
தீவனத்தை எடுத்துச்செல்ல ‘கட்டு’ இயந்திரம்!
உடுமலை:உலர் தீவனத்தை எளிதாக எடுத்துச்செல்லவும், இருப்பு வைக்கவும், ‘கட்டு’ கட்டும் இயந்திரம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், உலர் தீவன தேவைக்காக, சோளம் மற்றும் மக்காச்சோளம் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடைக்கு பிறகு, சோளத்தட்டை விளைநிலங்களில் எடுத்துச்செல்ல, விவசாயிகள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
டிராக்டர் உட்பட வாகனங்களில், உலர் தீவனத்தை எடுத்துச்செல்லும் போது, சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இயந்திரம், உலர் தீவனத்தை எளிதாக கொண்டு செல்ல உதவுகிறது.இந்த இயந்திரம், மக்காச்சோளம் மற்றும் சோளத்தட்டை உருளை போல சுற்றி, கட்டாக கட்டி விடுகிறது.
ஆட்கள் தேவை இல்லாமல், இயந்திரத்தின் மூலமே இக்கட்டுகள் நேரடியாக கட்டப்படுகிறது. இந்த முறையால், தீவனத்தை பிற பகுதிகளுக்கு எடுத்து செல்வது எளிதாகியுள்ளது.விவசாயிகள் கூறியதாவது: உலர் தீவனத்தை இருப்பு வைத்து பயன்படுத்துகிறோம்.
முன்பு, தொழிலாளர்களை அழைத்துச்சென்று, கட்டுக்கட்டி, டிராக்டரில், சோளத்தட்டை எடுத்துச்செல்வோம்.அப்போது, லோடு சரிவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். தற்போது டிராக்டர் மூலம் இயங்கும்,
இயந்திரத்தின் மூலம் உருளை போல, ‘கட்டு’ கட்டுவதால், எளிதாக மினி ஆட்டோ உட்பட வாகனங்களில், கூட, தீவனத்தை எடுத்து செல்ல முடிகிறது.மேலும், சிறிய இடத்தில் கூட அதிக தீவனத்தை இருப்பு வைக்க முடியும். இது போன்ற இயந்திரங்களை, வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, கூறினர்.