நடிகை கஸ்தூரி  ஆதங்கம்

தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களைவிட மும்மடங்கு சம்பளம், வேலைபளுவோ குறைவு. மாணவர்கள் வெற்றிகுறித்த அழுத்தம், பொறுப்பும் கவலையும் அதினும் குறைவு. செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை நிரந்தரம். வேறு எங்கும் இல்லாத ஓய்வூதியம், அரசு விருதுகள், பயணத்தள்ளுபடி, இலவச உணவு உள்ளிட்ட சலுகைகள், அரசு செலவில் கல்வி ஆய்வு அல்லது ஆராய்ச்சி செய்ய வெளியூர் வெளிநாடு பயணம், தேர்தல் பணிக்குப் பணம், இப்படி அரசு கல்வித் துறையில் பணிசெய்வோருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன. பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு சினிமாவில் நடித்தவர்கள் கூட உண்டு.

தனியார் துறையில் நித்யகண்டம் பூர்ணாயுசு என்னும் படியாய் நாக்கு தள்ள வேலை செய்துக்கொண்டு அரசுவேலைக்காரர்களை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்க்கும் ஏமாளிகளுக்கு பெரிய சம்பளம், நிரந்தர வேலை, வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் இதெல்லாம் கனவில் கூடக் கிட்டாது. அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் பார்க்கும் பொழுது பொறாமையும் ஆற்றாமையும் வருமே தவிர நியாயமென்று தோன்றுமா? பொங்கல் விடுமுறை போனசையும் வரவில் வைத்துக்கொண்டு இனியும் வேலைநிறுத்தம், போராட்டம் என்று அரசை பிணைக்கைதியாக்குவதும் மாணவர் நலனை மறப்பதும் முறையா?

இதில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தில் ஆளும் கட்சி சார்பு ஊழியர் அமைப்புக்கள் ஈடுபடவில்லை. ஜாக்டோ ஜியோ ஆளும் அரசுக்கு எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

எங்களுக்குரிய, சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சேர வேண்டிய தொகையைத் தானே கேட்கிறோம் என்பது ஜாக்டோ ஜியோ தரப்பு வாதம். அதிலும் எத்தனை தவணை தந்துவிட்டோம் என்கிறார்கள். நியாயம்தான்; ஆனால் குறைந்தது 35,000 அதிகபட்சம் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் கல்வி தெய்வங்கள் மாணவர்கள் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் என்ன ? சரி, கோரிக்கைகளை கூட தளர்த்திக்கொள்ள வேண்டாம். ஆனால் வேலை நிறுத்தம் செய்வதால் யாருக்கும் லாபமில்லை, அனைவருக்கும் பாதிப்பு மட்டுமே. ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லவில்லையென்றால்  அரசு கஜானா நிரம்பிவிடுமா என்ன?

ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு Tidel Park இல் வேலை செய்யும் BE யை விடச் சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்? கூசாம போராட்டம் மட்டும் பண்ண தோணுது. (ஓய்வூதிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை) என நடிகை கஸ்தூரி தன் முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *