எத்தியோப்பிய விமான விபத்தை அடுத்து ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை தரையிறக்க பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவும் தடை விதித்துள்ளது.
எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்யா தலைநகர் நைரோபி சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இதில் 157 பேர் பலியாயினர். இந்தோனேஷியாவின் லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். 2 விமானங்களும் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தை சந்தித்துள்ளன.
இந்நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 மாடல் விமானங்களை இயக்க இந்தியா தடை விதித்துள்ளது. இது தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போயிங் நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தரையிறக்க தடை விதித்துள்ளது.