 ஆம் ஆண்டில் சிறந்த டெஸ்ட் வீரராக ஐசிசியால அறிவிக்க பட்ட சேவாக் அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளையும்  பெற்று உள்ளார். சேவாக் 2011 ஆம் ஆண்டில் சேவாக் நேஷனல் ஸ்கூல் என்ற பெயரில் பள்ளி துவங்கி  நடத்தி வருகிறார். அதில் பயின்று வரும் 22 மாணவர்கள் பல்வேறு விளையாட்டு துறைகளில் தேசிய மற்றும் மாநில அணிகளில் இடம் பெற்று உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *