முரசொலிதலையங்கம்.

முரசொலிதலையங்கம்.

“இந்தப் பிள்ளையின் முயற்சிகள் வெல்லும்!”

‘கழக தலைவர் அவர்களை அழைக்கும் அகில இந்தியா’

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை அகில இந்தியா அழைக்கிறது. அதற்கு முன்னோட்டம் கூறும் நாளாக டிசம்பர் 10ம் நாள் அமைந்திருக்கிறது.

நடைபெற இருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல். இன்னும் சில வாரங்களில் அதற்கான தேர்தல் மேகங்கள் திரள இருக்கின்றது. முதல் இடி இடித்திருக்கிறது டிசம்பர் 10- டெல்லியில். அகில இந்தியக் கட்சிகள் பெரும்பாலும் – அனைத்தும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. மாநிலக் கட்சிகளும் சேர்ந்துள்ளன. நடு நாயகமாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் அமர்ந்துள்ளார்.

இந்தியாவின் ஜனநாயகத்துக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம், தனது சிறகை விரித்து டெல்லியில் முகாமிட்டுள்ளது. அன்று கலைஞர். இன்று மு.க.ஸ்டாலின்.

இன்னும் சொன்னால் இந்த ஜனநாயக ஆபத்தை முதலில் உணர்ந்து சொன்னது மட்டுமல்லாமல், அதனை முறியடிக்க மதச்சார்பற்ற அணியை அகில இந்திய அளவில் உருவாக்க வேண்டும் என்று முதலில் சொன்னதும் தி.மு.க. தலைவர்தான்.

தென்னகத்துக்காகத் தேகத்தைத் தேய்த்துவிட்டு வங்கக் கடலோரம் வாஞ்சையாய் ஓய்வு கொண்டிருக்கும் மூத்த சூரியனாம் முத்தமிழறிஞரின் 2017ம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னையில் ஜூன்-3ம் நாள் கொண்டாடப்பட்டது. கலைஞர் அவர்கள் கோபாலபுரத்தில் கொலு வீற்றிருக்க இராயப்பேட்டையில் நடந்த விழாவுக்கு அகில இந்தியாவே வந்திருந்தது. ராகுல், நிதிஷ்குமார் தொடங்கி இந்திய முகங்களை வரவழைத்திருந்ததன் மூலமாக, ‘மதச்சார்பற்ற கூட்டணிக்கான கால்கோள் விழா அன்றே அரங்கேறியது.

அன்றே சொன்னார், அன்றைய செயல் தலைவர். இன்றைய தலைவர்…

“இந்திய ஜனநாயகத்துக்கு சவால் விடுகின்ற பாரதியஜனதா கட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நாட்டின் நலன்காக்க, மதச்சார்பற்ற கூட்டணி அமைப்போம்” – என்று குறிப்பிட்டார். இப்படி அறைகூவல் விடுத்ததன் மூலமாக முன்னோடும் பிள்ளையாக இருந்தார். மதச்சார்பற்ற அணியைக் கட்டமைக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சிகள் மேற்கொள்ளத் தொடங்காத காலம் அது!

தலைவர் கலைஞர் மறைந்து, தலைவரின் வார்ப்பாக தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பத்தாவது நிமிடமே… “நாடு முழுவதும் காவி வண்ண ம் அடிக்கும் மோடி அரசை வீழ்த்த வா!” என்று முழக்கமிட்டார் மு.க.ஸ்டாலின். மதச்சார்பற்ற அணியைக் கட்டமைக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சிகள் மேற்கொள்ளத் தொடங்காத நேரம் அது!

கலைஞரின் மறைவுக்காக அகில இந்தியத் தலைவர்கள் பங்கெடுத்த கூட்டம் சென்னையில் நடந்தது. புகழ் வணக்கக் கூட்டம் என்பதால் பாரதிய ஜனதா கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் வந்திருந்தார். அவர் நீங்கலாக வந்திருந்த அனைவருமே பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சித் தலைவர்கள். நிதின் கட்கரி பேசிவிட்டுச் சென்ற பிறகு, அந்த மேடையே மதச்சார்பற்ற அணிக்கான தொடக்க விழா மேடையாகவே அமைந்திருந்தது. மீண்டும் அந்தப் பேச்சுக்களை எடுத்துப் படித்தால் புரியும்.

தேவ கவுடா தொடங்கி குலாம் நபி ஆசாத் வரை. நிதிஷ்குமார் தொடங்கி பருக் அப்துல்லா வரை அனைவருமே இந்திய ஜனநாயகம் காக்கும் போர்க்களத்தில் கலைஞர் இதுவரை இருந்த இடத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் செயல்பட வேண்டும். செயல்படுவார் என்றே அழைப்பு விடுத்து நம்பிக்கை தெரிவித்துச் சென்றார்கள்.

சென்னையில் விதைத்தது தி.மு.க.! இப்போது டெல்லியில் முளைத் திருக்கிறது. இந்தியா முழுக்க விருட்சமாய் வளரும்.

1977, 1988, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் அகில இந்திய அரசியலில் ஏற்பட்ட பெரு மாற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கும் கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தது என்பது வரலாறு. ‘ஆதரித்தாலும் எதிர்த்தாலும் இரண்டிலும் உறுதியாக இருப்பவர் கலைஞர் கருணாநிதி’ என்று இந்திராகாந்தி பட்டயம் கொடுத்துவிட்டுப் போய் 38 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதோ, ஆதரித்தாலும் எதிர்த்தாலும் உறுதியாக இருக்கும் தலைவர் இவர்தான் என்று அகில இந்தியத் தலைவர்கள் இனம் கண்டுள்ளார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது தான் நமது அரசியல் நிலைப்பாடு என்பதை அறிவித்ததன் மூலமும் –

பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான அணி என்பது காங்கிரஸ் நீங்கலான கட்சிகளின் அணி அல்ல என்று சொன்னதன் மூலமும் –

காங்கிரசையும் உள்ளடக்கிய மாநிலக் கட்சிகளின் அணிச் சேர்க்கை மூலமாகவே பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்று அறிவித்ததன் மூலமும் – அகில இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

கடவுள் நம்பிக்கையாளர்கள், “பிள்ளையார் சுழி’ என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரிப்பார்கள். கலைஞரின் நம்பிக்கையாளர்கள் சொல்கிறார்கள், ‘இந்தப் பிள்ளையின் முயற்சிகள் வெல்லும்!’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *