பெங்களூரில் நடைபெற்ற ரஞ்சி டிராபி காலிறுதி போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தது கர்நாடக அணி. முதல் இன்னிங்ஸில் ராஜஸ்தான் அணி 224 ரன்களும், கர்நாடக அணி 263 ரன்களும் எடுத்தன.
ராஜஸ்தான் அணியின் ராகுல் சாகர் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் கைப்பற்றினார். கர்நாடக அணி வீரர் வினய்குமார் அடித்த 83 ரன்கள் உதவியுடன் அந்த அணி முதல் இன்னிங்சில் 39 ரன்கள் முன்னிலை பெற்றது. ராஜஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்ஸில் 222 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்ஸில் கர்நாடக வீரர் கிருஷ்ணப்ப கௌதம் அதிகபட்சமாக நான்கு விக்கெட்கள் கைப்பற்றினர்.
அடுத்து களம் இறங்கிய கர்நாடக அணி நான்கு விக்கெட்களை இழந்து 185 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணியின் கருன் நாயர் 129 பந்துகளில் 61 ரன்களும், மனிஷ் பான்டே 75 பந்துகளில் 87 ரன்கள் அடித்தும் கடைசி வரை களத்தில் நின்றனர். கர்நாடக வீரர் வினய் குமார் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.