பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராக
பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு!உயர்நீதிமன்ற உத்தரவை வைகோ அவர்கள் வரவேற்று முகநூலில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராக இருந்த
பொன்.மாணிக்கவேல் அவர்கள் இன்றுடன் பணி ஒய்வு பெறுக்கிறார். ஆனால் தற்போது உயர்நீதிமன்ற அவரது பணியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.

இந்த உயர்நீதிமன்ற உத்தரவை வைகோ அவர்கள் வரவேற்றுள்ளார்.

தமிழகத்தின் தொன்மை, கலாச்சாரம், பண்பாட்டை உலகுக்குப் பறைசாற்றும் சிலைகள் தமிழகத்தின் ஆலயங்கள் எங்கும் உள்ளன. தமிழக சிலைகளுக்கு நிகரான எழிலும், நுட்ப வேலைப்பாடுகளும் கொண்ட சிலைகள் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.

அதனால்தான் 1982-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள 9 இராமர் கோவில்களின் மூலஸ்தான சிலைகளை அமெரிக்க நாட்டில் நடைபெற்ற இந்தியத் திருவிழாவுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்த நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் நான் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தேன். பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் என் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மூத்த தலைவர் கமலபதி திரிபாதி என் இருக்கைக்கே வந்து தோளைத் தட்டிக்கொடுத்து என்னை வெகுவாகப் பாராட்டினார். என்னுடைய முயற்சியால் அந்தச் சிலைகள் அமெரிக்காவுக்கு அனுப்புவது தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆலயங்களில் உள்ள சிலைகளை இறைவனின் வடிவமாகவே மக்கள் வழிபடுகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களின் சிலைகள் கடந்த பல ஆண்டுகளில் திருடப்பட்டு, உள்நாட்டிலும், வெளி நாடுகளுக்கும் விற்கப்பட்டு வந்தன. வெளிநாடுகளின் அருங்காட்சியகங்களுக்கும் போய்ச் சேர்ந்தன.

2012-ஆம் ஆண்டு, காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவரது கடுமையான முயற்சியால் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 1146 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 17 சிலைகளைப் பன்நாட்டுக் காவல்துறை உதவியுடன் தமிழகத்துக்கு மீட்டுக் கொண்டுவந்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் 45 வழக்குகளைப் பதிவு செய்து, 47 குற்றவாளிகளைப் பொன்.மாணிக்கவேல் கைது செய்துள்ளார்.

புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவிலில் 50 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ராஜராஜ சோழன், செம்பியன்மாதேவி சிலைகளை மீட்டுக் கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு.

கலைப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி, சிலை கடத்தலில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளைக் கைது செய்தார்.

சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கச் சி.பி.ஐ.க்கு தமிழக அரசு மாற்றியதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு இரத்து செய்து, பொன்.மாணிக்கவேல் அவர்களே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவாரென ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்துத் தமிழகக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற ஆணையை அங்கீகரித்தது.

இந்தச் சூழ்நிலையில், இன்று 30.11.2018 ஆம் நாள் அன்று ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் அவர்கள் பணி ஓய்வு பெறுகிறார் என்பதால், நேற்று காவல்துறையினர் பிரிவு உபச்சார பாராட்டு விழா நடத்தினர். அதில் அனைவர் மனதையும் நெகிழச் செய்யும் வகையில் பொன்.மாணிக்கவேல் நன்றியுரை ஆற்றினார்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாகக் காவல்துறை அதிகாரி அபாய்குமார் சிங் அவர்களைத் தமிழக அரசு நியமித்தது.

திடுக்கிடும் திருப்பமாக, இன்ப அதிர்ச்சியாகச் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் மகாதேவன், நீதியரசர் ஆதிகேசவலு அமர்வு தமிழக அரசின் ஆணையை இரத்து செய்து பொன்.மாணிக்கவேல் அவர்களே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு ஆணை பிறப்பித்துள்ளது. இது வரவேற்கத் தக்க மகிழ்ச்சியூட்டும் நடவடிக்கையாகும்.

கடந்த முறை உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று மூக்கறுபட்டதை நினைவில் வைத்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்று எண்ணுகிறேன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *