நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில், இடம் பிடித்துள்ள பாமக-வுக்கு 7 தொகுதிகளும், தேமுதிக-வுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சென்று சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். ஒரே கூட்டணியில் அங்கம் வகித்த பின்னர் நல்லெண்ண அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் அன்புமணி ராமதாசும் உடன் சென்றனர். அத்துடன், அதிமுக அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் கோகுல இந்திராவும் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.