நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
இதில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட், மற்றும் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த பட்ஜெட்டை முதல்முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
முன்னதாக, தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக, நேற்றைய தினம் இந்த கூட்டத்தொடரை சிறப்பாக நடத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத் தொடரில் இடைக்கால சபாநாயகர் எம்பி வீரேந்திரகுமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து 19ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. வரும் 20ஆம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார்.
இதைத்தொடர்ந்து, முத்தலாக் தடை உள்பட முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது. மேலும் வேலையின்மை, குடிநீர் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை குறித்து எதிர்கட்சிகள் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இன்று தொடங்கும் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் வரும் ஜூலை மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறவும், சட்ட மசோதாக்களுக்கு ஆதரவு கோரியும், ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமீபத்தில் சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்), தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன், திமுக சார்பில் டி.ஆர்.பாலு மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மோடி, மக்களவையின் முதல் கூட்டத்தை புதிய எம்.பி.க்களுடன் உத்வேகத்துடனும், புதிய சிந்தையுடனும் தொடங்க வேண்டும். நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.