தமிழ்நாடு

முழு சிகிச்சை காலதாமதம் ஏன்?

மக்கள் நீதிமையத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் அவர்கள் கஜா புயலினால் பதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

அவர் அங்குள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இரண்டாவது முறையாக அங்குச் சென்று உள்ளார். அவரது டூவிட்டர் பதிவிலிருந்து சில இங்கே

இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது “முதலுதவி” மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும்.

தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு “நல்ல சோறு” போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் “புழுத்துப்போன அரிசியை” சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும்.

அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை கால் பாவி செயலாற்றிட வேண்டும். நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் “கிராம நிர்வாக அதிகாரிகள்” கூடச் சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், ”வெறும் அறிக்கையாகக் காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது”.

வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

கடைமடைப் பகுதிகளுக்குக் காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்பது கேள்விக்கு உரியதாக இருக்கின்றது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker