போலியான எளிமையா, கம்பீரமான எளிமையா… எது சரியானது…?-

பலநேரங்களில் புதியவை நம்மை அச்சமூட்டுகின்றன. அதுவரை பார்த்திராத புதிய ஊர், அறியாத மொழி, அறிமுகம் இல்லாத முகங்கள் இப்படிப் புதியவை கண்டு அஞ்சுவது போலவே புதிய வாய்ப்புகளையும் கண்டு அஞ்சும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன்தான் வெங்கட் என்கிற வெங்கி.

கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் சந்தோஷமாய் வாழக் கற்றிருந்தான். மாநகரப்பேருந்துப் பயணம். வருடத்தில் என்றாவது ஒரு நாள் ஹோட்டலில் சாப்பாடு. இருப்பதிலேயே மிகவும் குறைவான விலையுள்ள பொருள்களைத் தேடி வாங்குதல். ஒட்டுமொத்தத்தில் வரவுக்கேற்ற செலவில் வாழ்தல் என்பதுதான் வெங்கி.

பயம்

அட, என்ன ஓர் அற்புதமான மனிதன் என்று தோன்றுகிறதல்லவா? ஆனால், அவன் நண்பர்கள் அப்படிச் சொல்வதில்லை. ‘வெங்கியின் தகுதிக்கு அவன் இருக்க வேண்டிய இடமே வேறு’ என்று அவன் நண்பர்கள் சொல்வதுண்டு. ஆனால் வெங்கி, அவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்வதேயில்லை.

வெங்கிக்கு இதுவரை நான்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. ஒவ்வொன்றும், இப்போது வாங்கும் சம்பளத்தைப்போல 10 மடங்கு அதிகம். காரணம், வெங்கியின் திறமை, பரந்த அனுபவம். அதைச் சொந்தமாக்கிக்கொள்ளத் துடிக்கின்ற நிறுவனங்கள். ஆனால், வெங்கி…

“இருக்கும் இடத்தில் சந்தோஷமாக இருக்கவேண்டும். அதேபோல, போகும் புதிய இடம் இதைவிடச் சிறப்பானதாக இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒருவேளை, இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்கிற கதையாக இருக்கலாம் அல்லவா…”

வெங்கியின் இந்த வாதத்திற்கு யார் பதில் சொல்வது. பேசாமல் இருந்துவிடுவார்கள் நண்பர்கள். ஆனால், காலம் ஒருவரை அப்படியே விட்டுவிடுமா என்ன? வெங்கி வேலைபார்த்த நிறுவனம் திடீரென்று திவால் ஆகப்போகிறதென்ற பேச்சு அடிபடுகிறது. அதிர்ஷ்டவசமாக வேறொரு நிறுவனத்திலிருந்தும் வெங்கிக்கு வேலைக்கு அழைப்பு வந்திருக்கிறது.

குழப்பம்

வெங்கி முடிவு செய்யமுடியாமல் திண்டாடினான். அப்போதுதான் அவனுக்கு மலைகிராமத்தில் இருக்கும், குருவின் நினைவு வந்தது. கிளம்பிப்போனான்.

வெங்கி போனநேரம் அவர் ஓய்வாகத்தான் இருந்தார். வெங்கியைக் கண்டதும் அன்போடு வரவேற்றார். தனது கையினால் ஒரு தேநீர் தயாரித்துத் தந்தார். வெங்கிக்கு தேநீர் தேவையாய் இருந்தாலும் சுவைக்க மனம் இல்லாதிருந்தது.

“சொல் நண்பா, என்ன இவ்வளவு தூரம்? அதுவும் தனியாக வராமல் துணையோடு வந்திருக்கிறாயே?” என்றார்.

“என்ன சொல்கிறீர்கள்… நான் எங்கே துணையோடு வந்திருக்கிறேன்?”

“சரிதான், நீ துணைக்கு யாரையோ அழைத்து வந்தாய் என்று நினைத்தேன். ஆனால், நீ பதறுவதைப் பார்த்தால் ஒரு கூட்டமே இருக்கும் போலிருக்கே?”

“குருவே, நீங்கள் சொல்வதன் அர்த்தம் நிச்சயம் எனக்குப் புரியவில்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

குரு

“அமைதி கொள் நண்பா, முதலில் உன் முகத்தில் குழப்பத்தின் ரேகை ஓடியது. சரி, குழப்பத்தைக் கூட்டி வந்திருக்கிறாய் என்று நினைத்தேன். ஆனால், தேநீரைப் பருகியபோது அதை ருசிக்காமல் அவசர அவசரமாய்க் குடித்தாய். சரி, கவலையையும் கூட்டிவந்திருக்கிறாய் என்று புரிந்தது. கடைசியாகக் கேள்வி கேட்டதும் பதற்றம் கொண்டாய். குழப்பம், கவலை, பதற்றம் என உன் நண்பர்கள் பலரையும் அழைத்து வந்திருக்கிறாய் என்று புரிந்தது. இவர்கள் எல்லாம் எப்போது ஒருவனிடம் கூட்டாய் நட்புக் கொள்வார்கள் தெரியுமா…?
குழப்பம், கவலை, பதற்றம் ஆகிய மூவரும், அவர்களின் ஆத்ம நண்பன் ஒருவன் இல்லாமல் சேர்ந்து வருவதேயில்லை” என்று சொல்லி நிறுத்தினார்.

வெங்கி அவரையே பார்த்தான்.

“அவன் பெயர் பயம். பயம், முதலில் உன்னுள் வந்ததும் மற்ற மூவரும் அழையா விருந்தினர்களாக உன்னுள் வந்துவிட்டனர். இப்போது சொல் எதற்கு உனக்குப் பயம்?”

வெங்கி தலையசைத்தான். தனக்குள்ளாக ‘பயம்’ என்று சொல்லிக்கொண்டான்.

“ஆம், பயம். காலத்தைப் பார்த்து பயம் ”

“ நண்பா, கூடாரத்துக்குள் ஒட்டகம் நுழைந்த கதை உனக்குத் தெரியும்தானே? நீ தெரியாமல் பயத்தை உன் மனதுக்குள் தலைகாட்ட அனுமதித்தால், அது கூடாரத்துக்குள்ளேயே வந்துவிடும். நீயோ அதற்குப் பாய்போட்டு படுக்க வைத்திருக்கிறாய்…” என்று சொல்லிச் சிரித்தார்.

“நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்புக் கண்டு நான் அஞ்சுகிறேன். இருப்பதைத் தக்க வைத்துக்கொள்கிறேன்.”

குரு சிரித்தார்.

தன்னம்பிக்கை கதை

“நண்பா, இருப்பதைத் தக்கவைத்துக்கொள்வது எப்போதும் சாத்தியமில்லை. வீசும் பெரிய புயலில், பெருகும் மழை வெள்ளத்தில் எதையும் தக்கவைத்துக்கொள்வது எளிதல்ல. இப்போதிருக்கும் உன் சிக்கல்கள் இன்னும் தீவிரமானால் உன்னால் எதையும் தக்க வைத்துக்கொள்ள முடியாது. வாய்ப்புகளைக் கண்டு அஞ்சுவதைப் போன்ற பிழை வேறேதுமில்லை. உன் மனதைத் திறக்க வழியில்லாமல் பயம் பூட்டிவைத்திருக்கிறது. அதைத் திறந்தால் ஒழிய வாய்ப்பென்னும் வெளிச்சம் உள்ளே புக வழியேயில்லை.

எனக்குச் சில நபர்களைத் தெரியும். அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பதவி உயர்வுகளைக்கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வேறு இடத்துக்கு மாற்றல் ஆகலாம் என்கிற பயம்தான். ஒரே இடத்தில் வாழ்வதுதான் சுகம் என்று மனிதன் நினைத்திருந்தால், பக்கத்து ஊர்கூடக் கண்டுபிடிக்கப்பட்டிருக்காது”
வெங்கிக்கு ஏதோ புரிவதுபோல இருந்தது.
“குருவே, பயத்தைவிட்டு ஒழிக்கிறேன் சரி, ஆனால், நான் எளிய, ஆடம்பரமில்லாத வாழ்வை வாழ விரும்புகிறவன். நான் ஏன் தேவைக்கு அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும். அதை நோக்கி ஓடவேண்டும்?”

“நண்பா, எளிமையைப் பற்றி நான் ஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ள மாட்டாயே… பட்டு உடை அணிய வசதியுள்ளவன், எளிய பருத்தியுடை போதும் என்று நினைப்பதன் பெயர்தான் எளிமை. பருத்தி உடையைத் தவிர வேறேதும் வாங்க வழியில்லாதவன், அதை வாங்கியுடுத்துவதன் பெயர் எளிமையில்லை. இப்போது சொல் நீ எளிமையாகத்தான் வாழ்கிறாயா…”

“குருவே, குழப்பமாக இருக்கிறது. அப்படியானால், நான் என்னதான் செய்யவேண்டும்?”

“ தேவைகளைக் குறைப்பதன் மூலம், உன் உழைப்பையும் திறனையும் மட்டுப்படுத்திக் கொள்வதேன்? ஆசைகளற்றவன் என்று உன்னை நீ உறுதியாகச் சொல்வாயானால், உன் செல்வத்தை, வருமானத்தை உன்னருகில் இருக்கும், எளியவர்களுக்கானதாக மாற்று. உன் தேவையை மிஞ்சிய வருமானத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்துகொடு. இல்லாதவர்களுக்குக் கொடுக்கக் கொள்ளை அடித்தவன் ராபின்ஹூட். அவன் ஒரு ஹீரோ. நீ கொள்ளையடிக்கவேண்டாம். உன் உழைப்பின் அளவைக் கொஞ்சம் உயர்த்தினாலே போதும். ‘பயன் மரம் உள்ளூர் பழுத்தால் என்ன ஆகும்’ என்று நீ படித்ததில்லையா? பயம் உன்னைப் போலியான எளிமையில் வைத்திருக்கிறது. அதை உதறி, கம்பீரமான எளிமையை அணிந்துகொள். மகிழ்வான எதிர்காலம் உனக்காகக் காத்திருக்கிறது” என்றார் குரு.

வெங்கிக்குப் பயம் விலகியிருந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *