ராமதாஸ் அவர்கள் பொங்கல் வாழ்த்து!!
உழவர் திருநாளான பொங்கல் பெருவிழாவையும், தமிழ் புத்தாண்டையும் உற்சாகத்துடன் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளுக்கேற்ப தமிழர்களின் பெருமைமிகு தனிச்சிறப்புகளில் ஒன்று தான் தைப் பொங்கல் திருநாள் ஆகும். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி, மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.
தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதற்கேற்ப தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும், துயரங்களுக்கும் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தது, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து இழைக்கப்படும் துரோகம், மாநில அரசின் அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசால் அபகரிக்கப்படுவது உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் நாளாக இந்த ஆண்டு தைத்திருநாள் அமையட்டும்.
தமிழர்களின் விருப்பம் போலவே அனைத்துத் தரப்பினரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அதற்கேற்ற வகையில் தைத் திருநாளும், தமிழ் புத்தாண்டும் தமிழக மக்களுக்கு அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் விடுதலை பெற்றுத்தர வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும்.