மாநில உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்து!

வைகோ அறிக்கை

மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்பு
மாநில உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்து!

சுற்றுச்சூழல் சட்டவியலில் முன்னெச்சரிக்கைக் கோட்பாடு (Precautionary principle), இடர் தடுப்புக் கோட்பாடு (Prevention principle), தவறிழைப்பவரே பொறுப்பேற்பு கோட்பாடு (Polluter pays principle), ஒருங்கிணைவு கோட்பாடு (Integration principle), மக்கள் பங்கேற்புக் கோட்பாடு (Public participation principle), நீடித்த வளர்ச்சிக் கோட்பாடு (Sustainable development principle) ஆகியவை முக்கியமானவை. ஐக்கிய நாடுகள் அவை இந்தக் கோட்பாடுகள்  உலகின் அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய கடமை படைத்தவை.

இக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இந்தியாவில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், அனைத்து மாநிலங்களிலும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் இயங்கி வருகின்றன.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாய்ப்புள்ள தொழிற் திட்டங்களுக்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய கட்டுப்பாடுகளையும், நெறிப்படுத்தல்களையும் விதித்து நிபந்தனைக்கு உட்பட்ட அனுமதி வழங்கும்.

பெருந்தொழில் நிறுவனங்களுக்கு, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களை கலந்தாலோசித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் “சுற்றுச்சூழல் அனுமதி” (Environment Clearance) வழங்கும். இந்தச் சுற்றுச்சூழல் அனுமதியில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதையும், அந்தத் தொழிற் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது என்பதையும் மாநில
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தபின்னர் அந்தத் “திட்டம் கட்டுவதற்கான அனுமதி”யை (Consent to Establish) வழங்கும். அதன் பின்னர் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ள விதம் விதிமுறைகளின்படி இருந்தால் திட்டத்தை “இயக்குவதற்கான அனுமதியை“ வழங்கும் (consent to operate). இந்தத் திட்டத்தின் மூலம், பெருந்தொழில் திட்டங்களை அனுமதிப்பதில் மாநில அரசுக்கும், மாநிலத்தில் வாழும் மக்களுக்கும் ஓரளவு கட்டுப்பாடு இருந்தது.

மாநிலங்களுக்கான அந்த உரிமையைப் பறித்தெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சுற்ற்றிக்கை ஒன்றை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் அறிவித்துள்ளது. அதில், இனி மத்திய சுற்றுச்சூழல் வழங்கும் “சுற்றுச்சூழல் அனுமதி” (Environment Clearance) மட்டுமே போதுமானது என்றும், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் “தொழிற்திட்டம் தொடங்குவதற்கான அனுமதி” (Consent to Establish) தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

நச்சுமிகுந்த கழிவுகளை வாயுவாகவோ, திரவமாகவோ, திடப்பொருளாகவோ வெளியேற்றும் ஆலைகள், அனல்மின் மற்றும் அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் தாக்கீது அறிவிக்கை 2006 இன் படி மாநில சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி அவசியம். இவை இரண்டையும் பெற்ற பின்னர் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் consent to establish என்ற அனுமதியினைப் பெற்றால் மட்டுமே திட்டத்தைத் துவங்க இயலும், துவங்கிய பின்னர்கூட ஆண்டிற்கு ஒருமுறை Consent to operate என்ற தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியைப் புதுப்பித்தால் மட்டுமே ஆலை இயங்க முடியும்.

இந்த இரண்டு அனுமதிகளின் பலத்தால் சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாத பல தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் தொழிற்சாலை சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு எளிதில் அனுமதி கிடைப்பதற்காக இந்த விதிகளைத் தளர்த்தி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கும் நிபந்தனைகளும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் நிபந்தனைகளும் ஒன்றாகவே இருப்பதால், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி அவசியமில்லையென அனைத்து மாநில அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்களுக்குக் கடிதம்மூலம் அனுப்பப்பட்ட உத்தரவில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்குத் தமிழ் மக்களின் எதிர்ப்பு காரணமாக “திட்டம் தொடங்குவதற்கான அனுமதி” (Consent to establish)-ஐ வழங்கத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு விரும்பும் தொழிற்திட்டங்களை அதன் பாதிப்புகுறித்து அக்கறை கொள்ளாமல் மக்கள்மீது திணிக்கவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநில அரசுகளை மதிக்காமல் புறந்தள்ளவும் இந்தப் புதிய திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது.

இது இந்திய அரசமைப்பு சட்டக் கோட்பாடுகளுக்கும், சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களுக்கும் எதிரானதாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒரு “அலுவலக குறிப்பு“ (office memo) மூலமாக மாற்றியமைக்க முயற்சிப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தைக் கேலிக்கு உள்ளாக்கும் செயல்.

தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலை நாசமாக்கி, தேனி மாவட்டத்தை அழிவுக்கு ஆளாக்கும் அபாயம் நிறைந்த நியூட்ரினோ திட்டத்தையும், தூத்துக்குடி நாசகார நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையையும் இயங்க வைப்பதற்கும், கார்ப்ரேட் கம்பெனிகள் விருப்பப்படி ஆலைகள் நிறுவுவதற்கும் வழிவகுத்து மத்திய அரசு எதேச்சதிகாரமான அநீதிமிக்க அறிவிப்பைச் செய்திருக்கிறது. மாநில உரிமைகளை அடியோடு பறித்துக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு நிரந்தர வேட்டு வைக்க மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது. இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *