ராமேஸ்வரத்தில் இறால் மீன் கிலோ 550 ரூபாய்க்கு விற்றதால் மீனவர்கள்மகிழ்ச்சி அடைந்தனர்.ஜூன் 14ல் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு அதிக இறால் கிடைத்தது.
இதனை பதப்படுத்த ஐஸ் பார் இன்றி ஏற்றுமதி வியாபாரிகள் திணறினர். இதனால் வியாபாரிகள் இறாலுக்கு விலை குறைத்ததால் மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் ஜூன் 17 ல் ஐஸ் பார் கிடைக்காமல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல், படகுகளை கரையில் நிறுத்தினர்
ஜூன் 19ல் ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். இதில் சராசரியாக படகிற்கு 200 கிலோ இறால் சிக்கியது. இம்மீனை ஒரு ஏற்றுமதி நிறுவனம் கிலோ 550 ரூபாய்க்கும், பிற ஏற்றுமதி வியாபாரிகள் விலை நிர்ணயிக்காமல் வாங்கி சென்றனர். இருப்பினும் ஒரு நிறுவனம் 550 ரூபாய்க்கு வாங்கியதால் அதே விலையை பிற ஏற்றுமதி வியாபாரிகள் நிர்ணயிப்பார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர்