சென்னையில் 40% குழாய் நீர் நிறுத்தம்…
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் சென்னையில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவியது. தற்போது அதே நிலைமைக்கு தமிழக தலைநகரம் திரும்பிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நகருக்கு வரும் குழாய் வழி தண்ணீரில் 40 சதவிகிதம் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொய்த்துப் போன பருவமழையைத் தொடர்ந்து சென்னைக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து வந்த நீர் நிலைகள் வறண்டு போயின. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு 550 மில்லியன் லிட்டர் நீர்தான் வழங்கப்படுகிறது. ஆனால் தேவைப்படுவதோ 800 மில்லியன் லிட்டர் நீர்.
இந்த தண்ணீர் பஞ்சத்தை மேலும் கடினமாக்கும் வகையில், பல இடங்களில் சென்னை மாநகராட்சி கொடுக்கும் தண்ணீரில் துர்நாற்றம் வருவதாக கூறுகின்றனர் மக்கள். சிலர், “கழிவுநீருடன் தண்ணீர் கலந்து வருகிறது” என்று கூறி அதிர்ச்சி அளிக்கின்றனர்.