பதவி வெறி கங்குலி? நிலைக்குமா நீதி?

 

2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகின் அதிக பணம் கொழிக்கும கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கில் நடைபெற்ற சூதாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பலதரப்பு புகார்களின் காரணமாக சென்னை சூப்பர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடையும்,ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடையும் வழங்க பட்டது. 
இதனை உற்றுநோக்கிய உச்ச நீதிமன்றம் பிசிசிஐ அமைப்பில் சீர்திருத்தங்களை ஏற்படுத்த முன்னாள் நீதிபதி லோத்தா அவர்களின் தலைமையில் கமிட்டி ஒன்றைத் அமைத்தது.லோத்தா கமிட்டி பிறப்பிக்கும் பரிந்துரைகளை பிசிசிஐ கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தால் கூறப்பட்டது. நீதிபதி லோத்தா அவர்களின் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரைகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும், ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு, எழுபது வயதிற்கு மேல் யாரும் பதவியில் இருக்க கூடாது, அரசியல்வாதிகள் பிசிசிஐ யில் அங்கம் வகிக்க கூடாது, ஒருவர் இந்திய கிரிக்கெட் வாரியம் அல்லது மாநில கிரிக்கெட் வாரியத்தில் ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்தால் அடுத்த மூன்று ஆண்டுகள் கட்டாயமாக இந்த அமைப்புகளில் எந்த பதவியும் வகிக்க கூடாது போன்றவை முக்கிய அம்சங்கள் ஆகும்.
லோத்தா கமிட்டியின் இந்த பரிந்துரைகள் நிரந்தரமாக பதவிகளை விரும்பிய பிசிசிஐயின் முக்கிய புள்ளிகளை எரிச்சல் அடைய செய்தது.லோத்தா கமிட்டியின் பரிந்துரைகள் செயல் படுத்தபட்டால் சீனிவாசன் , நிரஞ்சன் ஷா போன்றவர்களும் தங்கள் மாநில கிரிக்கெட் சங்க பதவிகளை இழக்க நேரிடும் என்பதால் பரிந்துரைகளுக்கு தடையாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.முன்னாள் தலைவரும்  ஆன அனுராக் தாகூர் இந்த பரிந்துரைகளை செயல் படுத்தாமல் உச்ச நீதிமன்றத்திடம் கால அவகாசம் கேட்டு கொண்டே இருக்க ஒரு கட்டத்தில எரிச்சல் அடைந்த உச்ச நீதிமன்றம் பிசிசிஐ அமைப்பில் இருந்து அவரை வெளியேற்றியது.
அதன் பின் லோத்தா கமிட்டியின் பரிந்துரைகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்றுக்கொள்ள பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்த பரிந்துரைகளை செயல்படுத்த ஏழு பேர் கொண்ட குழுவானது பிசிசிஐ ஆல் அமைக்கப்பட்டது. ராஜீவ் சுக்லா வை தலைவராக கொண்ட இக்குழுவில் அப்போதைய பிசிசிஐ செயலாளர் அமிதாப் சௌத்ரி, பொருளாளர் அனிருத் சௌத்ரி, சவ்ரவ் கங்குலி ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர்.
2017 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐயின் செயல்பாடுகளை சிஓஏ மேற்பார்வை செய்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக கங்குலியும், செயலாளர் ஆக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் பிசிசிஐ ஆல் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிசிசிஐயின் தலைவராக பிரிஜேஷ் படேல் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சீனிவாசன், நிரஞ்சன் ஷா, ராஜீவ் சுக்லா, மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் பங்கு பெற்ற இந்த கூட்டத்தில் கங்குலி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டது அனைவரின் புருவங்களையும் உயர செய்தது.

கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தில் ஐந்து ஆண்டுகளும், ஜெய் ஷா குஜராத் கிரிக்கெட் வாரியத்தில் ஐந்து ஆண்டுகளும் பதவி வகித்த நிலையில் தான் பிசிசிஐ யின் தலைவராகவும், செயலாளர் ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கங்குலியின் தலைமையில் நடைபெற்ற பிசிசிஐ யின் 88 ஆம் ஆண்டு கூட்டத்தில் லோத்தா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிராக சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக கங்குலியும், ஜெய் ஷாவும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக பதவி வகிக்க முடியாது, கட்டாயம் மூன்று ஆண்டுகள் இடைவெளி வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும் எனவும், பிசிசிஐ செயளாலர்க்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் ஏப்ரல் 21 ஆம் தேதி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஜெய் ஷா வின் பிசிசிஐ செயலாளர் பதவி காலம் மே 7 ஆம் தேதி முடிந்த நிலையில் பிசிசிஐ கூட்டங்களில் அவர் தொடருந்து பங்கு பெற்று வருகிறார். தலைவர் சவுரவ் கங்குலியின் பதவி காலமும் ஜூலை 27 ஆம் தேதி உடன் முடிவு பெற்று உள்ளது. ஏற்கனவே பிசிசிஐ பொது மேலாளர் சாபா கரீம் , தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி பதவி காலம் முடிந்து பதவி விலகி உள்ளனர்.
நடைபெற இருக்கும் ஐபிஎல், ஆஸ்திரேலிய தொடர்களுக்கு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய கால கட்டத்தில், பிசிசிஐ புதிய தலைவரை தேர்வு செய்யாமல் 2024 ஆம் ஆண்டு வரை கங்குலி மற்றும் ஜெய் ஷாவின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ யை வளர்ச்சி அடைய செய்ய நிலையான நீண்ட நிர்வாகம் வேண்டும் எனவும் உச்ச நீதி மன்றத்தில் முதலை கண்ணீர் வடித்து கொண்டு உள்ளது.
இந்நிலையில் உச்ச நீதி மன்றத்தில் மீண்டும் மனு ஆகஸ்ட் 17 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. கங்குலி மற்றும் ஜெய்ஷாவின் பதவி காலம் நீட்டிக்க படுமா அல்லது பிசிசிஐ அமைப்பில் இருந்து உச்ச நீதி மன்றத்தால் வெளியேற்ற படுவார்களா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *