“சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் அவர்களின் வாழ்த்துச் செய்தி”
டிசம்பர் மூன்றாம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். “மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய – சம வாய்ப்பை உறுதி செய்யும் நிலையான சமுதாய வளர்ச்சியே 2018-ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தின் முக்கியக் கோட்பாடு” என்று ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் கழக ஆட்சி நடைபெற்ற போதே மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களுக்குச் சமுதாயத்தில் சம வாய்ப்புகள் அளிப்பதற்கும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றித் தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்திட விரும்புகிறேன்.
மாற்றுத் திறனாளிகளுக்கு முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டது; இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் ஆரம்பிக்கப்பட்டது கழக அரசில்தான். அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறை செலுத்தும் வண்ணம் அந்த வாரியத்திற்கு முதலமைச்சரே தலைவராக இருப்பார் என வரையறுக்கப்பட்டதும், “மாற்றுத்திறனாளிகள்” என்று நியாயமான பெயர் சூட்டி அழகு பார்த்து – அவர்களைக் கண்ணியத்துடன் அழைக்கும் நடைமுறையைக் கொண்டு வந்ததும்; மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் படி அரசுத் துறைகளில் நியமனம் செய்வதற்கு “சிறப்பு நேர்வாக” (Special Drive) தேர்வு நடத்தியது மட்டுமின்றி, அந்த இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்ததும் கழக ஆட்சியில்தான்!
ஆகவே, 2018 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மாற்றுத் திறனாளிகளின் போராட்டங்களை ஆட்சியிலிருப்போர் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்றும், அவர்களின் மனித உரிமைகளை, சட்டபூர்வமான உரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில்- கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை அவர்கள் முழுமையாகப் பெறுவதற்கு அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி, சமுதாயத்தில் அவர்கள் சம வாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.