பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா நடிப்பில் ராம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பேரன்பு. படம் வெளிவரும் முன்பே பல்வேறு சர்வதேச பட விழாக்களில் பங்குபெற்ற திரைப்படம்.மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை பார்த்து கொள்ளும் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தத்ரூபமாக நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குனர் ராம்.
துபாயில் வேலை செய்யும் மம்மூட்டிக்கு மூளை முடக்குவாதத்தால் பாதிக்கபட்ட பெண் குழந்தை உள்ளது. அவரை பார்த்து கொள்ளும் மம்மூட்டியின் மனைவி ஒரு கட்டத்தில் குழந்தை சாதனாவை மம்மூட்டியிடம் விட்டு பிரிந்து சென்று விடுகிறார். அதன் பின் 14 வயதுடைய பெண் சாதனாவை வைத்து கொண்டு மம்மூட்டி படும் இன்னல்களை மன இறுக்கத்துடன் சொல்கிறது திரைப்படம்.
இது போன்ற கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பதற்கு தனி தைரியம் வேண்டும். படத்திற்க்கு தேவையான எளிமையான திறமையா நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மம்மூட்டி. சாதனாவும் முடக்குவாதத்தால் பாதிக்கபட்ட பெண்ணாகவே படத்தில் வாழ்ந்து உள்ளார். இன்னொரு தேசிய விருது அவருக்கு கிடைத்தாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை.
அஞ்சலியும் தனது கதாபாத்திரத்தை சரியாகவே செய்து உள்ளார். அஞ்சலி போன்ற சிறந்த நடிகைகளை தமிழ் திரையுலகம் ஏன் சரியாக பயன்படுத்தி கொள்வதில்லை என்ற கேள்வி படம் பார்க்கும் போது எழாமல் இல்லை. படத்தில் வரும் திருநங்கை கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு படத்தை தலைநிமிர்ந்து நிற்க செய்கிறது.யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கிறது. இயக்குனர் ராம் படங்களில் நா. முத்துகுமார் இல்லாதது பாடல்களில் தெரிகிறது. இது போன்ற சிறந்த கதையம்சம் கொண்ட படத்தை எடுத்தற்கே படகுழுவினரை பாராட்டியாக வேண்டும்.