இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நேபியரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் நியூசிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாறினர். துவக்க வீரர்கள் முன்ரோ மற்றும் குப்தில் முஹமது ஷமி பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினர். ரோஸ் டெய்லர் சாகல் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருந்த போதிலும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் வில்லியம்சன் அரைசதம் அடித்து 64 ரன்களில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
அதன் பின் களம் இறங்கிய நியூசிலாந்து வீரர்கள் யாரும் குறிப்பிடத் தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்களை கைபற்றினார். இந்திய வீரர்கள் ஷமி மூன்று விக்கெட்களையும், சாகள் இரண்டு விக்கெட்களையும், கேதார் ஜாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஆட்டம் வெயிலின் காரணமாகச் சிறிது நேரம் தடைபட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டு 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு மாற்றி அமைக்கபட்டது.
துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 24 பந்துகளில் 11 ரன்கள் அடித்து பிரஸ்வெல் பந்து வீச்சில் குப்திலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் விராட் கோலி 59 பந்துகளில் 45 ரன்கள் அடித்து பெர்குசன் பந்து வீச்சில் லாதமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 105 பந்துகளில் 6 பவுண்டரிகள் உடன் 75 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். அம்பத்தி ராயுடு 13 ரன்களுடன் களத்தில் நின்றார்.
34.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை இழந்து 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆறு ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டுகொடுத்து மூன்று முக்கிய விக்கெட்களை கைபற்றிய முகமது சமி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.