நடிகர் ராதாரவி தன்னை பற்றி தரக்குறைவாக பேசியது குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார். அதன் விவரம் பின்வருமாறு…
“நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட கட்டாயப்படுத்த பட்டு உள்ளேன்.
முதலில், ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். என் மனப்பூர்வமான நன்றிகள்.
ராதாரவி மற்றும் அவரைப் போன்று பெண்களை இழிவாக பேசும் சிலருக்கும், உங்களையும் ஒரு பெண்மணிதான் பெற்றெடுத்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
பெண்களை தரக்குறைவாக பேசுவதன் மூலமும், அவர்கள் மீது எளிதாக பாலியல் கருத்துகளை சொல்வதன் மூலமும், இந்த மாதிரியான ஆண்கள் தங்களின் ஆண்மையை காட்டிக் கொள்கிறார்கள். பெண்களை இப்படி நடத்தும் இந்த மாதிரியான ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் வாழும் அனைத்து பெண்களை நினைத்தும் நான் மிகவும் வருந்துகிறேன்.
ஒரு மூத்த நடிகர் என்ற முறையிலும், கணிசமான அனுபவம் உடைய நடிகர் என்ற வகையிலும் ராதாரவி, இளைய தலைமுறைக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவர் ஒரு தவறான வழிகாட்டியாக நடந்து கொள்கிறார். பெண்களுக்கு இது மிகவும் கஷ்டமான காலம், பெண்கள் பொது வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் தங்களை தாங்களே நிலைநிறுத்திக் கொண்டு, தகுதியின் அடிப்படையில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். ராதாரவி போன்ற நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இல்லாத காரணத்தால், மலிவாக பேசி விளம்பரம் தேடிக்கொள்ளும் தந்திரங்களை நம்பியிருக்கிறார்கள்.
இந்த ஆணாதிக்க பேச்சுக்களில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், அவரது இந்த மாதிரியான மலிவான பேச்சுக்களை மேடையின் கீழ் இருக்கும் பார்வையாளர்கள் சிலர் கைதட்டி, சிரித்து ரசிப்பதுதான். இந்த மாதிரியான ஆபாசமான கருத்துக்களை பார்வையாளர்கள் ஊக்குவிப்பது தான். ராதாரவி போன்ற பேச்சாளர்கள் பெண்களுக்கு எதிரான நகைச்சுவையை தொடர்ந்து பேச தூண்டுகிறது. ராதாரவி போன்றோரின் நடத்தையை தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டாம் என நல்ல நோக்கம் உடைய குடிமக்கள் மற்றும் என் அன்பான ரசிகர்களை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். என்றாலும், இந்த அறிவுரையோடு நிற்காமல், ராதாரவி பெண்கள், குழந்தைகள் மற்றும் குறிப்பாக என்னை பற்றி பேசிய தவறான பேச்சுகளுக்கு எதிரான எனது கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை நான் கடுமையாக பதிவு செய்ய விரும்புகிறேன்.
கடவுள் மிகவும் கருணையோடு எனக்கு அருமையான தொழில் வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டில் என்னை மற்றும் என் நடிப்பை விரும்பும் ரசிகர்களை எனக்கு கொடுத்திருக்கிறார். எல்லா எதிர்மறையான கருத்துக்களையும், அவதூறுகளையும் தாண்டி, சீதா, பேய், கடவுள், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன். அதன் மூலம் என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கை வழங்குவதே என் நோக்கம்.
இறுதியாக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி உள் புகார் குழுவை நீங்கள் நிறுவுவீர்களா? விஷாகா வழிகாட்டுதலின்படி, உள் விசாரணையை ஆரம்பிப்பீர்களா?
மீண்டும் ஒருமுறை, இந்த எதிர்மறையான கட்டத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும்- எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி என குறிப்பிட்டு உள்ளார்.