பதாகைகள் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுங்கள்-ராமதாஸ்

தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் பதாகைகளை அமைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருத்தது. அதன் பிறகும் சாலைகளில் பதாகைகளை அமைக்கப்படுக்கின்றன. இது குறிந்து ராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்

சாலைகளை அடைத்து வைக்கப்படும் பதாகைகள் விபத்துகளுக்கு வழிவகுப்பவையாகயும், சாலைகளில் செல்லும் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை குடிப்பவையாகவும் மாறியுள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக சாலைகளை அடைத்தும், நடைபாதைகளை மறித்தும் சட்ட விரோதமாக பதாகைகள் மற்றும் கட்&அவுட்டுகளை அமைப்பது தீராத நோயாக மாறி வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துகள் நியாயமானவை. அதேநேரத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பதாகைகளை அமைக்கும் கலாச்சாரத்தை பாட்டாளி மக்கள் கட்சி வெறுக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்காக பதாகைகள் மற்றும் கட்&அவுட்டுகள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்தால் அதை கண்டித்திருக்கிறேன்.

தூத்துக்குடியில் 2007&ஆம் ஆண்டு நவம்பர் 30&ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்திற்காக அதிக எண்ணிக்கையில் பதாகைகள் மற்றும் கட்&அவுட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்கு நான் கண்டனம் தெரிவித்ததுடன், அவற்றை அகற்றினால் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று கூறிவிட்டேன். அதன்படி பதாகைகள் அகற்றப்பட்ட பிறகே பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதேபோல், புதுவையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்ற ஆணையிட்டதுடன், அவற்றை அமைத்தவர்களுக்கு தண்டம் விதித்தேன். அண்மையில் கூட சென்னை புறநகரில் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டதை அறிந்த நான் அவற்றை அகற்ற ஆணையிட்டேன். இத்தகைய கலாச்சாரத்தை பா.ம.க. ஒருபோதும் அனுமதிக்காது.

தமிழ்நாட்டில் சட்டத்திற்கு எதிரான வகையில் பதாகைகளை அமைப்பது ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தான். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரிலும், பொதுக்குழு என்ற பெயரிலும் ஆளும் கட்சியான அதிமுக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செய்த அட்டகாசங்கள் அளவிட முடியாதவை. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; பொதுமக்கள் நடைபாதைகளில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது; பல இடங்களில் பதாகைகள் சரிந்து விழுந்ததால் பலர் காயமடைந்தது; கோவையில் அலங்கார வளைவில் மோதி சரிந்து விழுந்த அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர் ரகு மீது வாகனம் மோதியதில் அவர் உயிரிந்தது உள்ளிட்ட பல சோகங்கள் நிகழ்ந்தன. ஆனாலும், ஆளுங்கட்சியின் பதாகைக் கலாச்சாரம் தடையின்றி தொடர்ந்தது.

உயிருடன் இருப்பவர்களுக்கு பதாகைகள் அமைக்கத் தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அத்தீர்ப்பை தமிழக ஆட்சியாளர்களும் மதிக்கவில்லை; அதிகாரிகளும் மதிக்கவில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக தொடர்ந்து பதாகைகள் அமைக்கப் பட்டன. அதேபோல், சென்னை அண்ணா நகரில் நடைபாதைகளை பெயர்த்தது உட்பட எதிர்க்கட்சியின் நிகழ்ச்சிகளுக்காக செய்யப்பட்ட சீரழிவுகளும் ஏராளமானவை. ஆளும் கட்சி மற்றும் ஆண்ட கட்சிக்கு அஞ்சி இத்தகைய அத்துமீறல்களைத் தடுக்க உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் தயங்குகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணை தான் பதாகைக் கலாச்சாரத்தை ஒழிக்க கிடைத்த ஆயுதமாகும். தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்படுவது போன்று உலகின் வேறு எந்த நாடுகளிலும், இந்திய மாநிலங்களிலும் இத்தகைய பதாகைக் கலாச்சாரம் கடைபிடிக்கப் படுவதில்லை. தமிழ்நாட்டிலும் அத்தகைய கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். அதற்காக உயர்நீதிமன்றத் தீர்ப்பை அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். கடந்த காலங்களில் பா.ம.க.வினர் எப்போதாவது பதாகை அமைத்திருந்தால் கூட அப்பழக்கத்தைக் கைவிட்டு, இனிவரும் காலங்களில் பாதகைகள் மற்றும் கட் அவுட்டுகள் அமைப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என ராமதாஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *