மேகதாது குறித்து ஸ்டாலின்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டி தண்ணீரைத் தேக்கிப் பாசனப் பரப்பை மேலும் விரிவுபடுத்திப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் வரையப்பட்ட, கர்நாடக மாநிலத்தின் 5912 கோடி ரூபாய் மதிப்பிலான “விரிவான திட்ட அறிக்கை”க்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி அளித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

66 டி.எம்.சி காவிரி நீரைத் தேக்கி வைக்கும் இந்த அணைத் திட்டம், தமிழக அரசைக் கலந்து ஆலோசிக்காமல் புதிய அணைகட்டக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முற்றிலும் விரோதமானது.

“புதிய அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கக் கூடாது” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை ஒரு மனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியான அதிமுகவுடன் இணைந்து, தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தின் பொதுநலன் கருதி ஒரே அணியில் நின்று, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேரும் 28.03.2015 அன்று டெல்லி சென்று “மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது” என்று பிரதமர் திரு நரேந்திரமோடியிடம் நேரிலேயே வலியுறுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் மக்கள் பிரதிநிதிகளின் ஒருமித்த கோரிக்கையைத் துச்சமெனத் தூக்கியெறிந்து விட்டு, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு, புதிய அணைகட்ட அனுமதி அளித்திருப்பது தமிழகத்தின் அடிவயிற்றில் எட்டி உதைத்திடும் அடாவடித்தனமான செயலாகும்.

மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன்பு தமிழக அரசின் கருத்தை மத்திய அரசு கேட்டிருக்க வேண்டும். அடிக்கடி டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்திக்கும் தமிழக அமைச்சர்களும், பொதுப்பணித்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவித்து “கடிதம்” எழுதினால் மட்டும் கடமை முடிந்து விட்டதாக அர்த்தமா? சமீபத்தில் கூட டெல்லியில் பிரதமரைச் சந்தித்த முதலமைச்சர் நேரில் வலியுறுத்தி இந்த அனுமதி கொடுப்பதை ஏன் தடுக்கத் தவறினார்? இப்படி பல சந்தேகங்கள் தமிழக விவசாயிகளிடத்தில் எழுகின்றன.

தமிழகத்தின் நெருக்கடியை ஒரு கணம் நினைத்துப்பார்த்து, மேகதாதுவில் புதிய அணை கட்டும் “திட்ட வரைவு அறிக்கைக்கு” கொடுத்துள்ள அனுமதியை மத்திய பா.ஜ.க. அரசு, மறு சிந்தனைக்கு இடம் கொடுக்காமல், உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இத்திட்டத்தைப் பிடிவாதமாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை கர்நாடக மாநில அரசு கைவிட்டுவிட வேண்டும் என்றும், தமிழக அரசின் சார்பில் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி மத்திய அரசின் அனுமதிக்கும், கர்நாடக மாநில அரசு புதிய அணை கட்டும் விவசாயிகள் நேயமற்ற திட்டத்திற்கும், தாமதிக்காமல் தடையாணை பெற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *