நாகப்பட்டினம் மற்றும் நாகூரில் வசித்துவரும் பொதுமக்களுக்கு இதன்மூலம் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், நெய் என்பது பாலைக் காய்ச்சி, உறைந்து தயிராகி அதன்பின் தயாரிக்கப்படுவதே நெய்யாகும். அதனை உணவாக பயன்படுத்துவது உடல் நலத்திற்கு உகந்ததாகும்.
ஆனால், நெய்யே அல்லாத ஒன்றை, பாலிலிருந்து தயாரிக்கப்படாத ஒன்றை பால் அல்லாத மூலப். பொருட்களை மற்றும் வாசனையூட்டியை கொண்டு தயாரிக்கப்பட்டதை ” கரூர் நெய் ” என்ற பெயரில் பல வணிக நிறுவனங்களில் – மளிகைக் கடைகளில் – குறிப்பாக நாகூரில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளிலும் சில்லறை விற்பனையிலும் – டின்னில் வைத்து லூஸில் அளந்து கொடுப்பதிலும் . செய்து வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்னயச் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 – லிருந்து தப்பிப்பதற்காக, உணவு பாதுகாப்பு அலுவலரின் ஆய்வின்போது ” இது விளக்கு எரிக்க விற்பனை செய்யப்படுகின்றது ” என மனசாட்சிக்கு விரோதமாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் உணவு தயாரிப்பதற்காக – குறிப்பாக புலவு சோறு மற்றும் பிரியாணிக்கு பொதுமக்கள் – சமையல்காரர்களின் ( பண்டாரிகளின் ) ஆலோசனை / கொடுக்கும் பட்டியலின்படி வாங்கித் தருகின்றனர்.
முன்பே மேற்குறிப்பிட்ட ” கரூர் நெய் ” உணவு மாதிரியாக எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டதில், குறிப்பிட்ட கரூர் நெய் பாதுகாப்பற்ற உணவு ( UNSAFE ) என ஆய்வு முடிவு வந்தது. ஆனால் – விளக்கு எரிக்க மட்டும் என குறிப்பிட்ட பாக்கெட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளதால், உணவு பாதுகாப்பு அலுவலரால் – கெடுதல் என தெரிந்தும் – சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க இயலவில்லை.
நாகூரில் உள்ள ஓர் மளிகைக் கடையில் இன்று ( 15.09.18 ) வேறு உணவு மாதிரி எடுக்கப்பட்ட நேரத்திலும் இதே நிலை ஏற்பட்டது. உணவு அல்லாத கரூர் நெய்யை உணவிற்கு என கூறி விற்பனை செய்வதாக கடைப் பணியாளர் கூறினார்.
எனவே…
நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட, நாகூர் மற்றும் நாகப்பட்டினம் பகுதி பொதுமக்கள் கரூர் நெய்யை உணவு தயாரிக்க வாங்கி உபயோகிக்க வேண்டாமெனவும், சமையற்காரர்கள் ( பண்டாரிகள் ) விசேச வீடுகளுக்கு உணவு தயாரிப்பு பட்டியல் கொடுக்கும்போது கரூர் நெய் வேண்டுமென எழுதிக்கொடுக்க வேண்டாமெனவும், உணவு விற்பனையாளர்கள் / மளிகைக் கடைக்காரர்கள் மனித உயிருக்கு கேடுவிளைவிக்கும் இதனை உணவுக்கு என அறியாமல் கேட்கும் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
சமூக ஆர்வலர்களும், மக்கள் நலன் நாடுவோரும் இதனை ஏனையோருக்கு எடுத்துக்கூற வேண்டுகின்றோம்.
குறிப்பு: உணவிற்காக விற்கப்படும் நல்லெண்ணெய், கடலையெண்ணை உள்ளிட்டவற்றிலும் இதுபோல் – விளக்கு எரிக்க / வெளி உபயோகத்திற்கு என பாக்கெட்டில் அச்சடித்துவிட்டு உணவுக்கு விற்கின்றனர்.
எனவே எண்ணெய் வாங்கும்போது பாக்கெட் வெளியே அச்சடிக்கப்பட்டுள்ள குறிப்பை பார்த்து வாங்கி உபயோகிக்கவும் கேட்டுக்கொள்கின்றோம்.
” சட்டத்தால் மட்டுமே, அல்லது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளால் மட்டுமே அனைத்து குற்றங்களையும் தடுத்துவிட முடியும் ” என்ற மூடநம்பிக்கையை கைவிட்டு நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து செயல்படுவோம்.
-ஏ.ட்டீ.அன்பழகன்,
உணவு பாதுகாப்பு அலுவலர்,
நாகப்பட்டினம் நகராட்சி
செல்: 9442214055