பார்டர் கவாஸ்கர் டிராபி 2018_19 ஒர் பார்வை

கிரிக்கெட் விமர்சகர், பொறியாளர் S.வீரசெல்வம்.

தமிழ்நேரலை

1996 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் டெஸ்ட் தொடருக்குப் பார்டர் கவாஸ்கர் டிராபியெனப் பெயரிடப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் பின் தொடரை இரு அணிகளும் தலா ஏழு முறை கைப்பற்றிய போதிலும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஒரு முறை கூடத் தொடரைக் கைப்பற்றவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி நவம்பர் 24 ல் அடிலேய்டு மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 12 பேர் ஏற்கனவே 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடிய அனுபவம் உடையவர்கள்.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2_0 எனத் தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய மண்ணில் தன் தலைமையில் ஒரு டெஸ்ட் வெற்றியைக் கூடக் கடைசி வரை பதிவு செய்ய முடியாத அப்போதைய இந்திய கேப்டன் தோனி கடும் நெருக்கடியில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தன் ஓய்வை அறிவித்தார். அதன் பின் கோலி தலைமையில் ஆசியாவிற்கு உள் இந்திய அணி புலியாகப் பாய்ந்தாலும் வெளிநாடுகளில் வழக்கம்போல் தடுமாறுகிறது.2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலி நான்கு சதங்களுடன் 692(சராசரி 86.5) ரன்கள் எடுத்தார். அந்தத் தொடரில் சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய முரளி விஜய் 482 (சராசரி 60.25) ரன்களும், ரஹானே 399 (சராசரி 57)ரன்களும் எடுத்தனர். அத்தொடரில் சிட்னியில் நடைபெற்ற நான்காவது போட்டியில் ராகுல் தன் முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இந்தத் தொடரில் பேட்டிங்கில் வலுவாகக் காணப்பட்ட இந்திய அணி பவுலிங்கில் முழுவதுமாகச் சோடை போனது. இந்திய அணியில் 3 போட்டிகளில் விளையாடிய சமி அதிகபட்சமாக 15 விக்கெட்களை கைப்பற்றினார். அதே தொடரில் இந்திய வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்த ஸ்டீவ் ஸ்மித் நான்கு சதங்கள் இரண்டு அரைசதங்கள் உடன் மொத்தம் 769 ரன்கள் (சராசரி 128.1) எடுத்துக் கிரிக்கெட் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். அவருக்குப் பக்க பலமாக டேவிட் வார்னர் 427 ரன்கள் (சராசரி 53.37) எடுத்தார். இவர்கள் இருவரும் பந்தைச் சேத படுத்திய விவகாரத்தில் வெளியேற்றப்பட்டது. அந்த அணிக்குப் பெறும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. தற்போது வலு இழந்து காணப்படும் ஆஸ்திரேலிய அணி இவர்களின் வருகையால் பேட்டிங்கில் வலுவடையும் என்பதால் வார்னர் மற்றும் ஸ்மிதை அணியில் சேர்ப்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அந்த அணியின் ஆருன் பின்ச், ஹெட், ஷேன் மார்ஷ், மிச்சேல் மார்ஷ் பேட்டிங்கில் தொடர்ச்சியான திறமையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. பந்து வீச்சை பொறுத்த வரை ஸ்டார்க், ஹசில் உட், சிம்மன்ஸ், லியோன் எனச் சொந்த மண்ணில் அந்த அணி வலுவாகவே உள்ளது.அதில் குறிப்பாக லியோன் 2014 ஆம் ஆண்டு தொடரில் அதிகபட்சமாக 23 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இந்திய அணி உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, புவனேஷ் குமார், பும்ரா என வேக பந்து வீச்சாளர்களையே மலை அளவு நம்பி உள்ளது. இவர்கள் கூட்டணி அசத்தும் பட்சத்தில் இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் முறையாக இடம் பெற்று இருக்கும் பிரித்வி ஷா, ரிசப் பாண்ட் ஆகியோர் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் எனப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டேவில் வரலாற்று சிறப்பு மிக்க மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடைபெறுவது குறிப்பிடதக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *