
பொங்கல் திருநாளில் துயரங்கள் விலகி மகிழ்ச்சியும், வளர்ச்சியும் மலரட்டும்!
தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாளையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் கொண்டாடும் உலககெங்கும் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள்.
திருவிழாக்களின் திருவிழா என்பது பொங்கல் திருவிழா தான். தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத் தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் முதல் உறவுகள் வரை அனைவரும் ஒன்று கூடல் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு ஆகும். பொதுவாகவே திருவிழாக்கள் கடந்த கால நிகழ்வுகளையும், வெற்றிகளையும் நினைவு கூறவும், தெய்வங்களை வணங்கவும் கொண்டாடப்படுவவை ஆகும். ஆனால், பொங்கல் திருநாள் மட்டும் இயற்கையை வணங்கவும், நன்றி தெரிவிக்கவும் கொண்டாடப்படுகிறது.
இயற்கை துணை நின்றதாலும், தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததாலும் இந்த ஆண்டு சம்பா பயிர்களை வெற்றிகரமாக பயிரிட முடிந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உழவர்கள் வாழ்வில் வசந்தம் வீசும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கஜா என்ற பெயரில் புயல் தான் வீசியது. இதனால் காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அப்பாவி பொதுமக்களும் தங்களின் வீடு உள்ளிட்ட உடமைகளை இழந்து கண்ணீரில் வாடுகின்றனர்.
ஆயிரமாயிரம் வருத்தங்களும், துயரங்களும் இருந்தாலும் அவற்றுக்கு மருந்து போடும் வலிமையும், நற்குணமும் காலத்திற்கு உண்டு. எனவே, புல்லின் மீதுள்ள பனித்துளி வெயில் பட்டதும் மறைவதைப் போல புதிதாக புலரும் தைத் திங்கள் மக்களின் துயரத்தையும், வருத்தத்தையும் நீக்கும். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளர்ச்சியும், வளமும், நலமும் பொங்க வேண்டும்; நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் செழிக்க வேண்டுமென மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.