ரேஷன் கடைகளில், ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியை பழுதாக்கினால், அதற்கு காரணமான ஊழியர்கள் மட்டுமின்றி, அதிகாரிகளிடமும் அபராதம் வசூலிக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளுக்கு, ‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற கருவி வழங்கப்பட்டு உள்ளது. ரேஷன் கார்டுகளை, அந்த கருவியில், ‘ஸ்கேன்’ செய்து தான், உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.கடைக்கு அனுப்பப்படும் பொருட்கள், இருப்பு, விற்பனை உள்ளிட்ட விபரங்களை, கருவியில் தெரிந்து கொள்ளலாம். ரேஷன் ஊழியர்கள், அந்த கருவிகளை முறையாக பராமரிக்காமல், பழுதாக்கி விடுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு பாயின்ட் ஆப் சேல் கருவியின் விலை, 45 ஆயிரம் ரூபாய். கருவியை பழுதாக்கினால், அதற்கான தொகை அபராதமாக வசூலிக்கப்படும் என, ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கடைகளுக்கு சென்று, அந்த கருவிகள், முறையாக பராமரிக்கப்படுகிறதா என, ஆய்வு செய்யுமாறு, கூட்டுறவு சங்க அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், சில ஊழியர்கள், ‘கடையில் கூட்ட நெரிசலில், கருவி கீழே விழுந்து உடைந்து விட்டது’ என, தொடர்ந்து கூறுகின்றனர். அதை, அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இனி, கருவி பழுதானால், அபராத தொகையை, ஊழியர்களிடம் மட்டுமின்றி, அதிகாரிகளிடமும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.