பிரச்னையைச் அணுகக் கற்றுக்கொள்

பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்ளுக்கள்

ஒரு சமயம் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் என்ற இடத்தில், சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 29 வயது. அங்கு அவரை அறிஞர்கள், உயர் அதிகாரிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள், பண்டிதர்கள், பாமரர்கள் என்று சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள பலர் சந்தித்து உரையாடினார்கள். அவ்விதம் விவேகானந்தரைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்தவர்களுக்கிடையில், அவ்வப்போது கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இந்த உரையாடல்களின்போது சிலர் நியாயமில்லாத ஏதேனும் ஒரு கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று முரட்டுத்தனமாகப் பேசினார்கள். சிலர் தங்கள் கருத்துத் தவறு என்று தெரிந்த பிறகும், அதுதான் சரி என்று விவாதித்தார்கள். அவ்விதம் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு நாள் மனம்போன போக்கில் பண்டிதர்கள் சிலர், தங்களுக்குள் காரசாரமாக விவாதம் செய்துகொண்டிருந்தார்கள்.

அவர்களுக்குப் படிப்பினை தரும் வகையில் சுவாமி விவேகானந்தர் பின்வரும் ஒரு கதையைக் கூறினார்:

ஓர் அரசன் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது! அவர்களை எப்படி எதிர்கொள்வது? இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டான். அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும் என்றார்கள்.

தச்சர்களோ, மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். எனவே மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதைக் கேட்ட சக்கிலியர், இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை என்றனர். அப்போது கொல்லர்கள், நீங்கள் சொல்வது எதுவுமே சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும் என்று கூக்குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், நாம் பகையரசனிடம் நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பதுதான் நியாயமாகும் என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று வாதிட்டார்கள். கடைசியாக அரசாங்கப் பூஜாரிகள் வந்தார்கள். அவர்கள் அதுவரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். அவர்கள், நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்போல் பேசுகிறீர்கள்! முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது! என்றார்கள்.

 இப்படியெல்லாம் அவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில் வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்புமின்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கினான். நம்மில் பலர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம் – என்று சுவாமி விவேகானந்தர் கதையைச் சொல்லி முடித்தார். உண்மை எது? என்று நாம் சரியாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, மற்றவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவது நல்லது. ஆனால் தெரிந்து வேண்டுமென்றே வீண் வாக்குவாதங்களிலும், வீம்புப் பேச்சுக்களிலும் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல. ஒரு பிரச்னை என்று வரும்போது, அதைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான ஒரு வழியைக் கண்டறிந்து செயல்படுத்தி பிரச்னையைத் தீர்ப்பதுதான் – வெற்றி பெறுவதுதான் அறிவுடைமையாகும். இதற்கு மாறாகப் புரிந்துகொள்ளாமல் விவாதம் செய்வது, திக்குத் தெரியாத காட்டில் நுழைவது போன்றது. கொள்கைவெறி அழிவுக்குக் காரணமாக அமையுமே தவிர, ஒருபோதும் ஆக்கபூர்வமான எந்த நன்மையையும் தராது.
 ———————-சுவாமி விவேகானந்தர்——————————————————

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *