தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க-வில் நேர்காணல் முடிந்து, இன்று யாருக்கு எந்தத் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க-வை பொறுத்தவரை நேற்று முதல் நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த அ.தி.மு.க நேர்காணலில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்ப மனு அளித்த பலர் வந்து கலந்துகொண்டனர். இதில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தும் கலந்துகொண்டார். அவர், முதலில் முதல்வருக்கு பூங்கொத்து அளித்து நேர்காணலில் கலந்துகொண்டார். பின்னர், அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், என் அப்பா குடும்ப அரசியலுக்கு எதிராக உள்ளார்.
தற்போது நான் அரசியலுக்கு வந்தால் எனக்கும் குடும்ப அரசியல் என்ற முத்திரை வந்துவிடுமா என என்னிடம் கேட்கிறார்கள். என் 18 வயது முதல் இந்தக் கட்சியைத் தெரியும். இதன் அனைத்து நிலைகளையும் நான் பார்த்து வருகிறேன். தற்போது எனக்கு வயது 39. சுமார் 21 ஆண்டுகளாக ஒவ்வொரு கிராமத்துக்கும், நகரங்களுக்கும் சென்றுள்ளேன். தேனி மாவட்டத்தில் உள்ளேன். அங்கு நான் போகாத வீடுகளே கிடையாது. அந்த அளவுக்கு கீழ்மட்டத்தில் இருந்து படிப்படியாக வேலை செய்து முன்னேறியுள்ளேன். என்னுடைய வயதில் நான் இவ்வளவு வேலைகள் செய்துள்ளேன் என்ற உரிமையில் இங்கு வந்துள்ளேன்.
பொதுவாக, மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும், நான் வளர்ந்த பகுதி இன்னும் முன்னேற வேண்டும் என்பதற்காகவும் சீட் கேட்கிறேன். எனக்கு சீட் கொடுத்தால், மக்கள் பணியாற்ற மிகவும் ஆர்வமாக உள்ளேன். எனக்கும் அந்த நம்பிக்கை உள்ளது. தமிழகம் முழுவதும் எப்படி ஜெயலலிதா 37 இடங்களில் வெற்றிபெற்றாரோ, அதை விட தற்போது உள்ள கூட்டணியில் 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு வெற்றிக் கூட்டணியாக உள்ளது . நான் தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர். அங்கு மட்டும் தான் போட்டியிடுவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ரவீந்திரநாத்க்கு உறுதியாக சீட் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.