தென் சென்னையை கைப்பற்ற போவது யார்?

17 வது மக்களவை தேர்தல் ஆனது அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதில் தென் சென்னை தொகுதியின் நிலவரம் குறித்து தற்போது காண்போம்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியானது தியாகராய நகர்,விருகம்பாக்கம், மயிலாப்பூர்,சைதாப்பேட்டை, வேளச்சேரி,சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சட்டமன்ற தொதிகளை உள்ளடக்கியது ஆகும். கடந்த காலங்களில் திமுகவின் கோட்டையாக விளங்கிய தென் சென்னை கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கைவசம் வந்தது.

 

1996 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நான்கு முறை த. இரா. பாலு அவர்கள் திமுகவின் சார்பில் வெற்றி பெற்றார். இதுவரை தென் சென்னையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்று உள்ளன. ஆரம்ப காலங்களில் திமுகவின் கோட்டையாக இந்த தொகுதி விளங்கினாலும் கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று உள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் சி. ராஜேந்திரன் 3,08,567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட பாரதி 2,75,632 வாக்குகள் பெற்றார்.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் 4,38,404 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் டி கே எஸ் இளங்கோவன் 3,01,776 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

கடந்த முறை தென் சென்னையில் மக்களவை உறுப்பினராக செயல்பட்ட ஜெயவர்தன் இந்த முறையும் அதிமுகவின் சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுகவின் சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் என அழைக்கபடும் த. சுமதி போட்டியிடுகிறார். இவர் முன்னாள் வணிகத்துறை அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் ஆவார். முன்னாள்  பள்ளி கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இவருக்கு தம்பி ஆவார்.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் மதுரையில் உள்ள மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றார். இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று உள்ளார்.

 

இவருக்கும் ஜெயவர்த்தனுக்கும்  இடையில் தென் சென்னையில் நேரடியான போட்டி காணபடுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையில் வெற்றி பெற்றது ஜெயவர்தனின் பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் ஓட்டு வங்கி தென் சென்னையில் கணிசமான அளவிற்கு உயர்ந்து இருப்பது திமுகவினர் இடையே நம்பிக்கையை அதிகரிக்க செய்து உள்ளது. எது எப்படியாக இருந்தாலும் அதிமுக மற்றும் திமுக இடையில் இந்த முறை தென் சென்னையில் கடுமையான போட்டி நிலவும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *