நேர்மையான ஒரு தலைவரை நியமிக்கவும்-ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 128 நாட்கள் ஆன பிறகு, “பவர்” இல்லாத லோக் அயுக்தா சட்டத்திற்கு அ.தி.மு.க அரசு இப்போது “பல்” இல்லாத விதிகளை உருவாக்கியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடிப்படை நோக்கத்தையே உருக்குலைத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், 54 மாதங்கள் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்காமல் தூங்கியது. பிறகு உச்சநீதிமன்றம் அரசின் தலையில் ஓங்கிக் “குட்டு” வைத்து, கெடு விதித்த பிறகு வேறு வழியில்லாமல் ஊழலை ஒழிப்பதற்கு எந்த ஒரு வலுவான அதிகாரமும் இல்லாத லோக் அயுக்தா மசோதாவை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் பங்கேற்று, லோக் அயுக்தா மசோதா எத்தகையை உயிரற்ற வெறும் “எலும்புக்கூடாக” இருக்கிறது என்பதை எல்லாம் விளக்கிப் பேசி மசோதாவை பேரவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தினேன்.

ஆனால் அதை ஏற்க மனமின்றி அந்த மசோதாவை தடுமாற்றத்தோடு நிறைவேற்ற முயன்ற போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளிநடப்புச் செய்து “பொம்மை” லோக் அயுக்தாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்படி அமைக்கப்பட்ட லோக் அயுக்தாவிற்கும் கூட உரிய காலத்தில் விதிகளை உருவாக்காமல், தலைவரையும் நியமிக்காமல் அ.தி.மு.க அரசு தாமதம் செய்தது. மீண்டும் உச்சநீதிமன்றம் எச்சரித்தப் பிறகு இப்போது லோக் அயுக்தா விதிகளை உருவாக்கியிருக்கிறது. ஊழல் புகார்கள் மீது ரகசிய விசாரணை நடத்த வேண்டும்; புகாருக்குள்ளான ஊழல்வாதி குறித்து பத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிவிக்கக் கூடாது; விசாரணை நடக்கும் போதோ அல்லது விசாரணை முடிந்த பிறகோ கூட அந்த விவரங்களை தெரிவிக்கக் கூடாது என்றெல்லாம் வகுத்துள்ள விதிகள் அ.தி.மு.கவில் உள்ள ஊழல் அமைச்சர்களையும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள முதலமைச்சர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவும் வகுக்கப்பட்டதாக தெரிகிறது.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கும், ஊழல் ஒழிப்பு பணியிலும் ஈடுபட வேண்டிய லோக் அயுக்தா அமைப்பு ஊழல் விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என்று கூறியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடித்தளத்தையே தகர்த்து எறியும் அ.தி.மு.க அரசின் கேடு கெட்ட நடவடிக்கை மட்டுமல்ல – ஊழலே எங்கள் வாழ்க்கையாக இருக்கும் போது நாங்கள் எப்படி அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பது போல் அமைந்துள்ளது.

ஆகவே, லோக் அயுக்தா அமைப்பிற்கு நேர்மையான ஒரு தலைவரை நியமிக்கவும், ஊழல்வாதிகள் மீது நடைபெறும் விசாரணைகள் ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக பொதுமக்களுக்குத் தெரியும்படி நடக்கவும் “ரகசிய விசாரணை” என்ற விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், லோக் அயுக்தா அமைப்பை ஒரு “காகிதப்புலி” போல் ஆக்கி காலில் போட்டு மிதிக்க நினைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *