காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி;
தமிழ்நாட்டிற்கு பெரும் அநீதி;
இதற்கு வைகோ மத்திய அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது ராசி மணலில் தடுப்பு அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு தொடர்ந்து திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த முனைந்துள்ளது. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, கர்நாடக அரசுக்கு மறைமுகமான ஆதரவு வழங்கி அணை கட்டுவதற்கு எல்லாவகையிலும் உதவி செய்து வருகின்றது.
2014 டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், கர்நாடகத்தை சேர்ந்த பாஜக மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் இல்லத்தில் புதிய அணை கட்டுவதற்கான சதி ஆலோசனை நடந்தது. அக்கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
அப்போதைய மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கவுடா, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இருவரும் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது புதிய அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு வெளிப்படையாக அனுமதி கொடுப்பதில்லை என்றும், அதே நேரத்தில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதைத் தடுப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகத்தான் கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது, ராசி மணலில் தடுப்பு அணைகள் கட்டும் திட்டத்திற்கு 5912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணியைத் தொடங்குவோம் என்று அறிவித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் தடுப்பு அணை கட்டுவதற்கு செயல்திட்டத்தை உருவாக்கி மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு அனுமதி கோரி அனுப்பி வைத்தது.
காவிரிப் பிரச்சனையில் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் மிகத் தெளிவான உத்தரவை வழங்கி இருக்கின்றது. அதன்படி, கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்குத் தமிழகத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். ஆனால், கர்நாடக மாநிலம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மதிக்காமலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்தாமலும் அடாவடித்தனமாக நடந்து வருகின்றது. காவிரி நீர் பங்கீடு தொடர்பான 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களை மீறி, 1965ஆம் ஆண்டிலிருந்து அணைகளைக் கட்டி தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரைத் தடுத்து விட்டது.
சுவர்ணவதி, ஹேமாவதி, கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜ சாகர், வருணா கால்வாய், யாகச்சி போன்ற அணைகள் கட்டியும், நீர்ப்பாசனத் திட்டங்களை விரிவுபடுத்தியும் வந்த கர்நாடக மாநிலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் புதிதாக 3 ஆயிரம் ஏரிகளை உருவாக்கிப் பாசனப் பரப்பைப் பன்மடங்கு அதிகரித்து இருக்கின்றது.
1974 இல், கர்நாடகத்தின் பாசனப்பரப்பு வெறும் 6.8 இலட்சம் ஏக்கர்தான் இருந்தது. காவிரி நடுவர் மன்றம் 1991 இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம் தனது பாசனப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யக் கூடாது என்று தெரிவித்தது.
ஆனால் அதன் பின்னரும் கர்நாடகம் காவிரி பாசனப் பரப்பை அதிகரித்து வந்தது.
2007 இல் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் கர்நாடக அரசு விரிவுபடுத்திய பாசன பரப்பையும் உள்ளடக்கி மொத்தம்18.85 லட்சம் ஏக்கர் நிலத்தைப் பாசன பரப்பாகத் தீர்மானித்து உத்தரவிட்டது.
ஆனால் அதன் பின்னரும் கர்நாடகம் பாசனப் பரப்பை 21 லட்சம் ஏக்கராக அதிகரித்தது மட்டுமின்றி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30 லட்சம் ஏக்கராக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்து இருக்கின்றது.
ஆனால் தமிழகத்தில் 1971 இல் காவிரி பாசன பரப்பு, 25.03 ஏக்கராக இருந்ததை நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில் 24.71 லட்சம் ஏக்கர் என்று குறைத்தது.
இதனால் முப்போகம் சாகுபடி நடந்த காவிரிப்படுகையில் தற்போது ஒருபோக சாகுபடி செய்வதற்குக்கூட நீரின்றி வேளாண்மைத் தொழில் கேள்விக்குறியாகி விட்டது.
இந்நிலையில், மேகேதாதுவில் அணை கட்டுவதற்குக் கர்நாடக மாநிலம் அளித்த செயல்திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்து இருப்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நடவடிக்கை ஆகும்.
கர்நாடகம் தடுப்பு அணை கட்டினால், இனி ஒரு சொட்டு நீர் கூடத் தமிழகத்திற்குக் கிடைக்காது.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பாறைப் படிம எரிவாயு உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்தி, காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் மத்திய பாஜக அரசின் சதித்திட்டத்திற்கு ஏதுவாக, தற்போது மத்திய நீர்வளத்துறை மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளித்து இருக்கின்றது.
இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.
கஜா புயலின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாகி காவிரி டெல்டா மாவட்ட மக்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி தெருவில் நிற்கும் சூழலில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மோடி அரசு கர்நாடகத்திற்கு காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளித்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
பாஜக அரசு தமிழக மக்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு கர்நாடகம் அணை கட்டத் துணைபோனால், வரலாறு காணாத போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறேன். மத்திய நீர்வளத்துறை கர்நாடக அரசுக்கு மேகதாதுவில் தடுப்பு அணை கட்ட வழங்கியுள்ள அனுமதியைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.