மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரதமர் மோடி வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து அவருடைய ப்ளாக்கில் ’ஜனநாயகத்துக்காக நான்கு கோரிக்கைகள் (Four Requests For Democracy)’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில், ‘2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே உள்ளது. வாக்களிப்பது நம்முடைய முக்கிய வேலை. வாக்களிப்பது என்பது இந்த நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதைக் குறிக்கும். வாக்களிப்பதன் மூலம், இந்த நாட்டின் கனவுகளுடன் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். முதல்முறை வாக்களிப்பவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு, வாக்களிப்பதற்குமான சூழலை நாம் உருவாக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் கீழ்கண்ட கோரிக்கையை வைக்கிறேன்.
1) உடனை பதிவு செய்யுங்கள்
உங்கள் வாழ்க்கையின் பெருமையான அடையாளமாக வாக்காளர் அடையாள அட்டையை வழங்குங்கள். வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், உடனே அதற்காக விண்ணப்பியுங்கள். நீங்கள் ஆன்லைனில் www.nvsp.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க முடியும் அல்லது தேர்தல் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும். 2019-ம் ஆண்டு தேர்தல் சிறப்பானது. ஏனென்றால், 21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் முதன் முறையாக இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியும். வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத தகுதி உள்ள நபர்கள் விரைவில் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகத்தை வளப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
2)முழுமையாக சோதனை செய்யுங்கள்
தேர்தல் அலுவலகங்களில் உங்களுடைய பெயர்கள் இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள். உங்களுடைய மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் உங்கள் குறித்த விவரங்களைச் சோதனை செய்யுங்கள். ஒருவேளை உங்களுடைய பெயர்கள் விடுப்பட்டிருந்தால், உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயரை பதிந்துகொள்ளுங்கள். உங்கள் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் வரை நீங்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி நேரம் வரை காத்திருக்காமல், உடனடியாக விண்ணப்பியுங்கள்.
3)சரியாக திட்டமிடுங்கள்
வாக்குப் பதிவு நாள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனைப் பொறுத்து உங்களுடைய கோடைக்கால பயணங்களைத் திட்டமிடுங்கள். வாக்களிக்கும் நாளில், உங்கள் இடத்தில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். கோடை விடுமுறைக்கு நீங்கள் ஏதேனும் திட்டம் வைத்திருந்தால், அதனை வாக்குப் பதிவு நாளுக்கு முன்னதாகவோ, அல்லது பிறகோ திட்டமிட்டுக் கொள்ளுங்கள். சில காரணங்களால், நீங்கள் வேலை பார்க்கும் இடமும், நீங்கள் வாக்களிக்கும் இடமும் வேறு வேறு இடத்தில் இருந்தால், முயற்சி எடுத்து சென்று வாக்குப் பதிவு செய்யுங்கள். நம் நாட்டின் எதிர்காலத்துக்காக அந்த ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்.
4)அனைவரையும் அணிதிரட்டுங்கள்
உங்களுடைய குடும்பம், நண்பர்களை வாக்களிக்கக் கூறுங்கள். வாக்களிப்பதற்கு அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.. தேவைப்பட்டால், அவர்களை வற்புறுத்தி வாக்களிக்கச் செய்யுங்கள். அதிகபட்ச வாக்குப் பதிவு என்றால் வலிமையான ஜனநாயகம் என்று அர்த்தம். வலிமையான ஜனநாயகம் என்றால் வளர்ந்த இந்தியா என்று அர்த்தம். கடந்த சில தேர்தல்களில் பல்வேறு மாநிலங்களில் வாக்குப் பதிவில் சாதனை நிகழ்ந்தது. அரசியல், தொழில், விளையாட்டு, திரைத்துறையில் இருக்கும் பிரபலமானவர்கள், வாக்களிப்பதன் முக்கியத்துவம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் நான்கு கோரிக்கைகள் என்ன?
