மாற்றம் ஏற்படுத்த போகும் முக்கிய தொகுதிகள் சிறப்பு கட்டுரை

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆனது மே மாதம் 23 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நாட்டில் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, தூத்துக்குடி, தேனி, திருச்சி ஆகிய முக்கிய தொகுதிகளின் கள நிலவரம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

தென் சென்னை

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியானது தியாகராய நகர்,விருகம்பாக்கம், மயிலாப்பூர்,சைதாப்பேட்டை, வேளச்சேரி,சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சட்டமன்ற தொதிகளை உள்ளடக்கியது ஆகும். கடந்த காலங்களில் திமுகவின் கோட்டையாக விளங்கிய தென் சென்னை கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கைவசம் வந்தது.

1996 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நான்கு முறை த. இரா. பாலு அவர்கள் திமுகவின் சார்பில் வெற்றி பெற்றார். இதுவரை தென் சென்னையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்று உள்ளன. ஆரம்ப காலங்களில் திமுகவின் கோட்டையாக இந்த தொகுதி விளங்கினாலும் கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று உள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் சி. ராஜேந்திரன் 3,08,567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட பாரதி 2,75,632 வாக்குகள் பெற்றார்.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் 4,38,404 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் டி கே எஸ் இளங்கோவன் 3,01,776 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

 

கடந்த முறை தென் சென்னையில் மக்களவை உறுப்பினராக செயல்பட்ட ஜெயவர்தன் இந்த முறையும் அதிமுகவின் சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுகவின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் என அழைக்கபடும் த. சுமதி போட்டியிடுகிறார். இவர் முன்னாள் வணிகத்துறை அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் ஆவார். முன்னாள்  பள்ளி கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இவருக்கு தம்பி ஆவார்.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் மதுரையில் உள்ள மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றார். இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று உள்ளார்.

இவருக்கும் ஜெயவர்த்தனுக்கும்  இடையில் தென் சென்னையில் நேரடியான போட்டி காணபடுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையில் வெற்றி பெற்றது ஜெயவர்தனின் பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் ஓட்டு வங்கி தென் சென்னையில் கணிசமான அளவிற்கு உயர்ந்து இருப்பது திமுகவினர் இடையே நம்பிக்கையை அதிகரிக்க செய்து உள்ளது. எது எப்படியாக இருந்தாலும் அதிமுக மற்றும் திமுக இடையில் இந்த முறை தென் சென்னையில் கடுமையான போட்டி நிலவும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

மத்திய சென்னை

மத்திய சென்னையின் திமுக வேட்பாளராக மீண்டும் நிறுத்தபட்டு உள்ளார் தயாநிதி மாறன் அவர்கள். இதற்கு முன் மூன்று முறை மத்திய சென்னையில் போட்டியிட்டு உள்ள தயாநிதி மாறன் அவர்கள் இரண்டு முறை வெற்றியும் ஒரு முறை தோல்வியும் அடைந்து உள்ளார். தயாநிதி மாறன் லயோலா கல்லூரியில் பொருளாதார பட்டம் பெற்று உள்ளார்.

2004 ஆம் ஆண்டில் முதல் முறையாக மத்திய சென்னையில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 61.68 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த பாலகங்கா 35.52 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார்.2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 46.82 சதவீத வாக்குகள் பெற்று மத்திய சென்னையில் மீண்டும் வெற்றி பெற்றார் தயாநிதி மாறன். இவரை எதிர்த்து போட்டியிட்ட முஹமது அலி ஜின்னத் 41.34 சதவீத வாக்குகள் பெற்றார்.

 

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்து திமுக வேட்பாளர்களும் தோல்வி அடைந்த நிலையில் இவராவது வெற்றி பெறுவாரா என திமுக தொண்டர்கள் எதிர்பார்த்த போது இவரும் தோற்று போனது  ஒரு கதை. சதவீதபடி திமுகவின் ஒட்டுவங்கி மத்திய சென்னையில் குறைந்து வருவது கூர்ந்து கவனிக்கதக்கது. ஆனால் அனைத்து பலமும் உள்ளதால் தயாநிதிமாறன் இந்த தடவை கண்டிப்பாக வெற்றி பெறுவார் என அவரது கட்சியினர் நம்புகின்றனர்.

இந்த முறை அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு  மத்திய சென்னை ஒதுக்கபட்டு உள்ளது. மத்திய சென்னையில் பாமகவின் வேட்பாளராக சாம்பால் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாமகவின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ஆவார். சென்ற முறை திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதியதால் பரபரப்பாக மத்திய சென்னை காணப்பட்டது. ஆனால் இந்த தடவை திமுகவை எதிர்த்து பாமக போட்டி இடுவதால் எந்த அளவிற்கு போட்டி இருக்கும் என சொல்ல இயலவில்லை.

 

தொகுதி முழுவதும் தெரிந்த முகம், கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம், பல வருடங்களாக தொகுதியை வலம் வந்து கொண்டிருப்பது, தொகுதியின் அனைத்து பகுதிகளும் அத்துபடி போன்றவை தயாநிதி மாறனின் பலங்களாக பார்க்கப்படுகிறது.ஆரம்பத்தில் இருந்த ஓட்டு சதவீதம் படிப்படியாக குறைந்து வருவது பலவீனமாக பார்க்கப்படுகிறது.

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய , அதாவது வசதியானவர்கள், நடுத்தரவர்க்கம்,படித்தவர்கள், ஏழை எளியவர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய தொகுதி மத்திய சென்னை ஆகும். மாநிலத்தின் தலைநகரமான சென்னையின் மையப்பகுதியில் இந்த தொகுதி அமைந்து உள்ளதால் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து உள்ளது. தற்போதைய தேர்தல் வெப்பத்தில் அனைவரும் வேலையை தொடங்கி விட்டனர். ஆனால் வரும் நாட்களில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என தெரிகிறது.

வடசென்னை

வடசென்னை மக்களவை தொகுதியானது திருவொற்றியூர்,ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர் மற்றும் இராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதுவரை நடந்த 16 மக்களவை தொகுதிகளில் 10 முறை திராவிட முன்னேற்ற கழகம் இந்த தொகுதியை கைபற்றி உள்ளது. அதே நேரத்தில் அதிமுக கட்சி ஆனது கடந்த மக்களவை தேர்தலில் ஒரே ஒரு முறை மட்டும் வட சென்னை மக்களவைத் தொகுதியை கைபற்றி உள்ளது.

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுகவை சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன் 2,81,055 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ கட்சியை சேர்ந்த தா. பாண்டியன் 2,61,902  வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த வெங்கடேஷ் பாபு 4,06,704 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த ஆர். கிரிராஜன் 3,07000 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த முறை நடைபெறும் தேர்தலில் திமுகவின் சார்பில் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் அவர்கள் கலாநிதி வீராசாமியை எதிர்த்து போட்டியிடுகிறார். வடசென்னை தொகுதியை பொறுத்த வரை தேமுதிக விட திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக காணப்படுகிறது.

தூத்துக்குடி

தமிழ்நாட்டில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன் என இரு பெரும் புள்ளிகள் களத்தில் இறங்கி உள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே நேரடியான போட்டி இந்த தொகுதியில் காணப்படுகிறது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியானது விளாத்திகுளம்,திருச்செந்தூர்,தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 69.13 சதவீத வாக்குபதிவும், 2014  ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 69.92 சதவீத வாக்குபதிவும் நடைபெற்றது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் ஜெயதுரை 76649 வாக்குகள் வித்தியாத்தில்  வெற்றி பெற்று மக்களவை தொகுதியின் உறுப்பினர் ஆனார். இந்த தேர்தலில் ஜெயதுரை 3,11,017 வாக்குகளும், இவரை எதிர்த்து நின்ற அதிமுகவை சிந்தியாபாண்டியன் 2,34,368 வாக்குகளும் பெற்றனர்.

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஜெயசிங் ஜெயராஜ் 3,66,052 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஜெகன் 2,42,050 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் மதிமுகவின் சார்பில் போட்டியிட்ட ஜோயல் 1,82,191 வாக்குகள் பெற்றார்.

இந்த முறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இவர் எத்திராஜ் கல்லூரியில் வணிகவியல் முதுகலை பட்டம் பெற்று உள்ளார்.2007 ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர் 2013 ஆம் ஆண்டு வரை பதவி வகித்து உள்ளார். கனிமொழி அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக தூத்துக்குடியில் கடுமையான கள பணி ஆற்றி வருகிறார்.கனிமொழியை எதிர்த்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களத்தில் இறங்கி உள்ளார். தமிழிசையும் அவரது கணவர் சவுந்தரராஜனும் தொழில்முறை மருத்துவர்கள் ஆவார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் மற்றும் அதன் விளைவாக நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஆகியவை இத்தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதே நேரத்தில் இந்த வழக்கில் வாதாடி வெற்றி பெற்ற வைகோ அவர்கள் திமுகவின் பக்கம் நிற்பது அவர்களின் பலத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது.

PTI9_27_2018_000076B

சென்ற முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் மதிமுகவில் போட்டியிட்டு 1,82,191 வாக்குகள் பெற்ற ஜோயல் திமுகவில் இணைந்து செயலாற்றி வருகிறார். கடந்த தேர்தலில் ஏழு சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சியும் இந்த முறை திமுக கூட்டணியில் இருப்பது கூடுதல் பலமாகும். திமுகவில் உள்ள அனிதா ராதாகிருஷ்ணனும், கீதா ஜீவனும் தூத்துக்குடி பகுதிகளில் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்கின்றனர்.

இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் வெற்றி  கிட்டத்தட்ட உறுதியான ஒன்றுதான். தமிழிசை சவுந்தரராஜனின் வருகை கனிமொழிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த போவது இல்லை. வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பதே தற்போதைய நிலவரம்.

தேனி

தேனி மக்களவை தொகுதியானது சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி நாயக்கனூர், கம்பம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த தொகுதியில் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆரூன் ரசீத் 6302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ஆரூன் ரசீத் 3,40,575 வாக்குகளும், அதிமுகவை சேர்ந்த 3,34,273 வாக்குகளும் பெற்றனர்.

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ரா. பார்த்திபன் 5,71,254 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த பொன். முத்து ராமலிங்கம் 2,56,722  வாக்குகள் பெற்றார்.

இந்த முறை நடைபெற இருக்கும் தேர்தலுக்கு  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தங்க தமிழ்செல்வனும், அதிமுக சார்பில் ரவீந்திரநாத்ம், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஸ் இளங்கோவனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தேனி தொகுதியில் மும்முனை போட்டி காணப்பட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கையே சற்று ஓங்கி நிற்பது போல் தெரிகிறது.

இந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை  மக்களவை உறுப்பினராக செயல்பட்டதும் கூடுதல் பலத்தை தருகிறது.

தங்க தமிழ்செல்வனும் தேனி பகுதியில் மக்கள் செல்வாக்கு  மிக்கவர் ஆவார். அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆன தங்க தமிழ்செல்வன் கட்சியின் தேனி மாவட்ட கழக செயலாளர்  ஆகவும் இருந்து வருகிறார். தினகரன் அவர்களின் சொந்த தொகுதியாக தேனி விளங்குவதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

திருச்சி

திருச்சி மக்களவை தொகுதியானது தொகுதி மறுசீரமைப்பு பணிக்கு பிறகு ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அடைக்கலராஜ் நீண்ட வருடங்களாக எம்பியாக பதவி வகித்தது இந்த தொகுதியில்தான். இவர் 1984 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நான்கு மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார். கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாண சுந்தரமும் இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்று உள்ளார். கடைசியாக நடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் அதிமுக ஆனது இந்த தொகுதியை கைபற்றி உள்ளது.

2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பி. குமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சாருபாலா தொண்டைமானை விட 4335 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பி. குமார் 2,98,710 வாக்குகளும்,சாருபாலா தொண்டைமான் 2,94,375 வாக்குகளும் பெற்றனர்.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ப.குமார் 4,58,478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த அன்பழகன் 3,08,002 வாக்குகள் பெற்றார்.  திருச்சி தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசுரும், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் டாக்டர் இளங்கோவனும் அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமானும் போட்டியிடுகின்றனர்.

மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆனந்த ராஜா என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் வினோத் ராம் என்பவரும் போட்டியிடுகின்றனர். திருச்சி மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் திருச்சி மேற்கு,புதுக்கோட்டை, திருவெறும்பூர் ஆகி தொகுதிகள் திமுக வசமும், திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம்,கந்தர்வகோட்டை ஆகி தொகுதிகள் அதிமுக வசமும் உள்ளன.

திருச்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளதால் தொழிலாளர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இடதுசாரி கட்சிகளுக்கும் திருச்சி தொகுதியில் குறிப்பிடத்தகுந்த வாக்கு வங்கி உள்ளது. தற்போது அமமுக சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமான் ஏற்கனவே இரண்டு முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உடையவர்.2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நூலிழையில் வெற்றியை தவறவிட்டார். இந்த முறை நடைபெறும் தேர்தலில் அமமுகவில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமானுக்கும், காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசுருக்கும் கடுமையான போட்டி நிலவும் என தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *