யார் சொல்வது உண்மை

மத்திய நிதியமைச்சர் பதிவு:

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அருண் ஜேட்லி பதிவிட்டு்ள்ளார். பொருளாதாரத்தை முறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியே பணமதிப்பிழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கி முறையை புறந்தள்ளி, அடையாளம் தெரியாத வகையில் பணப்பரிவர்த்தனை நடைபெறும்போது, அது வரி ஏய்ப்புக்கு வித்திடுவதாக அவர் கூறியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரொக்க கையிருப்பு வைத்திருந்தவர்கள் அதை வங்கியில் போடும் நிர்பந்தம் ஏற்பட்டதாகவும் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார். இதன்மூலம் 17.42 லட்சம் கணக்குகள் குறித்து சந்தேகம் எழுந்து, ஆன்லைன் மூலம் விளக்கம் பெறப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதில் சட்டமீறிலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பெருந்தொகைகள் வங்கியில் போடப்பட்டதால், வங்கிகளின் கடன் அளிக்கும் திறன் மேம்பட்டதாகவும், முதலீடுகளுக்கு திருப்பி விடப்பட்டு முறையான பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாறியதாகவும் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புழக்கத்தில் இருந்த ரொக்கம் மொத்தமும் வங்கிகளுக்கு திரும்பிவிட்டது என்பதை வைத்து விமர்சனங்கள் செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வது பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் நோக்கமாக இருக்கவில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாறாக அந்த பணத்தை முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்குள் கொண்டு வருவதும், அந்த பணத்தை வைத்திருந்தவர்களை வரி செலுத்த செய்வதுமே விரிவான நோக்கமாக இருந்தது எனவும் அவர் விளக்கியுள்ளார். ரொக்க பணப்பரிவர்த்தனை முறையில் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இந்தியாவை மாற்ற ஒட்டுமொத்த முறையையும் ஒரு உலுக்கு உலுக்க வேண்டியிருந்தது எனவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையால் வரி வருவாய் மற்றும் வரி செலுத்துவோர் அளவு அதிகரித்துள்ளதாகவும், மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.

 

முன்னாள் பாரத பிரதமர் பதிவு:

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஆயிரம் ரூபாய் மற்றும் அப்போது புழக்கத்தில் இருந்து ஐந்நூறு ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் இரண்டாண்டு நிறைவையொட்டி அதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாதிப்புகளை சரி செய்யும் வகையில் பொருளாதார கொள்கைகளில் நிலைத்தன்மையை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஒவ்வொருவரும் தற்போது உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வயது, மதம், தொழில் என எந்த பாகுபாடும் இன்றி ஒவ்வொரு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதோடு இன்னும் பாதிப்புகள் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறு, நடுத்தர நிறுவனங்கள் இதுவரை மீண்டு வராததன் காரணமாகவே இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முழுமையான பாதிப்புகளை நாம் உணரவில்லை என்றும், பொருளாதார கொள்கைகளை வகுக்கும்போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம் என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மேலும் பணமதிப்பிழப்பு நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், சமூகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றும், இதற்கு சமூகத்தின் ஒவ்வொருவரும் சாட்சியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *